
இருந்தாலும், பிரணாப் கூறியது உண்மையா? அவருக்கு இந்தியாவின் வரலாறே தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். உலகில் எங்கெல்லாம் அடக்கு முறையும் ஒடுக்கு முறையும் நடந்திருக்கிறதோ, அங்கெல்லாம் இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்து வந்திருப்பதுதான் பாரம்பரிய நிலைப்பாடு.!
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா – சோவியத் என, உலகம் இரண்டு குழுக்களாகப் பிரிந்தபோது, இந்தியா அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்தது. அப்போதும் பிரதமர் நேரு, “பாசிசம், காலனியம், இனவெறி, ஆக்கிரமிப்பு ஆகிய வற்றை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று சொன்னார். இந்தோனேசியாவில் டச்சு அரசாங்கம் படைகளைக் கொண்டுபோய்க் குவித்தபோது எதிர்த்தார் நேரு.
இந்தோசீனா – பிரெஞ்சு காலனிப் படைகளுக்கும் வியட்நாம் புரட்சிக்காரர்களுக்கும் நடந்த போரை முடிவுக்குக் கொண்டுவர நம்முடைய நாட்டைச் சேர்ந்த கிருஷ்ண மேனனின் ஆறு அம்சத் திட்டம் பயன்பட்டது. சூயஸ் கால்வாயை எகிப்து நாட்டு உடைமை ஆக்கியபோது, பிரிட்டனும் பிரான்சும் அந்த நாட்டின் மீது படை எடுத்தன. ‘இது ஆக்கிரமிப்பு’ என்று நேரு கண்டித்தார். பெல்ஜியத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற காங்கோ உள்நாட்டுப் போரை நிறுத்தியது இந்திய ராணுவம். சீனாவை, ஜப்பான் ஆக்கிரமித்தபோது, இந்தியா கண்டித்தது.
மக்கள் சீனக் குடியரசு அமைக்கப்பட்டபோது இந்தியாதான் அதை முதலில் அங்கீகரித்தது. ஐ.நா. சபையில் மக்கள் சீனாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று வாதிட்ட நாடும் இந்தியாதான். அதே சீனா, திபெத் நாட்டை ஆக்கிரமித்தபோது இந்தியா கண்டித்தது. தலாய்லாமா ஆயிரக்கணக்கான கைதிகளுடன் இந்தியா வர அனுமதித்தது. இப்படித் தொடர்ச்சியாக ஏகாதிபத்தியத் தன்மைகளுக்கு எதிராகப் போராடிய பாரம்பரியம் இந்தியாவுக்கு உண்டு.
வங்காளதேசம் என்ற நாடு உருவானது. அமெரிக்காவையும் சீனாவையும் எதிர்த்தே எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. இந்தப்பின் புலத்தில்தான், “இலங்கையில் நடப்பது உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. அது இனப் படுகொலை” என்று இந்திய நாடாளுமன்ற த்திலேயே பிரதமர் இந்திரா அறிவித்தார். உள்ளூர்த் துப்பாக்கிகளையும், தங்களுக்கு தொரிந்த தொழில் நுட்ப அறிவுடன் தயாரிக்கப்பட வெடிகுண்டுகளையும் வைத்து சிங்கள ராணுவத்துடன் போராடிக்கொண்டு இருந்த போராளி அமைப்புகளுக்கு நவீன ஆயுதங்களையும், உயர்தரப் பயிற்சிகளையும் கொடுத்தது இந்திராதான்.
“அணு ஆயுதங்களை 2010-ம் ஆண்டுக்குள் தடை செய்ய வேண்டும்” என்று ஐ.நா. பொதுச்சபையில் பேசியவர். தென் ஆப்பிரிக்க நிறவெறியை எதிர்த்தவர். நிறவெறி கொண்ட அந்த நாட்டுடன் வர்த்தகம் கூடாது என்ற முடிவெடுத்த நாடும் இந்தியா தான். இப்படி வர்த்தகம் செய்யாத ஆப்பிரிக்க அரசுகளுக்கு உதவ ‘ஆப்பிரிக்க நிதி திரட்ட வேண்டும்’ என்று அறிவித்தவரும் ராஜீவ்தான்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து விடுதலை பெறப் போராடிய நமீபியாவின் ஸ்வாபோ இயக்கத்தை இந்தியா ஆதரித்தது. நமீபியா விடுதலை அடைந்தபோது, தான் பிரதம ராக இல்லை என்றாலும், ராஜீவ் அந்த விழாவில் பங்கேற்றார். கம்போடியாவை வியட் நாம் ஆக்கிரமித்தபோது, இந்தியா எதிர்த்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் இதற்கான முயற்சி எடுத்தார். வியட்நாம் ராணுவம் இறுதியில் வெளி யேறியது.
‘அநியாயம் எங்கே நடக்கிறதோ அங்கெல்லாம் நான் தோன்றுவேன்’ என்ற கிருஷ்ணரின் கீதா உபதேசமே நம்முடைய பாரம்பரியம். ‘சொந்தச் சகோதரர்களே தவறு இழைத்திருந்தாலும் தண்டனை கொடு’ என்று உபதேசித்தான் கிருஷ்ணன். மகாபாரதக் கதையில் மட்டுமல்ல… மகாவம்சக் கதையில்கூட நாம் பாடம் கற்கத் தயாராக இல்லை என்றால் பழியும் பாவமும் யாருக்கு?
நன்றி: ப.திருமாவேலன்,
முதன்மை செய்தி ஆசிரியர்,
ஜூனியர் விகடன்.