Header Banner Advertisement

செவன் ஸ்டார் கேக் செய்முறை


002

print

இனிப்புகள் செய்ய ஆரம்பிக்கிற யாராவது இதை ஒருமுறையாவது செய்யாமல் இருந்திருப்பார்களா என்பது ஆச்சரியம் தான். அந்த அளவுக்கு பிரபலமான, சுலபமான ஒன்று. எந்தத் தவறும் நேர்ந்துவிடாது என்பதால் யாரும் தைரியமாகச் செய்யலாம்.

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1 கப்
பால் – 1 கப்
நெய் – 1 கப்
சர்க்கரை – 3 கப்
ஏலப்பொடி

seven star cake

செய்முறை:

கடலை மாவை கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.

தேங்காயை அதன் தோல் சேர்ந்துவிடாமல் வெள்ளைப் பகுதியாக மட்டும் துருவி, 1 டேபிள்ஸ்பூன் பால் விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு அடிகனமான வாணலியில், காய்ச்சி ஆறிய பாலில் கடலை மாவை கட்டிகளில்லாமல் கலந்து கொள்ளவும்.

அத்துடன் நெய், சர்க்கரை, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து அடுப்பில் வைத்து நிதாமான சூட்டில் கிளற ஆரம்பிக்கவும்.

கைவிடாமல் கிளறி வாணலியில் ஒட்டாமல், நுரைத்துக் கொண்டு வரும்போது ஏலப்பொடி தூவி, இறக்கவும். இந்தப் பதத்தில் கேக் மாதிரி மென்மையாக வரும்.

இன்னும் சிறிது நேரம் இழுத்துக் கிளறியும் இறக்கலாம். இந்தப் பதத்தில் பர்பி மாதிரி இறுக்கமாக வரும். ஆனால் தேங்காய் சேர்த்திருப்பதால் மைசூர்பாகு மாதிரி பாறையாகிவிடும் பயம் இதில் இல்லை. இதுவும் சாப்பிட மென்மையாகவே இருக்கும். சொல்லவருவது, தெரியாமல் பதம் தாண்டி இறக்கிவிட்டாலும் தவறாகிவிடாது. சுவையாகவே இருக்கும்.

ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, சிறிது ஆறியதும் வேண்டிய வடிவில் வில்லைகள் போடலாம்.

வாயில் போட்டதும் மைசூர் பாகா, தேங்காய் பர்பியா என்று நாக்கு ஒரு நொடி குழம்பும்.

குழம்பட்டும். ஆனால் இரண்டையும் விட இந்த ஸ்வீட் சுவையாக இருக்கும். புதிதாகச் செய்பவர்கள் இதிலிருந்து ஆரம்பித்தால் ஸ்வீட் செய்வதில் ஒரு தைரியம் வரும்.