பொதுவாக வாழ்க்கையோடு ஒன்றிய நிகழ்ச்சிகளை தரும் சேனல்களை நான் விரும்பி பார்ப்பதுண்டு. நேஷனல் ஜியோகரபி சேனல், டிஸ்கவரி சேனல், ஹிஸ்டரி சேனல், டிராவல் எக்ஸ்பி என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த பட்டியலில் இப்போது ஒரு புது சேனலும் இணைந்துவிட்டது. இது கடந்த ஜூலை 6-ந் தேதி முதல் ஒளிபரப்பாகிவருகிறது. அந்த சேனலின் பெயர் ‘ஃஎப்ஒய்ஐ டிவி18’.
ஏ + இ நெட்வொர்க்ஸ் மற்றும் டிவி18 என்ற இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த சேனலை தொடங்கியுள்ளன. டிவி18 ஏற்கனவே சிஎன்பிசி, ஹிஸ்டரி போன்ற சேனல்களை இந்தியாவில் ஒளிபரப்பி வருகிறது. ஏ + இ நெட்வொர்க்ஸ் நிறுவனம் யுனிவர்சல் சேனல், ஹால்மார்க் சேனல், சயின்ஸ் ஃபிக்ஷன் சேனல் ஆகிய சேனல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த இரண்டு ஜாம்பவான்களும் இணைந்து ஆசிய குடும்பங்களுக்கான பொழுதுபோக்கு சேனலாக
‘ஃஎப்ஒய்ஐ டிவி18’-யை புதிதாக தொடங்கியுள்ளனர்.
ஃஎப்ஒய்ஐ டிவி18 -யின் ப்ரொமோ வீடியோ
[youtube https://www.youtube.com/watch?v=gIcUutkpNSs?feature=player_embedded]
ஆங்கில சேனல்களில் பொதுவாக வெளிநாட்டு முகங்களையே பார்க்கமுடியும். அதிகமாக வெளிநாடுகள் பற்றிய நிகழ்ச்சிகளே இருக்கும். ஆனால், இந்த சேனலில் பெரும்பாலும் இந்திய முகங்கள்தான். நிகழ்ச்சிகளும் இந்திய குடும்பங்களைப் பற்றியதுதான். இந்திய குடும்பங்களை சர்வதேச தரத்தில் பார்ப்பது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நிகழ்ச்சிகளும் வித்தியாசமாக இருக்கின்றன.
‘ரியல் 2 ஸ்டேட்ஸ் கப்புள்ஸ்’
பிரபல எழுத்தாளர் சேட்டன் பகத் ஒரு பஞ்சாபியாக இருந்தாலும் ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்துகொண்டவர். அவர்களுக்கிடையே ஏற்பட்ட காதலை அடிப்படையாக வைத்து ‘2 ஸ்டேட்ஸ்’ என்ற நாவலை எழுதியவர். அவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியின் பெயரே ‘ரியல் 2 ஸ்டேட்ஸ் கப்புள்ஸ்’ என்பதுதான்.
ரியல் 2 ஸ்டேட்ஸ் கப்புள்ஸ்
[youtube https://www.youtube.com/watch?v=OA6uF9P9HTM?feature=player_embedded]
இரண்டு வெவ்வேறு காலாச்சாரங்களையும் பழக்கவழக்கங்களையும் கொண்ட இருவர் அந்த குடும்பங்களில் தங்களை எப்படி இணைத்துக் கொள்கிறார்கள் என்ற உண்மை கதைகளை பாரம்பரிய பெருமை குலையாமல் அற்புதமான படப்பிடிப்பில் உணர்வுப்பூர்வமாக சுவையாக சொல்கிறார்கள்.
‘ரைவல்ஸ் இன் லா’
அதேபோல் நமது இந்திய குடும்பங்களில் அதிகம் காணப்படும் மாமியார் மருமகள் போட்டியை அப்படியே ஆரோக்கியமான சமையல் போட்டியாக இங்கு மாற்றியுள்ளார்கள். உணவை மையமாக வைத்து ‘ரைவல்ஸ் இன் லா’ என்ற நிகழ்ச்சியை தயாரித்திருக்கிறார்கள்.
ரைவல்ஸ் இன் லா
[youtube https://www.youtube.com/watch?v=1W3MdS_40yw?feature=player_embedded]
இதில் மாமியார் தனது மகனுக்கும் மருமகள் தனது கணவனுக்கும் பிடித்தமான உணவை சமைக்க வேண்டும். இரண்டும் ஒரேவிதமாக அலங்கரிக்கப்பட்டு தரப்படும். அதனை சுவைத்து சிறந்ததை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் அதனை செய்தவர் யார் என்பது தெரியும். இந்த நிகழ்ச்சியையும் மிக அருமையாக செய்திருக்கிறார்கள். இதில் ஒரு நிகழ்ச்சி மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே சமையல் போட்டி நடைபெறும். அது என்னை மிகவும் கவர்ந்திருந்தது.
‘மேன் வெர்சஸ் சைல்டு’
இன்னொரு சுவையான சமையல் நிகழ்ச்சியும் உள்ளது. அதன் பெயர் ‘மேன் வெர்சஸ் சைல்டு’ என்பது. ஐந்து குழந்தை சமையல் கலைஞர்கள் புகழ்பெற்ற பெரிய சமையல் கலைஞரோடு சமையலில் போட்டிபோடும் நிகழ்ச்சி.
‘மேன் வெர்சஸ் சைல்டு’
[youtube https://www.youtube.com/watch?v=5pkMB3JW0j8?feature=player_embedded]
இந்த நிகழ்ச்சியில் வரும் ஐந்து குழந்தைகளும் தூள் கிளப்புகின்றன. சமையலில் பெரிய கலைஞர்களையே திணறடிக்கின்றன. ஆனால், இந்த நிகழ்ச்சி இந்தியாவிற்காக தயாரிக்கப்பட்டதல்ல. மற்ற ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான் போன்றவற்றுக்காக தயாரிக்கப்பட்டது. இதுவும் ஒரு அருமையான நிகழ்ச்சி. நமது சமையலுக்கும் இவர்களின் சமையலுக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதால் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. மற்ற நாடுகளின் சமையலை விரும்புபவர்கள் இதனை செய்து பார்க்கலாம்.
‘மேரீட் அட் ஃபர்ஸ்ட் சைட்’
‘பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல் நாளே’ என்று பாடிக்கொண்டே காதலில் விழுந்து பின்னர் திருமணமும் செய்துகொண்ட தம்பதிகளின் இனிய அனுபவ பகிர்வு இந்த நிகழ்ச்சி. அப்படி செய்து கொண்ட திருமணங்கள் வெற்றியடைந்ததா என்பதை வழிகாட்டலுடன் சொல்லும் நிகழ்ச்சி. இதுவும் வெளிநாட்டு நிகழ்ச்சிதான்.
‘மேரீட் அட் ஃபர்ஸ்ட் சைட்’
[youtube https://www.youtube.com/watch?v=fUnr-3q2Bs4?feature=player_embedded]
‘டைனி ஹவுஸ் நேஷன்’
வீடு கட்டுவதற்கான இடம் கிடைப்பது இன்றைக்கு குதிரை கொம்பு. விலையும் கூடுதல். அப்படிப்பட்ட சூழலில் சிறிய இடத்தில் சகல வசதிகளும் கொண்ட வீடுகள் கட்டுவது எப்படி என்பதை இவர்கள் சொல்கிறார்கள். 150 சதுரடி கொண்ட சிறிய இடத்தில்கூட நாம் விரும்பும் அனைத்து வசதிகளுடன் வீடு அமைத்து தருகிறார்கள். சிறிய வீடு கட்டுபவர்களுக்கு உபயோகமான நிகழ்ச்சி.
‘டைனி ஹவுஸ் நேஷன்’
[youtube https://www.youtube.com/watch?v=Jo8zIuQYn5s?feature=player_embedded]
மேலும் ஏராளமான நிகழ்ச்சிகள் இருக்கின்றன. புது சேனல் என்பதால் விளம்பரம் இல்லை. அதேவேளையில் நிகழ்ச்சிகளும் மீண்டும் மீண்டும் மறுஒளிபரப்பு செய்யப்படுவதால் ஒருவித அலுப்புத்தட்டுகிறது. அது நிகழ்ச்சி பற்றாக்குறையையே காட்டுகிறது. நிகழ்ச்சிகள் முழுவதும் தயாரானபின் அந்த குறையும் மறைந்து விடும்.
இப்போதைக்கு நான்கு இந்திய மொழிகளில் இந்த சேனல் ஒளிபரப்பாகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மொழிகளில் இதை பார்க்கலாம்.
சேனல் எண்:
டிஷ் டிவி : 472
ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி : 561
ஏர்டெல் டிஜிட்டல் டிவி : 345
டாடா ஸ்கை :723
ஹாத்வே : 452
டயலாக் டிவி(ஸ்ரீலங்கா) : 82