
அதனால் மக்களே…உழைத்து வாழுங்கள்…உண்மையாய் வாழுங்கள்… சமூகத்திற்கு சேவை செய்ய எந்த காவி உடையும்…ஜடா முடியும்…விபூதி பட்டையும் தேவையில்லை… எல்லா மனிதரையும் மதியுங்கள்…அது போதும் இறை நம்பிக்கைக்கு!

இன்று கதவைத்திற காற்று வரட்டும் என்பான். இன்னொருத்தன் நான்தான் அவதாரம் என்று சொல்லுவான். இன்னொருத்தன் மாஜிக் பண்ணுவான். மக்கள் அதை நம்புவார்கள். பணத்தை வாரி இறைப்பார்கள். வாழ்க்கைத் தத்துவம் என்பான், அன்பு செலுத்துங்கள் என்பான் இதில் மயங்கி போவார் கள். இதைத்தானே பத்தாம் ஆண்டு சமயப்புத்தகத்திலும் சொல்லியிருக்கி றார்கள்.
இத்தனை சொன்னாலும் போலிகளை நம்பி ஏமாறும் கூட்டம் இருக்கத்தானே செய்கிறது. போலிச்சாமிகளிடம் மக்கள் போகத்தானே செய்கிறார்கள். அரசாங்கமும், காவல்துறையும் என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. அவர்களை சொல்லிக்குற்றமில்லை, அவர்கள் போலிகளைக் கைது பண்ணவோ ஏன் விசாரணைகூட செய்யமுடியாதபடி மேலிடத்து அதிகாரிகள் காவல் துறையின் கைகளை கட்டிப் போடுகிறார்கள்.
அப்படி அதிகாரம் கிடைத்தாலும் ஏதாவது தவறுதலாக நடந்துவிட்டால் மதக்கலவரம் வந்துவிடுமோ என்ற பயம். இவற்றுக் கெல்லாம் ஒரே தீர்வுதான் இருக்கிறது. மக்கள் திருந்தணும் அல்லது போலிகள் திருந்தணும். போலிச்சாமிகள் திருந்துவது சாத்தியமல்ல. மக்களே மனிதனை வணங்குவதென்றால் தாய் தந்தையை வணங்குங்குள். கண்ட கண்ட கேவலங்களை அல்ல.
இன்றைய சாமியார்கள் எனப்படுவார்கள் யார் ? தனது பலவீனத்தை முற்றிலும் மறைக்கத் தெரிந்தவர்களே சாமியார்களாக உலா வருகிறார்கள். அதனால்தான் உதறித்தள்ளாத, வெறுமனே முற்றிலும் மறைத்து வைக்கப்பட்ட அவர்களுடைய பலவீனங்கள் ஏதோ ஒரு கட்டத்தில் எப்படியாவது வெளியாகிவிடுகின்றது.
இந்த பலவீனத்தை மறைக்கத்தான் அந்த, சாமியார்கள் தனி மனிதனாக நின்று போதிக்காமல் ஆசிரம், ஏ.சி., விமானம், பாதுகாவலர்கள், சிஷ்யர்கள் என்று ஒரு நிறுவனமாக மாறிப் போகின்றார்கள். எல்லாவற்றுக்கும் விலை வைக்கின்றார்கள்.
விவேகானந்தர் மறைந்து 70 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னமும் அவர் கேட்ட எதற்கும் சித்தமான, புகழை விரும்பாத நூறு இளைஞர்கள் உருவாகவில்லை. அவர்கள் உருவாகியிருந்தால் போலி சாமியார்கள் உருவாக மாட்டார்கள். புழுக்களும், கொசுக்களும், கிருமிகளும் அசுத்தமாக இருக்கும் சாக்கடையில் இருந்தே உருவாகின்றன இதே வழிதான் நவீன கால சாமியார்களின் பிறப்பும்.!
லோக குரு என்று சொல்லப்பட்ட காஞ்சிபுரத்து ஆசாமி ஒருவர் வழக்கில் சிக்கவில்லையா? பெண்கள் விசயத்தில் ஆகட்டும் எவ்வளவு அசிங்கம்! ஆனாலும் அந்த ஆசாமி பெரிய மனுசராக பவள விழா கொண்டாடிக் கொண்டு வீதி உலா வந்து கொண்டுதானே இருக்கிறார்?
இயற்கையை அல்லது இயற்கை உண்டாக்கிய உணர்வுகளை வென்றுவிட்டேன் என்று சொல்பவர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒருவர் மகா…மகா…மகாத்மாவாக இருக்க வேண்டும். இல்லை மகா ஃபிராடாக இருக்க வேண்டும். பொதுவாக இந்த இரண்டாவது வகை ஆசாமிகள் தான் அதிகம்.
மனிதனாகப் பிறந்தவன் தன் உடலின் இச்சைகளை தற்காலிகமாக வேண்டுமானால் ஒத்திப் போடலாம். அல்லது எஸ்க்பைரி ஆகிவிட்ட பிறகு சுவாமிஜி வேடம் போடலாம். அதிகபட்சம் அவ்வளவுதான்¢ முடியும். தனக்கு பின்னால் செயற்கை ஒளிவட்டத்தை பொருத்திக் கொண்டு ஊரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பார்க்க சுவாமிஜி பதவி வேண்டுபவர்கள், உபதேசம் செய்வதற்கு பிரம்மச்சரியமோ, இந்திரியங்களை அடக்கிவிட்டதன போலிப் பெருமையோ, கண்கட்டி வித்தைகளோ தேவை யில்லை. நேர்மை, ஒழுக்கம் மட்டும்தான் வேண்டும்.
எத்தனையோ சாமியார்கள் நன்கு ஆண்டு அனுபவித்து, உலகின் கள்ளம் மனங்கள் அத்தனையிலும் கரை கண்ட பிறகு, ஓய்ந்து போய் இளைஞர் களுக்கு உபதேசம் செய்வதைப் பார்க்கலாம். இவர்கள் சாதாரண மனிதனாக இருந்துவிட்டு போகவேண்டியதுதானே? ஏன் இந்த கபடத் தனம்.? சாமியார் தொழிலை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு சாமியாரையும் விசாரணைக்கு உட்படுத்தி குற்றங்களின் அடிப்படையில் கடும் தண்டனையைக் கொடுக்க வேடண்டும். இல்லாவிட்டால் நீங்களும் நானும் மாறாத வரை நாட்டில் ரமணிகளும், பிரேமானந்தா, ஜெயேந்திரர், நித்தியானந்தர் போன்ற கசடுகள் உருவாவதை தடுக்கமுடியாது. எச்சரிக்கை!
பழைய சாமியார்களும், மாடர்ன் வேதாந்திகளும், கம்ப்யூட்டர் கள்ளச் சாமிகளும், தங்கக் கோபுரம் கட்டி ஈயத்தை விட இளித்துப் போய்கிடக்கும், ஒழுங்கீனங்களை கொண்டவர்கள் நமக்கு வேண்டாம். நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வேண்டவே வேண்டாம்! புரிந்து கொள்ளுங்களேன்…!