
குறிப்பிட்ட முக்கியமான விசயங்களில் சிலரால் எதையும் உறுதியாகத் தீர்மானிக்க முடிவதில்லை. அவர்களிடம் சுயேச்சையான தீர்மான சக்தி இருப்பதில்லை. அவர்கள் அந்த விசயத்தை அர்த்தமின்றி தள்ளிப்போட்டுக் கொண்டே போவார்கள். அவர்கள் தீர்மானமான, உடன்பாடான முடிவுக்கு வரமாட்டார்கள். சந்தர்ப்பம் நழுவி விடும். குளிர் காலத்தில் தேன் சேகரிப்பது போல் காலந்தாழ்ந்து விடும்.
நீங்கள் ஒரு விசயத்தை சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்து ஒரு உறுதியான தீர்மானத்திற்கு வர முயல வேண்டும். உடனே உங்கள் மொத்த சக்தியையும் பிரயோகிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தை உடனே செயலில் காட்ட முற்பட வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் வெற்றியடைவீர்கள். அளவுக்கு மிஞ்சி சிந்தனையில் ஈடுபடுதல் காரியத்தைக் கெடுத்துவிடும்.
முக்கியமான விசயங்களில் உங்களை விட அதிக அனுபவமும், உங்கள் நலனில் உண்மையான நாட்டமுடையவர்களுமான மூத்தோர்களைக் கலந்து ஆலோசிப்பது நலம். “சிக்கலைத் தகர்த்தெறிக” என்ற முதுமொழியை நினைவில் வைத்திருங்கள்.
– சுவாமி விவேகானந்தர்-