
குருசுமலையை அதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை. அந்த பெயர் ஏதோ மந்திரம் போட்டதுபோல் என்னை இழுத்தது. இத்தனை மனிதர்கள் சாரை சாரையாக போகிறார்கள் என்றால் அது விசேஷம் மிக்கதாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.
நான் போக வேண்டிய ஊரைத் துறந்து குருசுமலைக்கு பஸ் ஏறினேன். குமரி மாவட்டத்தின் மிக உயரமான மலை அதுதான். கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து 3,600 அடி உயரம் கொண்டது. தமிழக கேரள எல்லை பகுதியில் எல்லைக் கோடு போல் உயர்ந்து நிற்கிறது இந்த மலை. இதற்கு காளி மலை, குரிசு மலை, கொண்டகெட்டி, கூனிச்சி, வரம்பொதி என்று ஏராளமான பெயர்கள் உள்ளன.
நான் சென்றிருந்த சமயம் குருசுமலையில் திருவிழா கூட்டம் கால்வைக்க இடமில்லை. வருடந்தோறும் புனித வெள்ளிக்கு முந்தைய இருவாரங்களுக்கு முன் வரும் புதன் கிழமையில் இந்த கடினமான கொண்டாட்டம் தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது. அதன் பின் புனித வெள்ளி அன்று மீண்டும் கொண்டாட்டம் தொடங்கி முடிகிறது. இந்த 6 நாட்களில் லட்சக்கணக்கான மனிதர்கள் குருசுவை தரிசனம் செய்து மகிழ்கிறார்கள்.