
இரண்டு நாளுக்கு ஒருமுறை செம்மரக் கடத்தலில் தமிழர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களை ஆந்திர அரசு கைது செய்கிறது. உடனே இங்கு கண்டனக்குரல்கள் எழுகின்றன. இது ஒரு தொடர்கதையாகவே தொடர்கிறது. ஏன் இப்படி உயிரைக்கொடுத்து மரத்தை வெட்டுகிறார்கள், என்று பார்த்தால் இதன் பின் மிகப் பெரும் பணத்தாசை அரசியல் ஒளிந்திருக்கிறது. முன்பு மணல் கடத்தல், கனிமவளங்கள் கடத்தல் போன்ற தொழிலில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்தவர்களுக்கு இப்போது கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பேராசை வந்துவிட்டது. அதற்கு வசமாக வந்து மாட்டிக்கொண்டதுதான் செம்மரம்.
இதனால் உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இதன் தேவை அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஒரு டன் ரூ.20 லட்சம் முதல் 40 லட்சம் வரை விலைபோகிறது. இதுவே வெளிநாடுகள் என்றால் ரூ.60 லட்சத்தில் தொடங்கி 1.20 கோடி வரை விலை கிடைக்கும். செம்மரங்களை கடத்த இந்த பணத்தாசை போதாதா? ஒருகாலத்தில் வயிற்றுப்பிழைப்புக்காக மரத்தை வெட்டியவர்கள் இன்று ஆடம்பர வாழ்க்கைக்காக வெட்டுகிறார்கள். பொறியியல் படித்த பட்டதாரி இளைஞர்கள் கூட விரைவில் பெரும் பணம் சம்பாதிக்க காரில் செம்மரக்கட்டைகளை கடத்துகிறார்கள்.
இப்படி செம்மரம் வெட்டித் தருபவர்களுக்கு ஒரு நாளைக்கு 7000 ரூபாய் வரை கூலி கொடுக்கப்படுகிறது. அதனால்தான் ஆபத்து எனத் தெரிந்தும், இந்த மக்கள் குறுகிய காலத்தில் நிறைய வருமானம் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் செம்மரம் வெட்டுவதற்கு செல்கிறார்கள். ஒருவர் ஒரு நாளில் இவ்வளவு சம்பாதித்தார் என்று தெரிந்ததும், பக்கத்தில் இருப்பவர்களும் இதே வேலைக்கு செல்ல துடிக்கிறார்கள். இதனால் செம்மரம் வெட்டுவதற்கு நிறைய தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த துடிப்பை காசாக்க பெரும் பண முதலைகள் பணத்தோடு இவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள்.
வெட்ட வெட்ட துளிர்க்கும் தன்மை கொண்டதுதான் செம்மரங்கள்.
மனிதர்கள் வெட்டப்பட்டால் மீண்டும் துளிர்ப்பதில்லையே..!