
அவர்களின் சகாப்தம் முடிந்ததும், அவர்களுடைய ரசிகர் மன்றங்களின் செயல் பாடுகள் தானாகவே காலாவதியாகி விடுகின்றன. அவர்களுடைய சிம்மாசனத்தை அடுத்துவரும் நடிகர்கள் பிடித்து விடுகின்றனர். அதுபோலத்தான் அரசியல்வாதிக ளின் சாதனைகளும். அவர்களின் சாதனைகள், அவர்கள் காலத்துக்குப் பின்னர் பிறந்தநாளிலும், நினைவுநாளிலும் மட்டுமே நினைவு கூறப்படுகின்றன.
அவர்களுடைய சாதனைகளையும், புகழையும் அடுத்த தலைமுறை அரசியல் வாதிகள் மறைத்து விடுகிறார்கள். கட் – அவுட்களிலும், சுவரொட்டிகளிலும் கூட அவர்களுடைய புகைப்படங்கள்,அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளின் பிரமாண்ட படங்களின் கீழ் அஞ்சல்தலை அளவுக்கு இடம் பெறுகின்றன. இது காலத்தின் கட்டாயமாகக் கூட இருக்கலாம்.
மாறாக, எழுத்தாளர்களின் புகழ் காலம் கடந்தும் பேசப்படுகிறது. அவர்களுடைய சிம்மாசனம் யாராலும் அசைக்கப்படுவதில்லை. பல நூல்களையும், காவியங்களையும் தங்கள் அறிவுத்திறனால் படைக்கும் அவர்கள் யாருக்கும், எதையும் விட்டுத்தர வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.
அறிவால் இந்த சாதனை படைக்கப்பட்டு வருவதால், யாரும் அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக எதையும் பறித்துவிட முடியாது. வாரிசுரிமை எழுத்துலகில் இல்லை. இதில் சாதனை படைக்க வேண்டுமானால், தங்கள் அறிவை மேம்படுத்திக் கொண்டு தாங்களாகவேதான் புகழ்பெற முடியும்.
இசைத்துறைக்கும் இதே சிறப்பு உண்டு. ஆனால், பண்டைய இசை மேதைகளின் பாடல்களை, இசையை நாம் இப்போது கேட்க முடிவதில்லை. 20-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியால் வராலற்றின் அண்மைக் காலங்களில்தான் இசையைப் பதிவு செய்து பாதுகாத்து வைக்க முடிந்திருக்கிறது. ரசிக்க, கேட்க முடிகிறது.
அதேவேளையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் படைக்கப்பட்ட காவியங்கள், புராணங்கள், இலக்கியங்கள் நம் கைகளில் பத்திரமாக இருக்கின்றன. இதனால் எழுத்தாளர்களுக்கு பல ஆயிரம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புகள் உள்ளன. பண்டைய பேச்சாளர்களின் சொற்பொழிவுகளை, அவர்களுடைய மாணவர்கள் நூல்களாகப் படைத்து வைத்திருப்பதால் எழுத்தாளர்களுக்கு இருக்கும் அதே சிறப்புகளைப் பேச்சாளர்களும் பெற்றுள்ளனர்.
எழுத்து, இலக்கியம், கவிதை என்பதெல்லாம் பண்டிதர்களுக்குத்தான் என்ற சித்தாந்தம் 19-ம் நூற்றாண்டு வரை இருந்தது. 20-ம் நூற்றாண்டில் மரபுக் கவிதையை மாற்றி புதுக்கவிதையைப் படைத்ததன் மூலம் மகாகவி பாரதி, பாரதி தாசன் போன்றவர்கள் அந்த சித்தாந்தத்தை உடைத்தெறிந்தனர்.
அதேவேளையில் வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும், கௌரவமும் தமிழ் எழுத்தாளர்களுக்கு தற்போது கிடைப்பதில்லை. அவர்களுடையப் படைப்புகள் விருதுகளை பெற்றாலும், பாராட்டுதல்களுக்குப் பதில் விமர்சனங்களே அதிகம் செய்யப்படுகின்றன. இந்நிலை மாறவேண்டும். ஏற்கனவே எழுத்துப் பணியில் சாதித்தவர்கள், புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் சமுதாயத்துக்கு நல்ல படைப்புகள் கிடைக்கும்.
கம்பர், திருவள்ளுவர், தொல்காப்பியர், பாரதி, பாரதிதாசனைப் போல காலம் கடந்து தன்னுடைய படைப்புகள் உலகத்துக்குப் பயன்பட வேண்டும்; பேசப்பட வேண்டும் என்னும் எழுத்தாளர்கள் அவர்களுடைய வாழ்வையும், எழுத்தையும் ஒன்றாக்கிக் கொள்ள வேண்டும். இதை அடியொற்றி சிறந்த படைப்புகளைப் படைத்தால், இக்கால எழுத்தாளர்களும் காலம் கடந்து வாழலாம் என்பது நிச்சயம்.