Header Banner Advertisement

சர்க்கரை நோய் நம்மை என்ன செய்யும்?


004

print
நாம் செய்யும் எல்லா வேலைகளுக்கும் உடலிலுள்ள தசைநார்கள் இயங்குகின்றன. அப்படி ஒவ்வொரு இயக்கத்திற்கும் குளுக்கோஸ் எனும் சக்தி செலவாகிறது. இந்த குளுக்கோஸ் நாம் சாப்பிடும் உணவான அரிசி, கோதுமை, கிழங்குகள், பழங்கள், இனிப்பு போன்ற பொருட்களில் அதிகமாக இருக்கின்றன. இதில் இருக்கும் மாவுச் சத்தை செரிமானத்தின் மூலம் குளுக்கோஸாக மாற்றி குடல் உறிஞ்சிக் கொள்கிறது. சிறுகுடலில் இருந்து ரத்தத்தின் மூலம் ஈரலுக்குச் செல்கிறது. ஈரல் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் குளுக்கோஸை பகிர்ந்து கொடுக்கிறது.
ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் உடலின் திசுக்களுடன் சென்று திசுக்களை வேலைப் பார்க்க வைப்பதற்காக ‘இன்சுலின்’ என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. இன்சுலின் ஹார்மோன் கணையத்தின் சில குறிப்பிட்ட திசுக்களிலிருந்து ஊற்றாய் ஊறி (சர்க்கரை) ரத்தத்தில் கலந்து கொள்ளும். உடலில் உள்ள திசுக்களுக்கு எவ்வளவு குளுக்கோஸ் வேண்டுமோ அந்த அளவிற்கே இன்சுலின் சுரக்கிறது. அந்த இன்சுலின் எல்லா திசுக்களுக்கும் சரிவிகிதத்தில் அனுப்பப்படுகிறது.

ஏதாவது ஒரு காரணத்தால் இன்சுலின் சுரப்பு குறைந்துவிட்டால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் திசுக்களை சென்றடையாமல் அப்படியே ரத்தத்தில் தங்கி விடுகிறது. திசுக்களுக்கு குளுக்கோஸ் சென்றடையாததால் உணவில்லாத மனிதன் போல திசுக்கள் அசதியிடனும் சக்தியற்றும் இயங்குகிறது. அதனால் எல்லா திசுக்களும் மிக விரைவிலே முதுமை அடைகிறது.

ரத்தத்தில் தொடர்ந்து தேங்கிக்கொண்டே வரும் குளுக்கோஸ் ரத்தத்தை அடர்த்தி மிக்கதாக கெட்டியாக மாற்றிவிடுகிறது. அதனால், மெல்லிய சிறு சிறு ரத்தக் குழாய்களில் ரத்தம் புகமுடியாமல் பல பகுதிகளுக்கு ரத்த ஓட்டமே தடைப் பட்டுவிடும்.

இந்த தடைபடுதல் மூளையில் ஏற்பட்டால், அது பக்கவாதத்தில் கொண்டுபோய் விடுகிறது. இதயத்தில் நடந்தால் மாரடைப்பாக மாறுகிறது. சிறுநீரகங்களில் நடந்தால் சிறுநீரக செயலிழப்பாக தோன்றுகிறது. இதே பாதிப்பு கண்களில் ஏற்பட்டால் பார்வை பாதிக்கப்படுகிறது. கால் விரல்களில் இந்த பாதிப்பு ஏற்படும்போது ரத்த ஓட்டம் செல்லாத பகுதிகள் அழுக்கத் தொடங்குகின்றன. அதனால் அந்தப் பகுதியை வெட்டி எடுக்க வேண்டிய நிலை வருகிறது. சர்க்கரை நோய் பெரிதும் பாதித்தவர்களின் கால் விரல்களை வெட்டி எடுப்பது இதனால்தான்.

குளுக்கோஸ் சத்து திசுக்களுக்கு சென்று சேராததால் திசுக்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதனால் புண்கள் ஆறுவதும் தடைப்படுகிறது. இதுதான் சர்க்கரை நோயின் முழுப்பரிமாணம். ரத்தத்தில் சர்க்கரை அளவு 150 மில்லி கிராமுக்கு மேல் இருந்தால் ரத்தத்தின் பளபளப்புத் தன்மை மாறத்தொடங்குகிறது. உணவு உட்கொள்வதற்கு முன் ரத்தத்தில் 60 லிருந்து 100 மில்லி கிராம் சர்க்கரை இருப்பது இயல்பானது. உணவு உண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவு கொஞ்சம் கொஞ்சமாக ஏறுகிறது. அப்படி முழுமையாக ஏறிய நிலையில் 120 முதல் 150 வரை இருக்கலாம். சர்க்கரை நோய் இத்தனை மாற்றங்களை உடலில் ஏற்படுத்துவதால்தான் உணவு விஷயத்தில் அளவாகவும், போதிய உடற்பயிற்சி செய்தும் சர்க்கரை நோய் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.