காதலர்களுக்கு பிடித்த மாதம் என்றால் அது ஃபிப்ரவரிதான். அந்த மாதத்தில் தான் ‘காதலர் தினம்’ வருகிறது. காதலர்களுக்கு மட்டுமல்ல புதுமண தம்பதிகளுக்கும் அதுதான் பரவசம் தரும் மாதம்! பூக்கள் பூத்து குலுங்குவது அந்த மாதத்தில்தான்…! குளிரின் தாக்கம் குறைந்து கத கதப்பான பருவத்தை காலம் எதிர் நோக்குவதும் அந்த மாதத்தில்தான்…! அதனால்தான், ஃபிப்ரவரி மாதம் காதலுக்கு ஏற்றதாக இருக்கிறது.
புதிதாக திருமணம் முடிக்கும் தம்பதிகள் பலர் என்னிடம் ஹனிமூன் செல்ல தோதான இடம் பற்றி கேட்பார்கள். எனது வேலையே ஊர் சுற்றுவதுதான் என்பதால் இதற்கான விடையை என் மூலம் தேடுவார்கள். நானும் முடிந்த அளவு நல்ல இடமாக சொல்வேன். அந்த பட்டியலில் புதிதாக இணைந்திருக்கும் ஒரு இடத்திற்கு தான் இப்போது நான் போய்கொண்டிருக்கிறேன்.
தேனி மாவட்டத்தில் கூடலூர் பக்கத்தில் கழுதைமேடு என்ற இடம்தான் அது. அங்குள்ள‘ஹார்வெஸ்ட் ஃபிரெஷ் ஃபார்ம்’, ஹனிமூன் ஜோடிகளுக்கு மிகச் சிறந்த இடம். இயற்கை கொஞ்சி விளையாடும் இடம். பசுமையான இயற்கைக்கு காதலை தூண்டிவிடும் தன்மை இயல்பாகவே உண்டு. அதனால்தான், காதலர்கள் ஊட்டி, கொடைக்கானல் என்று பசுமையும் இயற்கையும் போட்டிபோடும் பிரதேசத்துக்கு படை எடுக்கிறார்கள். இந்த இடமும் அப்படித்தான், பசுமை பரந்து கிடக்கிறது.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதி என்பதை ஒவ்வொரு அங்குலமும் எழிலால் நிருபிக்கின்றன. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இடம் என்பதால் குளுமை குடிகொண்டிருக்கிறது.
கேரளா மாநிலம் எர்ணகுளத்தை சேர்ந்த குரியன் ஜோஸ் என்பவர்தான் இந்த இடத்தின் உரிமையாளர். பாழ்பட்டுக் கிடந்த 35 ஏக்கர் நிலத்தை வாங்கி அதனை பண்ணை சுற்றுலாவுக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைத்திருக்கிறார்.
 |
குரியன் ஜோஸ் தனது சகோதரருடன் |
விவசாயத்தை விட்டு பாரம்பரிய விவசாயிகளே வெளியே வந்து கொண்டிருக்கும்போது, ‘மெரைன் கெமிக்கல்’ பட்டம் பெற்று, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வர்த்தகம் செய்யும் ஒரு தொழிலதிபர் விவசாயத்தை தொடங்கியிருக்கிறார் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
நிலத்தை வாங்கிய உடனே அதை பண்ணைச் சுற்றுலாவாக மாற்ற வேண்டும் என்ற முடிவை எடுத்து விட்டார் செயற்கை உரங்கள் இல்லாமல், இயற்கையில் விளையும் மாதுளைகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல கிராக்கி இருப்பதை தெரிந்து கொண்ட குரியன், தான் வாங்கிய 35 ஏக்கர் நிலத்தில் 25 ஏக்கர் நிலத்தை மாதுளை செடிகள் வளர்ப்பதற்காக ஒதுக்கி விட்டார்.
இன்றைய வணிக உலகில் பெரும் ஆதரவு பெற்று வரும் ஆர்கானிக் விளைபொருட்களை மட்டுமே தனது தோட்டத்தில் விளைவிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியவருக்கு, மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு பெரும் தெம்பைக் கொடுத்து, மேலும் உற்சாகப்படுத்தியது.
மாதுளையோடு தனது விவசாய ஆசையை நிறுத்திக் கொள்ளாமல் 2,000 தென்னை மரங்கள், 1,500 தேக்கு மரங்கள், 350 தோதஹத்தி மரங்கள், 250 சந்தன மரங்கள், 100 பப்பாளி மரங்கள் என்று எல்லாவற்றையும் பயிரிட்டு அத்தனையிலும் இயற்கை முறை விவசாயத்தையே பின்பற்ற தொடங்கிவிட்டார்.
விவசாய நிலங்களில் வேறு ஏதாவது வருமானத்திற்கு வழி செய்யலாமே என்று நினைத்த போது அவர் மனதில் உருவானது தான் பண்ணைச் சுற்றுலா. இதன்மூலம் விவசாயத்தையும், நமது பாரம்பரிய முறைகளையும் சுற்றுலாப்பயணிகளுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்தார். அதன்படியே தொடங்கி விட்டார்.
கம்பம் நகரில் இருந்து குமுளி போகும் பாதையில் கூடலூரை கடந்து லோயர் கேம்புக்கு சற்று முன் வலது புறத்தில் வரும் சாலையில் திரும்பி 4 கி.மீ. பயணித்தால் குரியனின் தோட்டம் வந்து விடுகிறது.
இந்த தோட்டத்திற்கு நேரடியாக நம்மை அவர்கள் அழைத்துச் செல்வதில்லை. தோட்டத்திற்கு 2 கி.மீ. முன்பே நமது பயணம் மாட்டு வண்டிக்கு மாறி விடுகிறது. விருந்தினர்களை தனது தோட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காகவே இங்குள்ள கிராமத்தில் மாட்டு வண்டி தயாராக இருக்கிறது.
நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கலாச்சாரத்தில் வளர்ந்த இன்றைய தலைமுறைக்கு மாட்டு வண்டிப் பயணம் ஒரு வித்தியாசமான அனுபவம்தான்.
மாட்டு வண்டியில் வயல்வெளிகள் வழியாக மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம் வரை சென்று திரும்பி தோட்டத்திற்கு செல்வது மறக்க முடியாத ஒன்றாக வாழ்நாள் முழுவதும் நிலைக்கும்.
பண்ணைக்குள் வந்த விருந்தினர்களை ஸ்டார் ஹோட்டல்களில் வரவேற்பது போல் வரவேற்கிறார்கள். மலர் மாலை அணிவித்து, ஃப்ரெஷ் ஜூஸ் கொடுத்து களைப்பைப் போக்குகிறார்கள்.
இது முடிந்த பின் அறைக்குள் சிறிது நேரம் ஓய்வு. விருந்தினர்கள் தங்குவதற்கென்றே மூன்று அறைகள் இங்கு இருக்கின்றன. ஆங்கிலேயர்களின் காலனி வீடுகளை நினைவுக்கு கொண்டு வரும் விதமாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
குளியலறை கண்ணாடிகளால் மறைக்கப்பட்டுள்ளன. விருப்பம் இருக்கும் ஹனிமூன் ஜோடிகள் தங்கள் துணை குளிக்கும் அழகை பார்த்து ரசிக்கலாம். அத்தனை உயர் தொழில்நுட்பத்தில் பாத்ரூம், டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளன.
படுக்கை விரிப்புகளும் அறையின் அலங்காரமும் ஸ்டார் ஹோட்டல் அறைகளை நினைவுக்கு கொண்டு வருகின்றன. பகல் நேரத்திலும் சரி, இரவிலும் சரி, இங்கு பறவைகளின் ஒலி, இலைகள் அசையும் ஓசை மட்டுமே கேட்கிறது. இந்த இடம் அமைதி நிரம்பிய அழகான இடம் என்பதை ஒவ்வொரு நிமிடமும் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.
ஓய்வு முடிந்ததும் தோட்டத்துக்குள் ஒரு பயணம். உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து போகலாம், சைக்கிளில் வலம் வரலாம், இல்லை மாட்டு வண்டிதான் பிடித்திருக்கிறது என்றால் அதிலும் வலம் வரலாம்.
எனக்கு வழிகாட்டியாக மேலாளர் ஜான் ஜோசப் கூடவே வந்தார். விவசாயம் பற்றியும் அதன் தன்மைப் பற்றியும் விளக்கினார்.
சுற்றிலும் பசுமையான மலைகள் அரண் போல நிற்க அதன் நடுவே வயல் வெளிகள் அதன் அருகே பண்ணைத் தோட்டம் எல்லாமே இயற்கையின் கொடை. நம்மை எங்கோ அழைத்து செல்கின்றன.
மாதுளைத் தோட்டம், தென்னை மரம், பப்பாளி மரம், மூலிகைத் தோட்டம், இயற்கை உரம் தயாரிக்கும் இடம், பயோ-கேஸ், மாட்டுப்பண்ணை, வளர்ப்பு பறவைகள் என பலவற்றையும் காட்டி நமக்கு விளக்கம் கொடுக்கிறார் ஜான்.
இங்கு சமையல் கூட பயோ-கேஸ் மூலம் தான். காபி, டீ-க்கு பயன்படுத்தும் பாலும் கூட நாட்டு மாடுகளில் இருந்து ஆர்கானிக் முறையில் கறக்கப்படுபவைதான். அதனால் ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான காற்று, அமைதியான சுற்றுச்சூழல் என்று காதலர்கள் கொண்டாட இங்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
தனது தோட்டத்தில் இரண்டு காட்சி கோபுரங்களை வைத்திருக்கிறார் குரியன். அதன்மீது ஏறிப்பார்க்கும் போது கம்பம் பள்ளத்தாக்கின் முழு அழகையும், தோட்டத்தின் எழிலையும் ஒரு சேர கண்டுகளிக்க முடியும்.
இரவில் கேம்ப் ஃபயர், மியூஸிக்கல் டான்ஸ் போன்றவையும் உண்டு. தனிமையும் இனிமையும் ஒன்று சேருவதால் தேனிலவு தம்பதிகள் காதலில் கசிந்துருக ஏற்ற இடம் இது.
காதலர்களுக்கு மட்டுமல்ல. பள்ளிக்குழந்தைகள் சுற்றுலா, கார்ப்பரேட் டூர், குடும்பச் சுற்றுலா போன்ற பலவற்றுக்கும் ஏற்ற இடம் இது. ஜான் ஜோசப்பின் மொபைல் எண்: 95780 72722 தொடர்பு கொள்ளுங்கள். மறக்க முடியாத பயண அனுபவத்தைப் பெறுங்கள்.