
காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலின் பிரசித்தி பெற்ற பிரசாதம்.
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 3 கப்
உளுத்தம் பருப்பு – 2 கப்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சுக்கு – 1 டீஸ்பூன்
தயிர் – 1 கப்
நெய் – 1/2 கப்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் இவற்றை நீரில் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
மிளகு, சீரகம், சுக்கு இவற்றை பொடியாக்காமல் ஒன்றிரண்டாகப் பொடித்துச் சேர்க்கவும்.
தேவையான உப்பு, பெருங்காயம், நெய், தயிர் இவைகளையும் மாவில் சேர்த்து நன்கு கலக்கி குறைந்தது 12 மணிநேரம் வைத்திருக்கவும்.
குக்கரில் தட்டையான குக்கர் உள்பாத்திர அடுக்குகளில் அல்லது விதவிதமான கிண்ணம், டம்ளர் போன்ற பாத்திரங்களில் நெய் தடவி மாவை அரை அளவு மட்டும் விட்டுக் கொள்ளவும்.
குக்கருக்கு வெயிட் போடாமல் இட்லி வேகவைப்பது போல் ஆனால் 45 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும். (ஒரு கத்தியை அடிவரை விட்டு வெந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு எடுக்கலாம்.)
மிளகு, சீரகம், சுக்கை அதிகம் பொடித்துவிட்டால் மருந்து வாசனை வரலாம். கரகரப்பாகப் பொடிப்பதே சரி.
விரும்பினால் முந்திரிப்பருப்பு, தேங்காயை சிறுசிறு துண்டுகளாக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
நாம் செய்யும்போது நெய்க்குப் பதில் நல்லெண்ணையும் சேர்த்துக் கொள்ளலாம்.
பூக்கள் சேகரிக்க அந்தக் காலத்தில் உபயோகிக்கும் குடலைகளில் தான் இதைக் கோயிலில் செய்வார்கள். அதனால் குடலை இட்லி என்றும் பெயர். குடலையில் சன்னமான இடுக்கு வழியாக மாவு வெளிவராமல் இருக்க உள்ளே சின்னச் சின்ன வாழையிலைகளைத் போட்டு, நெய் தடவி, அதில் மாவை அரை அளவு விட வேண்டும்.
கூன் மாதிரியான மண் பாண்டத்தில் பாதி வரை நீர் வைத்து அதில் குடலையை (குடலை தண்ணீரை இடிக்காத உயரத்தில் இருக்க வேண்டும்.) உள்ளே விட்டு கூனின் மேல்மட்ட வாயில் பொருத்த வேண்டும். பானையை மூடிவைத்து, அடுப்பில், குறைவான சூட்டில் வேகவைக்க வேண்டும். சுமார் இரண்டு மணி நேரம் ஆகலாம்.
(பிரசாதம் வெளியே ஸ்டால்களில் கிடைப்பதில்லை என்றே நினைக்கிறேன். காலை வேளைகளில் மட்டும் சொல்லிவைத்திருந்தால் கிடைக்கலாம். அடுத்த முறை செல்லும்போது, கிடைத்தால் படம் போடுகிறேன்.) எங்கள் வீட்டில் குக்கர் காலத்திற்குமுன் இந்தக் குடலையில் செய்திருக்கிறார்கள். மேல்பாகம் வாழை இலையின் அச்செல்லாம் விழுந்து, பார்க்கவே வித்யாசமாக ஆனால் சுவையாக இருக்கும். மெனக்கெடல் கொஞ்சம் அதிகம் என்று தோன்றும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
அப்படியே அல்லது இட்லி மிளகாய்ப் பொடி.