Header Banner Advertisement

சதாப்தி பயணம்


3

print
 பயணம் எப்போதுமே அலாதியானது. பயணம் தரும் பரவசம் வேறு எதிலும் கிடைக்காத புதிய அனுபவம். பயணத்தில் நாம் சென்று சேர்ந்த இடங்களை பெருமையாக பேசுகிறோம்..!

என்றைக்காவது நாம் பயணித்த வாகனங்களை பெருமை பேசியிருக்கிறோமா..?

கார், பஸ், ரயில், விமானம் என்று மாறி மாறிப் பயணிக்கிறோம். ஆனாலும், அந்த வாகனங்களை நாம் பெருமைப் படுத்தியதேயில்லை.

அதிலும் பொது வாகனங்களை நாம் கண்டு கொண்டதில்லை. பஸ்ஸும் ரயிலும் நம்மைச் சுமந்து சென்ற இடங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் ரயில் எப்போதுமே ஸ்பெஷல்தான்..!

ரயில் ஒரு நகரும் வீடு. ரயிலில் ஓடியாட இடம் இருப்பதால் அது குழந்தைகளுக்குச் சொர்க்கம். கழிவறை இருப்பதால் பெண்கள், முதியவர்களுக்கு அது வசீகரம். படுப்பதற்கும், உட்கருவதற்கும், அரட்டை அடித்து, புத்தகம் வாசிப்பதற்கும் வசதியிருப்பதால் நமக்கும் அது ஆனந்தம். இது மட்டுமா ரயிலைப் பிடிப்பதற்கு… இன்னும் எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.

ரயிலுக்கும் எனக்கும் பால்ய வயது பந்தமுண்டு. சிறுவயதில் இருந்தே ரயில் என் வாழ்வோடு இன்னைந்தே வந்திருக்கிறது. எர்ணாகுளம், போத்தனூர், சங்ககிரி துர்க்கம், சேலம் எனச் சிறுவயதில் நான் குடியிருந்த வீடுகள் எல்லாமே ரயில்வே காலனிக்கு நடுவிலே இருந்தது. அந்த வீடுகளுக்கு முன் ரயில்வே டிராக் இருந்தததால் எப்போதும் ரயில்கள் தடதடவென ஓடிக்கொண்டே இருக்கும்.

காதைக் கிழிக்கும் ரயிலின் விசிலும், பதற வைக்கும் தண்டவாளச் சத்தமும் சிறுவனாயிருந்த எனது இரவு தூக்கத்தை விரட்டி மிரட்டின. ஆனாலும் ரயிலை மனம் விரும்பவே செய்ததது. என்னதான் யானை கரிய பெரிய உருவமாக இருந்தாலும், மிரள வைத்தாலும் சிறு வயது முதலே அதனுடனான ஈர்ப்பு நம்மை விட்டு போவதில்லை. ரயிலும் அப்படித்தான்..!

ரயிலுக்கும் எனக்குமான நெருக்கம் அதோடு நின்றுவிடவில்லை. ரயில் என்ஜினிலும் என்னை பயணிக்க வைத்தது. சிறுவயதில் ரயில் என்ஜினில் பயணிப்பது பிரமிப்பான அனுபவம். என் தந்தை ரயில்வேயில் பணிபுரிந்ததால் இவையெல்லாம் சாத்தியமானது. இப்போதெல்லாம் ரயில் என்ஜினில் டிரைவர்களை தவிர வேறு யாரும் பயணிக்கக்கூடாது என்ற விதி கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. அன்று அப்படியில்லை, அதனால் எனது சிறுவயது சாகசப் பட்டியலில் ரயில் என்ஜின் பயணமும் சேர்ந்துக்கொண்டது.

கிட்டத்தட்ட எல்லாவகையான எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பயணித்துவிட்டேன். ஆனாலும் ‘சதாப்தி’யில் பயணிக்க வேண்டும் என்பது எனக்கொரு கனவாகவே இருந்தது. இந்தியாவில் மிக உயர்ந்த சேவை தரும் ரயில்கள் சதாப்தியும் ராஜ்தானியும்தான்.

ராஜ்தானி நீண்ட தூரம் பயணிக்கும் ரயில். ராஜ்தானி என்ற ஹிந்தி வார்த்தைக்கு ‘த கேபிடல்’ என்று அர்த்தம். தேசத்தின் தலைநகரான நியூ டெல்லியை மாநில தலைநகரங்களுடன் இணைக்கும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்.

1969-ல் முதல் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் நியூ டெல்லியிலிருந்து ஹவுராவுக்கு போகும் போது இந்தியாவின் மிக வேகமான ரயிலாக அதுதான் இருந்தது. 1.445 கி.மீ. தூரத்தை 17 மணி 20 நிமிடங்களில் அனாவசியமாக கடந்து பிரமிப்பை ஏற்படுத்தியது. இன்றைக்கு ராஜ்தானி வேகத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சதாப்தியும் துரண்டோவும் முதல் இரண்டு இடங்களை பிடித்துக்கொண்டன.

தற்போது இந்தியாவில் மிக வேகமான எக்ஸ்பிரஸ் ‘போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ்’தான். மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் அது செல்கிறது. சதாப்தி என்றால் 100 என்று அர்த்தம். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நூற்றாண்டு விழாவின் நினைவாக 1988 முதல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.

சதாப்தி ஒரு பகல் நேர எக்ஸ்பிரஸ். இதில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும். முழுவதும் ஏஸி வசதி செய்யப்பட்ட நவீன ரயில் பெட்டிகளைக் கொண்டது. இதன் தூரம் 300 முதல் 700 கி.மீ.க்குள் இருக்கும். ஒரே நாளில் புறப்பட்ட ரயில் நிலையத்திற்கு மீண்டும் வந்து சேரும் விதமாக இயக்கப்படும்.

இப்படிப்பட்ட சதாப்தி எக்ஸ்பிரஸில் பயணிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மைசூர் சென்று சேரும் எக்ஸ்பிரஸ் அது. காலை 6 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸில் 5.40-க்கே அமர்ந்துவிட்டேன்.

ஜன்னலோர சீட்.. மிகப் பெரிய கண்ணாடி ஜன்னல், வேடிக்கைப் பார்க்க வசதியாக இருந்தது. வெயில் அடித்தால் அதன் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள கனமான சிவப்பு நிற திரை இருந்தது. எனக்கு பயணத்தில் பராக்கு பார்ப்பது மிகவும் பிடிக்கும். அதனால் திரையை ஓரங்கட்டி வைத்தேன்.

ஏசியின் குளுமை அதிகமாகவே சில்லிட்டது. சரியாக 6 மணிக்கு ரயில் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் சுடச்சுட டீ, காபி வந்தது. உணவு வகைகளை பரிமாறுவதற்கென்றே ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும் தனித்தனியாக ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் ஸ்நாக்ஸ், உணவு என பயணிகளின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்கள். இதற்கான தொகையை டிக்கெட்டோடு சேர்த்து வாங்கி விடுகிறார்கள்.

காலை நேரம் என்பதால் டீ குடித்து முடித்த கையோடு அன்றைய நாளிதழ்களை தந்தார்கள். தமிழ், கன்னடம், ஆங்கிலம், இந்தி நாளிதழ்களில் நமக்கு வேண்டியதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ரயிலில் இருக்கும் அனைவர் கையிலும் அன்றைய நாளிதழ்கள் இருப்பது அம்சமாக இருந்தது.

ரயிலுக்கு வெளியே காட்சிகள் வெகு வேகமாக பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன. ரயிலின் அசுர வேகம் எதுவுமே உள்ளுக்குள் தெரியவில்லை. புறப்பட்டு ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. நான்-ஸ்டாப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அரக்கோணம், காட்பாடி போன்ற பெரிய ரயில் நிலையங்கள் எல்லாம் மின்னல் வேகத்தில் பின்னால் ஓடின.

வேகத்தையும் வெளிக் காட்சிகளையும் ரசித்துக் கொண்டிருந்த என்னை ‘சார்’ என்ற அழைப்பு திரும்ப வைத்தது. திரும்பிய என்னிடம் ரயில் வாட்டர் பாட்டிலை கொடுத்தார், ஒருவர். அவருக்குப் பின்னால் இன்னொருவர் காலை ப்ரேக் பாஸ்ட்டை தந்து போனார்.

ஏசி சேர் கார்

மற்ற ஏசி சேர் கார்களில் இருப்பதுபோலவே இதிலும் நமக்கு முன்னால் இருக்கும் இருக்கையின் பின்புறத்தில் சிறிய டேபிள் போன்ற அமைப்பு இருக்கிறது. ஆனால் அவைகளை விட சற்று மேம்பட்ட வடிவத்தில் இது இருக்கிறது. உணவை சாப்பிட வசதியாக இருந்தது.

சதாப்தியில் இரண்டு வகையான வகுப்புகள் உள்ளன. முதல் வகுப்பு எக்ஸிகியூட்டிவ் சேர் கார், இது பெரும் பணக்காரர்களுக்கு. அடுத்து வெறும் ஏசி சேர் கார் நம்மைப் போல் வசதி இல்லாதவர்களுக்கு. முதல் வகுப்பில் ஒரு வரிசைக்கு (2+2) நான்கு இருக்கைகள் இருக்கும். காலை நீட்டிக் கொள்ள நிறைய இடம் இருக்கும். சொகுசான வசதிகள் கூடுதலாக இருக்கும்.

சாதாரண ஏசி சேர் கார் கூட மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ளதுபோல் இல்லாமல் சிறப்பாக உள்ளது. மற்றவற்றில் ப்ரவுன் கலர் அல்லது நீல நிறத்தில்தான் இருக்கைகள் இருக்கும். இங்கு பச்சை வண்ணத்தில் பூ வேலைப்பாடுகளுடன் கொஞ்சம் பணக்காரத்தனத்தை காட்டியபடி இருக்கைகள் இருக்கின்றன.

முதல் வகுப்பு எக்ஸிகியூட்டிவ் சேர் கார்

சதாப்தி எக்ஸ்பிரஸ் சிலவற்றில் சினிமா பார்க்கும் வசதி இருக்கிறது. இவற்றில் டிவி சேனல்களும் பார்க்கலாம். கலை உணவு முடிந்த சற்று நேரத்தில் லெமன் ஜூஸ் வந்தது. குடித்து முடித்து ரிலாக்ஸ் ஆவதற்குள் வண்டியின் வேகம் குறைந்தது.

காலை 10.45 மணி பெங்களூர் ரயில் நிலையம் வந்தது. நாலேமுக்கால் மணி நேரமாக நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த ரயில் கொஞ்சம் நின்று நிதானித்து இளைப்பாறியது.

நீண்ட தொலைவு பெரிய பெரிய ஊர்களில் கூட நிற்காமல் வந்தது. பெட்டியின் உட்புற அலங்காரம், இடையிடையே நமக்கு வேண்டியதை கொடுத்துக் கொண்டிருப்பது என்று சதாப்தியின் பயணம் சிறப்பாகவே தெரிந்தது.

பெங்களூரில் 10 நிமிடம் நின்ற சதாப்தி மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது. மறுபடியும் வாட்டர் பாட்டில், ஜூஸ், மதியம் மீல்ஸ், ஸ்வீட் என்று வரிசைக் கட்டி வந்தது கொண்டிருந்தன. ரயில் மீண்டும் மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

உள்ளே எப்போதும் ஒருவிதமான அமைதி நிலவிக்கொண்டிருந்தது. எனக்குப் பக்கத்தில் ஒரு ஹை-கோர்ட் லாயர் அமர்ந்திருந்தார். பெங்களுரிலிருந்து மைசூர் போவதற்குள் கேஸ்கட்டை முழுவதும் படித்து முடித்துவிட்டார்.

சாதாரணமான மற்ற ஏசி சேர் கார்களில் கூடப் பயணிகள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்கிறார்கள். இங்கு என்னமோ இனம் புரிய மௌனம் நிலவுகிறது. யாரும் பேசிக் கொள்வதில்லை. எல்லோரும் ஒருவித இறுக்கத்தில் சிக்கிக் கொண்டது போல் இருக்கிறார்கள்.

வசதி கூடக் கூட மனிதனின் பழகும் தன்மை குறைந்து விடும் போல் தெரிகிறது. மிதமிஞ்சிய வசதியும் கூட மனிதனின் ரசனையைக் குறைத்துவிடும் போலத் தோன்றியது.

மதியம் ஒரு மணிக்கு மைசூர் வந்து சேர்ந்தேன். 500 கி.மீ. பயணம் செய்து வந்த அலுப்புக் களைப்பு சிறிதும் இல்லை. அது சதாப்தி கொடுத்த சௌகர்யம்.

டிக்கெட் கவுண்டர்

மைசூர் வந்த பின் அங்கிருக்கும் ரயில் மியூசியத்தைப் பார்க்கவில்லை என்றால் பயணம் முழுமையடையாது. டெல்லியில் தேசிய ரயில் மியூஸியத்தைத் தொடங்கியப் பின், மற்றொரு ரயில் மியூசியம் தொடங்க வேண்டும் என்று நினைத்தார்கள். 1979-ல் கிருஷ்ணராஜா சாகர் ரோட்டில் புதிதாக அதனை அமைத்தார்கள்.

நேரோகேஜ் என்ஜின்

திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மியூஸியத்தில் மைசூரில் முதன்முதலாக இயக்கப்பட்ட நீராவி என்ஜின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கடுத்து ஆஸ்டின் ரயில் மோட்டார் கார் உள்ளது. இது சாலையில் ஓடும் கார்தான். அதை விலைக்கு வாங்கி அதில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி, டயருக்குப் பதில் இரும்பு சக்கரங்களைப் பொருத்தி ரயில் தண்டவாளத்தில் ஓடும் விதமாக மாற்றியிருக்கிறார்கள். உண்மையில் ஒரு கார் தண்டவாளத்தில் ஓடுவது வியப்பான ஒன்றுதான்.

ஆஸ்டின் கார்

மைசூர் மகாராஜா பயணம் செய்த நவீன வசதி கொண்ட இரண்டு ரயில் கோச் இங்குள்ளன. மகாராணிச் செல்வதற்கென்று தனியாக மகாராணி சலூன் உள்ளது. மகாராணிக்காக அலங்கரிக்கப்பட்ட கட்டில், மேக்கப் சாதனங்கள், டைனிங் டேபிள், ராயல் டாய்லெட் எல்லாம் உள்ளன.

மகாராணி சலூன்

1900-ல் பெங்களூரில் இருந்து தும்கூருக்கு இயக்கப்பட்ட நேரோகேஜ் ரயில் என்ஜின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது. ரயில்வே எப்படியெல்லாம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை இந்த மியூஸியத்தில் தெரிந்துக் கொள்ளலாம். திங்கட்கிழமை விடுமுறை. மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மியூஸியம் திறந்திருக்கும். நுழைவுக் கட்டணம் ரூ.10.

இந்தியாவின் இரண்டாவது ரயில் மியூசியத்தைப் பார்வையிடுவது இன்றைய தலைமுறையினருக்கு அவசியமான ஒன்றாகும்.