
கிட்டத்தட்ட 42 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காட்டுத்தீ, காடுகளை அழித்து வந்திருக்கிறது. எதிரிகளின் ஊடுருவலை தடுக்க அந்த காலத்தில் இராணுவத்தினர் காட்டுக்குத்தீ வைப்பதை பழக்கமாக கொண்டு இருந்தனர். மரங்கள் இருக்கும் இடங்களில் இயற்கையாகவே அதிக அளவில் சுத்தமான ஆக்சிஜன் இருக்கும். அதுவே தீ கொழுந்துவிட்டு எரியவும் காரணமாகிவிடுகிறது.
காடு தீப்பற்றிக்கொண்டு எரியும் போதே அந்தப் பகுதியில் வீசும் காற்றின் வெப்பம் 800 டிகிரி செல்சியஸ் வரை கூடும். வெப்பமான இடங்களில் இருக்கும் மரங்களின் நீர் ஆவியகிவிடுவதால், மரங்கள் எல்லாம் ஈரப்பதம் இல்லாமல், காய்ந்து விறகுக்கட்டை போல் மாறிவிடும்.
காட்டுத்தீயின் வேகம் மணிக்கு 10 கி.மீ. என்ற அளவில் இருக்கும். அதுவே புல்வெளி என்றால் 22 கி.மீ. வேகத்தில் பரவும். புயல், பெரும் காற்று வீசும் சமயங்களில் கேட்கவே வேண்டாம்.
ஆனால், காற்றின் திசைக்கேற்ப காட்டுத்தீ திசை மாறிக் கொண்டே இருக்கும் என்பதால் அது எந்த திசைகளில் எல்லாம் பரவும் என்பதையும் எளிதில் கணிக்க முடியாது. சில நாடுகளில்’சில்வர் அயோடைட்’ பொடிகளை ஹெலிக்காப்டர் மூலம் தூவி செயற்கை மழையை உருவாக்கி காட்டுத்தீயை கட்டுப் படுத்துவார்கள்.
பெருகிவரும் புவி வெப்பம் வரும் காலங்களில் அதிக அளவு காட்டுத்தீயை உருவாக்கும் என்று கணித்திருக்கிறார்கள், 2030-ம் ஆண்டு இறுதிக்குள் அமேசான் காடுகளில் 55 சதவிதம் காட்டுத்தீயால் அழிந்து போய்விடும் என்று எச்சரிக்கிறார்கள். காட்டுத்தீயை தடுக்கவும், புவி வெப்பத்தை தடுக்கவும் அதிகமான மரங்கள் வளர்பதுதான் தீர்வு. எனவே மரங்களை நடுவோம்! பூமியை காப்போம்!