
print
இந்தியாவின் மிகப் பெரிய நகரம். வர்த்தகத்தின் தலைநகரம். உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் இரண்டாவது பெரிய நகரம் என்று ஏகப்பட்ட பெருமைக்கு சொந்தமானது இந்த மும்பை நகரம். இந்த நகரம் பிரிட்டனுக்கு சீதனமாக கொடுக்கப்பட்ட ஒரு நகரம் என்றால் நம்பமுடிகிறதா? வேறுவழியில்லை, நம்பித்தான் ஆகவேண்டும்.
![]() |
இந்தியா கேட் |
‘மும்பை’ என்ற பெயர் ‘மும்பா தேவி’ என்ற பெண் தெய்வத்தின் பெயரில் இருந்து வந்தது. மராத்திய மொழியில் ‘அய்’ என்பது அம்மாவைக் குறிக்கும். ‘மும்பா அம்மா’ என்பதை மராத்திய மொழியில் அவர்கள் மும்பை என்று அழைத்தார்கள். 16-ம் நூற்றாண்டில் மும்பையைக் கைப்பற்றிய போர்த்துக்கிசீயர்கள் ‘பொம்–பே’ என்று அழைத்தார்கள். போர்த்துக்கிசீய வார்த்தையான ‘பொம்’ என்பது ‘நல்ல’ என்று அர்த்தத்தை தரும். ‘பே’ என்பது வளைகுடாவைக் குறிக்கும். நல்ல வளைகுடா என்பதை அவர்கள் ‘பொம்பே’ என்று அழைத்தார்கள்.
![]() |
தாஜ் ஹோட்டல் |
மும்பை என்பது 7 தீவுகளின் தொகுதி. மும்பை, பரேல், மச்சாகாவ், மாகிம், கொலாபா, வோர்லி, ஓல்டு வுமன் என்ற இந்த ஏழு தீவுகளில் பெரியது மும்பைதான். இது பெரும் பாரம்பரிய வரலாறு கொண்ட நகரம். மகத பேரரசரான அசோகர் மும்பையை ஆட்சி செய்திருக்கிறார். கி.பி.150-ல் கிரேக்கத்தின் புவி ஆய்வாளரான தலாமியா இதனை ‘ஏழு தீவுகளின் கூட்டம்’ (ஹெப்டானீசியா) என்று அழைத்தார். அதன்பின் பல ஆட்சியாளர்கள் மும்பையை ஆண்டனர். கி.பி.1348-ல் குஜராத் முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்த தீவுகளை அவர்களுடன் சேர்த்துக் கொண்டார்கள். கிட்டத்தட்ட கி.பி.1494 வரை குஜராத் சுல்தான்களுக்கும், பாமினி சுல்தான்களுக்கும் இந்த தீவுகளுக்கு உரிமை கொண்டாடி போர் நடந்தன.
![]() |
சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் |
அதனைத் தொடர்ந்து கடற் கொள்ளையர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கி.பி.1534 டிசம்பர் 24-ல் போர்ச்சுகிசீயர்கள் குடியேற்றமும் நிகழ்ந்தது. அப்போது அவர்கள் பேசின் உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ள கட்டாயப்படுத்தினர். அதன்படி 7 தீவுகளும், அருகில் இருந்த மூலோபாயா நகரமும் போர்ச்சுகிசீயர்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்கு ரோமன் கத்தோலிக்க மதத்தை பரப்புவதில் ஆர்வமாக இருந்தனர். அதற்காக பல தேவாலயங்களை உருவாக்கினார்கள்.
![]() |
தீவுகளை இணைக்கும் பாலம் |
இந்த நிலையில் கி.பி.1661-ம் ஆண்டு மே மாதத்தில் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸுக்கும், போர்ச்சுக்கலின் அரசர் நான்காம் ஜானின் மகள் பிரகன்சாவின் கத்தரீனுக்கும் திருமணம் நடைபெற்றது. அதில் இந்த 7 தீவுகளும் வரதட்சணையாக சார்லஸுக்கு போர்ச்சுக்கல் மன்னர் வழங்கினார். இப்படிதான் மும்பை பிரிட்டீஷார் கைகளுக்கு வந்தது.
கி.பி.1668 மார்ச் 27ன் ராயல் மசோதாவால் ஆண்டுக்கு 10 பவுண்ட் என்ற அடிப்படையில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் இந்த தீவுகளை ஏலத்தில் எடுத்து கொண்டது. கி.பி.1661-ல் 10,000ஆக இருந்த மக்கள்தொகை கி.பி.1675-ல் 60,000ஆக விரைவாக அதிகரித்தது.கி.பி.1687-ல், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையிடத்தை சூரத்தில் இருந்து மும்பைக்கு மாற்றியது.
![]() |
வேல்ஸ் அருங்காட்சியகம் |
இறுதியாக இந்நகரம் பம்பாய் பிரசிடெண்சியின் தலைமையிடமாக மாறியது. மாற்றத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து நிறுவனங்களின் தலைமையிடமாக பம்பாய் உருவாக்கப்பட்டது. அதன்பின் கி.பி.1869-ல் திறக்கப்பட்ட சூயஸ் கால்வாய், அரேபிய கடலில் உள்ள மிகப்பெரிய கடற்துறைமுகங்களில் ஒன்றாக பம்பாயை மாற்றியது. அதன்பின் அதன் வளர்ச்சி தங்குதடையில்லாமல் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
![]() |
துறைமுகம் |