
ஸ்வீடன் நாட்டு பீரங்கிக் கம்பெனியான போபார்ஸ் நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் சிதம்பரத்தின் எஜமான் ராஜிவ் காந்தி லஞ்சம் பெற்றதை அறிந்த அளவுக்கு ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளை அறியவில்லை. இது துரதிர்ஷ்டமே. ஸ்வீடன் நாட்டின் அறிவாளிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மிகப்பெரும் பங்கு ஆற்றியுள்ளனர். ஐரோப்பிய மக்களுக்கு இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற அடிமைப்பட்ட நாடுகளில் வெள்ளையின அரசாங்கங்கள் நடத்தும் படுகொலைகளையும் கொடுங்கோல் ஆட்சியையும் வெளிக் கொண்டுவந்ததில் இவர்களது பணி மிகவும் முக்கியமானது. இந்த வகையில் ஜான் மிர்தால் அவர்களின் குடும்பம் அளப்பறிய பணியாற்றியிருக்கிறது.
அடிப்படைப் பொருளாதாரக் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள், அரசியல் ஊழியர்கள் தாம் அவசியம் படித்துத் தேற வேண்டிய அடிப்படை நூல்கள், ஆய்வுகள் பலவும் ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளால் வெளியிடப்பட்டுள்ளது என்றால் அது மிகையல்ல.அதிலும் குறிப்பாக, இன்றளவும் இந்திய அரசு பொருளாதார ரீதியாக விவசாயிகளைப் பிரித்து ஆராயவும், அதற்கான திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுத்தும் மூல விபரங்கள் குன்னர் மிர்தால் எழுதிய ‘ஆசிய நாடகம்’ என்ற ஆய்வு நூலில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது.
அவர் வழங்கிய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தான் இந்திய அரசால் விவசாயிகள் தரம் பிரிக்கப்பட்டு சிறிய (small), நடுத்தர (medium), பெரிய (Big) விவசாயிகள், நிலச்சுவான்தார்கள் (Landlords) என்று வகைப்படுத்தப் பட்டுள்ளனர். இதனையே அரசின் திட்டங்கள் அடிப்படியாகக் கொண்டுள்ளன. இவரைப்போலவே, வெள்ளையர் ஆட்சியின் பொழுது, இந்தியாவின் வறுமையின் காரணம் என்ன, நாடு எப்படி வெள்ளையர்களால் கொள்ளை யிடப்படுகிறது என்பதை ஒரு நீண்ட ஆய்வின் அடிப்படையில் மிகப் பெரும் புள்ளி விபரங்களுடன் “இன்றைய இந்தியா (India Today)” என்ற ஒரு மிகப் பெரிய நூல் வெளியிட்ட ரஜனி பாமி தத் (Rajani Palme Dutt)என்ற அறிஞரும் ஸ்வீடன் நாட்டு வம்சாவழியில் வந்தவரே.
சிதம்பரமும் ஜான் மிர்தாலும்
இந்தியாவை ஒட்டச் சுரண்டும் ஐரோப்பியக் கம்பெனிகள், அமெரிக்கக் கம்பெனிகளின் அதிகாரிகள், சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் ஆட்டக் காரர்கள், அழகிப் போட்டி நடத்தும் நிறுவனங்கள், மூட நம்பிக்கையைப் பரப்பும் மதவெறிப் பிரச்சாரகர்கள்,ஆபாசப் படங்களில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் இந்தியாவில் பயணம் செய்யவும், கூட்டங்கள் நடத்தவும், தொழில் நடத்தவும் சிதம்பரம் தலைமையிலான உள்துறை அமைச்சகம் சிறப்புச் செய்து அவர்களுக்குப் பாதுகாப்புத் தருகிறது.
ஏன்,உலகறிந்த கொலைகாரன் ராஜ பக்சேவும் அவன் சகோதரர்களும் இந்தியாவுக்கு வரவும் அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கவும் இதே சிதம்பரம் தயங்கியதில்லை. இப்படிக் கொள்ளையர்கள், கொலைகாரகள், சரச சல்லாபத் தொழில் செய்வோரை வரவேற்று அவர்களுக்கு ஜமுக்காளம் விரித்து, உடனிருந்து பாதுகாப்பும் உபச்சாரமும் செய்யும் சிதம்பரத்தின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவாளியை இந்தியாவுக்குள் வரக் கூடாது என்ற அறிவிப்புச் செய்துள்ளது நமக்கு வியப்பைத்தரவில்லை.
இந்தியப் பாரம்பரியம் பற்றி அடிக்கடி பேசும் சிதம்பரத்தின் முன்னோர்கள் கந்து வட்டிக்குக் கடன் கொடுத்து வந்த பரம்பரை என்பது தமிழர்கள் அறிந்த விஷயம். தமிழரான சிதம்பரத்தின் முன்னோர்கள் (நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள்) இந்தியா,மலேசியா, பர்மா போன்ற உலகின் பல நாடுகளில் வெள்ளையர்களின் துணையோடு வட்டிக் கடைகள் நடத்தச் சென்ற போது ஐரோப்பியரான ஜான் மிர்தாலின் குடும்பம் உலகெங்கும் உள்ள அடிமைப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தது, போராடியது.
அது இன்றும் தொடர்கிறது. சிதம்பரம் கொள்ளைக்காரக் கம்பெனிகளுக்கு எடுபிடியாக, துணைவனாக இருந்து நாட்டைக் காட்டிக் கொடுக்கிறார். மிர்தால் போராடும் மக்களுக்கு துணையாக இருந்து அவர்களது நியாயத்தை பேசுகிறார். எழுதுகிறார்.
சிதம்பரத்தின் முன்னோர்கள் வெள்ளையர்களுக்கு சேவகம் செய்த காலத்தில் அதற்கு எதிராக சர்வதேச மக்களுக்காகக் குரல் கொடுத்த ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளின் மரபில் வந்தவர் ஜான் மிர்தால். சிதம்பரம் தன் முன்னோர்கள் சென்ற அதே துரோகப் பாதையில் செல்கிறார். மிர்தால் மக்களுக்காக பாடுபடுகிறார். எப்படி வேசமிட்டாலும் சிதம்பரம் போன்றவர்கள் இனம் இனத்தோடே சேரும் என்ற விதியை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
தடையை விலக்குக
கிடைக்கும் இடங்களில் எல்லாம் தம்மை ஒரு படிப்பாளியாக அறிவாளியாகக் காட்டிக் கொள்ளும் சிதம்பரம் தாம் உண்மையில் ஒரு ஒரு பொய்யர் மட்டும் அல்ல அறிவாளிகளின் எதிரி என்பதை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டியுள்ளார்.அறிவாளிகளை, ஆய்வாளர்களை இந்தியாவுக்குள் நுழையவும், ஆய்வு செய்யவும், பேசவும், எழுதவும் அனுமதியில்லை என்று அறிவிப்புச் செய்திருக்கும் மன்மோகன் சிங் சிதம்பரத்தின் கூட்டணி ஒரு நேர்மையில்லாத ஒரு அயோக்கியர்களின் கூட்டணி என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்.
இதை இந்திய மாணவர்கள் அறிவாளிகள் அனுமதிக்க முடியாது, கூடவும் கூடாது. இந்திய அறிவாளிகள், மாணவர்கள், இளைஞர்கள் பலவாறாக ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளுக்கு கடன் பட்டுள்ளார்கள். இந்த அநீதிக்கும் சிதம்பரத்தின் துரோகத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது தமிழ் நாட்டு மாணவர்கள், இளைஞர்கள், அறிவாளிகளது கடமை. இந்திய அரசின் இந்த தடையை கண்டிக்க வேண்டியது அணைத்து சனநாயக சக்திகளின் கடமையும்கூட.
ஜான் மிர்தால் (Jane Myrdal) ஒரு புகழ் பெற்ற ஸ்வீடன் நாட்டு அறிஞர். உலகின் பல நாடுகளில் நடைபெற்று வரும் அமைதி இயக்கங்களில் ஆர்வமுடன் பங்கெடுத்து சர்வாதிகார, கொடுங்கோல் அரசுகளைக் கண்டித்தும் இயக்கம் நடத்தி வருபவர். 85 வயதான இந்த உலகறிந்த அரசியல் அறிஞரை ‘இனிமேல் இந்தியாவுக்குள் நுழையக் கூடாது’ என அறிவித்துள்ளது இந்திய அரசு. ‘மாவோயிஸ்டுகளுக்கு ஆலோசனை வழங்கினார்’ என்ற குற்றத்திற்காக இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிதம்பரம் தலைமை அமைச்சராக இருக்கும் இந்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
யார் இந்த ஜான் மிர்தால்?
தமது பெற்றோரைப் போலவே தாமும் உலக மக்களின் நல்வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜான் மிர்தால். தம் வாழ்வின் பெரும் பகுதியை அதாவது சுமார் அறுபது ஆண்டுகளாக ஜான் மிர்தால் மக்கள் பணி ஆற்றி வருகிறார். உலகின் பலபகுதிகளில் நடைபெறும் அமைதி போராட்டங்களுக்கு, இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். போராடும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை எப்போதும் ஆதரித்து வருபவர். தமது நாட்டு அரசாங்கத்தையும் வெளிப்படையாகக் கண்டித்து இவர் பெரிய அளவில் இயக்கங்கள் நடத்தி உள்ளார். அடிப்படையில் இவர் ஒரு ஆய்வாளர்,ஜனநாயகவாதி, எழுத்தாளர், பேச்சாளர்.
![]() |
குன்னர் மிர்தால் |
பல ஐரோப்பிய,ஆசிய மொழிகளில் வெளியாகும் அவரது எழுத்துகள் சமீப காலமாக இந்திய அரசியல்வாதிகள் குறிப்பாக மன்மோகன் சிங்குக்கும் சிதம்பரத்திற்கும் (அவ)மானப் பிரச்சனையாகியுள்ளது. எனவே, இவரது எழுத்துகளைத் தடை செய்ய ஒரு வழியாக அவரையே தடை செய்து விட்டனர்.
மாவோயிஸ்டுகளுக்கு ஆலோசனை?
மாவோயிஸ்டுக் கட்சியினரின் கருத்துகளை இந்தியப் பத்திரிகைகள், தொலைக் காட்சிகள் இருட்டடிப்புச் செய்து வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது இயக்கம் பணி செய்யும் பகுதிகளுக்குச் சென்று இயக்கத்தின் தலைவர்களையும் மக்களையும் நேரடியாகக் கண்டு பேட்டியெடுத்து வெளியிட்டவர் ஜான் மிர்தால். அவரது பேட்டிகளும் குறிப்புகளும் மத்திய இந்தியாவில் நடக்கும் அடக்குமுறை பற்றிய விபரங்களை சர்வதேசத்திற்கும் சிறப்பாக அறிமுகம் செய்தது.
இதில் இருந்து தான் உலகம் மாவோயிஸ்டுகளின் உண்மையான நிலைபாடுகளை அவர்களின் வெட்டிச் சிதைக்கப் படாத முழுமையான பேட்டிகள் மூலம் நேரான வழியில் அறிந்து கொள்ள முடிந்தது. அப்போதிருந்தே அவரைக் குறி வைத்திருந்த இந்திய அரசு காரணம் எதுவும் கண்டுபிடிக்க முடியாததால் ‘மாவோயிஸ்டுகளுக்கு அவர் ஆலோசனை சொன்னதாக குற்றம் சாட்டியுள்ளது’. தாம் ஆலோசனை எதுவும் சொல்லவில்லை என்றும் தான் பேசிய அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள், அறிவாளிகள் பங்கேற்ற அரங்கக் கூட்டங்கள் தவிர வேறெதுவும் செய்யவில்லை என்று மறுத்து இருக்கிறார்.
![]() |
Model Photo for maoists |
குறிப்பாக மாணவர்கள்,அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் மத்தியில் இந்த நூல் பிரபலம் அடைந்து வருவதைக் கண்டு சகிக்காத சிதம்பரம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதுவரை இந்த நூலை இந்திய அரசு தடை செய்ய வில்லை. ஆயினும், அது குறித்துப் பேசவோ மீண்டும் ஆய்வுக்கான விபரங்கள் சேகரிக்கவோ ஜான் மிர்தால் இந்தியாவுக்குள் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்தத் தடையை விதித்துள்ளது.
கட்டுரையாளர் ராமசாமி,சென்னை