Header Banner Advertisement

காயசித்தி யோகம் தந்த காகபுஜண்டர்


02tvpt-pilgrims1_880900g

print
 அது மலர்கள் சூழ்ந்த நந்தவனம்!

இதமான தென்றலும் மலர்களின் மணமும் ஒன்று சேர்ந்து மனதைக் கொள்ளை கொள்ளும் இயற்கை எழில் பூஞ்சோலையாக அது திகழ்ந்தது. அதன் ஊடே ஒரு ஓடை ரம்மியமாக ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஓடையில் இரண்டு அன்னப்பறவைகள் மது அருந்திக் கொண்டிருந்தன. மது போதையில் அவைகள் ஒன்றையொன்று தழுவிக் கொண்டிருந்தன. அதை சிவபெருமான் பார்த்து விட்டார். சிவனின் ஞான திருஷ்டி அந்த அன்னங்களின் மேல் பட்டதும் சிவகலையானது காக உருவத்துடன் பதித்து விட்டது.

அதன் பிறகு பெண் அன்னம் 20 முட்டைகளைப் பொரித்தது. அவை அனைத்தும் அன்னக் குஞ்சுகளாக வெளிவந்தன. 21-வது முட்டை மட்டும் சிவகலை பதிந்து காக்கைக் குஞ்சாக வெளிவந்தது. அதுவே வளர வளர தவயோகம் மிளிரும் காகபுஜண்ட முனிவராக பரிணாமம் அடைந்தது.
‘அபிதான சிந்தாமணி’யில் காகபுஜண்டரைப் பற்றி இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

காகபுஜண்டர்

கலியுக காலத்தில் உஜ்ஜயினி நாட்டில் வேதங்கள் கற்றுத் தேர்ந்த, சிவபூஜைகள் செய்து வந்த அந்தணர் ஒருவர் இருந்தார். அவரிடம் காகபுஜண்டர் சரணடைந்தார். அந்தணரும் அவருக்கு சிவ மந்திரங்களை உபதேசித்து வந்தார். காகபுஜண்டருக்கு திருமால் அடியவர்களையும் அந்த நெறியை பின்பற்றுபவர்களையும் ஏனோ சுத்தமாக பிடிக்கவில்லை.
ஆனால் அவருக்கு சிவமந்திரம் கற்றுக் கொடுத்த குருநாதரோ சிவபூஜை செய்து வந்த போதும் திருமால் மீது அபிமானமும், பற்றும் கொண்டிருந்தார்.

தனது சீடர் திருமால் அடியார்களை வெறுப்பது அந்தணருக்கு வருத்தம் அளித்தது. அது குறித்து எத்தனையோ முறை உபதேசம் செய்தும் காகபுஜண்டர் திருந்துவதாக இல்லை. மேலும் திருமால் மீது அபிமானம் கொண்டதாலே தனது குருநாதருக்கு ஏகப்பட்ட துரோகங்களை செய்து வந்தார். இத்தனை இருந்தும் தனது சீடர் மீது எந்தவித கோபமும் வெறுப்பும் கொள்ளவில்லை அந்த அந்தணர்.

ஒருமுறை மகாகாலர் ஆலயத்தில் சிவநாமஜெபம் செய்து கொண்டிருந்த போது, குருநாதர் வருவதை தெரிந்து கொண்டும், தெரியாதவர் போல் அவரை காகபுஜண்டர் அலட்சியப்படுத்தினார். இதனைக் கண்ட மகாகாலருக்கே கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. உடனே…

“அடே மூடனே! கர்வம் கொண்டவனே! குருவை மதிக்கத் தெரியாதவனே! நான் உன்னை சபிக்கிறேன். நான் உனக்கு தண்டனை தராவிட்டால் வேதமுறைகளே பாழாகிவிடும். எவன் ஒருவன் குருவிடம் அருவருப்புக் கொள்கிறானோ அவன் கோடியுகம் பூமியில் ஆழ்ந்து கிடந்து புழுப்பூச்சிகளாய் 16 ஆயிரம் பிறவி எடுத்து அல்லல் படுவான். நீ பாம்பாகக் கடவாய். பெரிய மரப்பொந்தில் சென்று விழுந்து கிடப்பாய்!” என்று சாபம் கொடுத்தார்.

இதைக் கேட்டதும் காகபுஜண்டரைவிட குருநாதர் துடிதுடித்துப் போனார். சிவபெருமானை துதித்து மன்றாடி கேட்க மகாகாலர் காட்சியளித்தார்.

“இறைவா! அறியாமல் தவறிழைத்த என் சீடனிடம் கருணை காட்டி சாப மங்களம் உண்டாக அருள் புரிய வேண்டும்” என்றார்.

“அந்தணரே! உன் சீடன் செய்த கொடிய பாவம், உனது மனித பண்பால் கருணைக்கு ஆளானது. ஆனாலும் என் சாபத்தை நான் வீணாக்க மாட்டேன். இவனுக்கு ஆயிரம் பிறவிகள் உண்டு. இருந்தாலும், பிறப்பாலும் இறப்பாலும் வரும் பொறுக்க முடியாத துன்பங்கள் இவனைத் தீண்டாது. எந்த பிறவியிலும் இவனது தத்துவ ஞானம் குறையாது. காகபுஜண்டனே! இனிமேலாவது ஞானியரை மதிக்காமல் நடந்து கொள்வதை மாற்றிக் கொள்! இனி உன் உள்ளத்தில் ராம பக்தி மலரும்!” என்று கூறி மறைந்தார்.

அதன்பின் காகபுஜண்டர் விந்திய மலையில் மலைப் பாம்பாக வாழ்ந்து உயிர் நீத்தார். உடைகளை மாற்றுவது போல் பிறவிமேல் பிறவி எடுத்து பல பிறவிகளைக் கண்டு விட்டார்.

ஒரு சமயம், சதுரகிரி மலையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். காகபுஜண்டர். அப்போது போகர் முனிவரிடம் முதன்மை சீடர்களாக தன்மார்த்தன், சீவலன், சதுர்புஜன், தின்மதியன், கொற்றவன் என்ற ஐந்து சீடர்கள் இருந்தார்கள், இவர்கள் காகபுஜண்டரின் ஆசி பெறுவதற்காகவே அவரது ஆசிரமத்துக்கு அருகே குடில்களைப் போட்டு வசித்து வந்தனர்.
ஒரு நாள், அந்த சீடர்களில் சிறியவனான கொற்றவன் தனது அண்ணன்களுக்கு காய், பழங்களை உணவாக உண்பதற்காக கொண்டு வரச் சென்றான். அப்போது அந்த காட்டுக்குள் பலாப்பழம் வாசனை மூக்கைத் துளைத்தது. சற்று தொலைவில் ஒரு பலா மரம் இருந்தது. அதில் ஒரு பலாப்பழம் வெடித்து தேன் வழியும் சுளை பிதுங்கி இருந்தது. ஆசையோடு நெருங்கி அதை எடுத்து சுவைத்தான்.

மறுகணமே கண்கள் இருட்டிக் கொண்டு மயக்கம் வந்தது. ஆசிரமம் அந்த இடத்தில் இருந்து வெகு தொலைவு இருந்தது. கண்டிப்பாக நடந்து போக முடியாது. இது ஏதோ விஷக்கனிதான். இனி உயிர் பிழைக்க முடியாது. இறப்பதற்கு ஒன்றும் பயமில்லை. ஆனால் தன்னை தேடி வரும் அண்ணன்கள் இந்த பலாப்பழத்தை சாப்பிட்டு அவர்களும் இறந்து விட்டால்… என்ன செய்வது? வேக வேகமாக ஒரு மரக்குச்சியை எடுத்து மண்ணில் எழுதினார்.

“அண்ணன்களே! இந்த மரத்தில் இருக்கும் பலாச்சுளையை பறித்து உண்டேன். உடனே மயக்கமானேன்! இனி நான் பிழைப்பது கடினம். இந்த கனியை யாரும் உண்ண வேண்டாம். எச்சரிக்கை!” என்று எழுதி வைத்தான் உடனே மண்ணில் சாய்ந்தான்.

சற்று நேரத்தில் அண்ணன்கள் அங்கு வந்தனர். மணலில் எழுதியிருப்பதை படித்தனர், அதிர்ச்சியுற்றனர். உடனே கொற்றவனின் உடலை பாதுகாப்பாக இலை சருகுகளைக் கொண்டு மூடினர். உடலுக்கு காவலாக ஒரு சகோதரனை மட்டும் விட்டுவிட்டு மற்ற மூவரும் வேகவேகமாக காகபுஜண்டரிடம் சென்றனர். நடந்த எல்லாவற்றையும் கூறினர்.

“வருந்தாதீர்கள் வாலிபர்களே! நன்றாக பழுத்து வெடித்த அந்த கனியின் வாசனையால் ஈர்க்கப்பட்ட ஒரு நாகம் ஒன்று அந்த தேன் சுளை மீது வாய் வைத்திருக்கிறது. அந்த நேரம் பார்த்து காற்று வீசித் தொலைய பலாக்கனி அசைந்திருக்கிறது. உடனே அந்த நாகம் தனக்கு ஏதோ ஆபத்து என்று நினைத்து அந்தக் கனியை தீண்டி தன் விஷத்தை அதனுள் பாய்த்து விட்டது. அதை உங்களது தம்பி சாப்பிட்டதால் மூர்ச்சையாகி விழுந்து விட்டான்.”

“சுவாமி, நீங்கள் தான் எங்களின் சகோதரனைக் காப்பாற்ற வேண்டும்”.

காகபுஜண்டர் தனக்கு அருகில் இருந்த நாகதாலி மூலிகையை எடுத்து அதில் மந்திரம் ஓதிக் கொடுத்தார்.

“இந்த மூலிகையை நன்றாக கசக்கி அதன் சாறை கொற்றவனின் தேகமெங்கும் தடவுங்கள். எல்லாம் சரியாகி, தெளிர்ச்சியோடு எழுவான்” என்றார். அப்படியே அவர்களும் செய்தனர், கொற்றவனும் எழுந்து வந்தான்.

மகிழ்ச்சியோடு மீண்டும் காகபுஜண்டரிடம் வந்த ஐந்து சகோதர்களும் அவருக்கு நன்றியினைக் கூறி, “குருதேவரே! தாங்கள் மரணம் இல்லாமல் வாழும் ரகசியத்தை நாங்களும் அறிந்து கொள்ளலாமா?” என்று கேட்டனர்.

காகபுஜண்டர் ரகசியத்தை கட்டிகாத்துக் கொள்பவரில்லை. சீடர்கள் கேட்டவுடன், கற்பக மூலிகைகள் மற்றும் இறவா வரம் குறித்த ரகசியங்களை சொல்லலானார், “இந்த சதுரகிரி மலையில் உள்ள மகாலிங்க மூர்த்தியின் கோவிலுக்கு வடக்கே ஒரு நாழிகை நேரம் நடந்து போனால் முண்டக வனம் ஒன்று தென்படும். அந்த வனத்தின் வடமேற்கு மூலையில் முண்டக மரம் ஒன்று உண்டு. அந்த மரத்தின் இலைகள் ஆலமர இலைகளைப் போல சிறியதாக இருக்கும். காய்கள் பார்ப்பதற்கு கல்லத்திகாய் போல இருக்கும். அந்த மரத்தை லேசாகத் தட்டினாலே பால் கசிந்து வரும். அந்தப்பாலை அரைக்காற்படியாக எடுத்து முப்பது நாட்களுக்கு சாப்பிட்டால் மூர்ச்சையாகி விழுந்து விடுவீர்கள். அப்போது அருகில் ஒருவர் இருந்து பசுவின் பாலை சுண்டக் காய்ச்சி, அதில் தேன் விட்டு அடிக்கடி, ஒரு கரண்டி வீதம் கொடுத்துக் கொண்டே வரவேண்டும். இப்படி செய்தால் மூர்ச்சை தெளிந்து விடும்.

மூர்ச்சை தெளிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உடலில் இருந்து சட்டை போன்று தோல் கழலும், அப்போது தேகம் பொன்னிறமாக மின்னும். மலஜலம் வெளியேறும். பின்பு தேகம் காய சித்தியாகும்” என்று சொல்லி முடித்தார். சீடர்கள் அவரை கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தனர். காகபுஜண்டரிடம் காயசித்தி யோகம் அறிந்து இறவா நிலை பெற்ற தாங்கள் பாக்கிவான்களே என்று சகோதர சீடர்களுக்கு பெருமிதம் ஏற்பட்டது.