
நாடு அடிமைப்பட்டுக் கிடந்தபோது, விடுதலை அடைய வேண்டும் என்ற லட்சியம் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது. சமூக விடுதலை அடையாமல் நாட்டு விடுதலையால் பயனில்லை என்று திராவிட இயக்கங்கள் போராடின. பொருளாதாரச் சுதந்திரம் இல்லாமல் நாட்டு விடுதலையால் எந்தப் பயனும் இல்லை என்று பொதுவுடைமை இயக்கங்கள் வாதாடின. நாடா, வர்க்கமா, சாதியா என்ற விவாதம் நடந்த காலக்கட்டம் அது.
சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியைப் பிடிப்பது, அதிகாரத்தைத் தக்கவைப்பது, இப்படித் தக்கவைப்பதற்காக எந்தக் கீழான காரியத்தையும் செய்வது, அந்தக் காரியங்களுக்காகப் பெரும் பணம் குவிப்பது, அதிகாரப் பசியைத் தீர்த்துக் கொள்ள யாரோடும் சேருவது ஆகிய ஐந்தும்தான் அனைத்து அரசியல் கட்சிகளின் நோக்கமாக உள்ளது. இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எந்த வித்தியாசமும் இல்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும். உறுதி கொள்ளுங்கள் வாக்காளர்களே.!