
print
![]() |
பிரமாண்டமான சைக்கிள் பாலம் |
நம் நாட்டில் சைக்கிள் ஓட்டுபவர்களை மனிதனாகக் கூட மதிப்பதில்லை. அது ஏழைகளின் வாகனம். அதை ஓட்டுபவன் ஏழை என்ற எண்ணமே இதற்கு காரணம்.
ஆனால், மேலைநாடுகளில் சைக்கிள்களைக் கொண்டாடுகிறார்கள். சுற்றுச்சூழலை கெடுக்காத ஒரு வாகனம் என்பதால் அதற்கு ஏகப்பட்ட மவுசு. மேலும் அதை ஓட்டுபவர்களுக்கு நல்ல ஆரோக்கியம். செலவு வைக்காத வாகனம் என்று பல நன்மைகள் அதில் இருப்பதால் வெளிநாடுகளில் சைக்கிள்களுக்கு நல்ல மரியாதை.
பல நாடுகள் சைக்கிள்களுக்கு என்று தனியாக சாலைகளை அமைத்துள்ளன. அந்த நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு சைக்கிள்கள் செல்வதற்கென்றே மிகப் பெரியப் பாலத்தை கட்டி முடித்து மக்கள் பயன் பாட்டுக்கு திறந்துவிட்டிருக்கிறது பெல்ஜியம் நாடு.
பெல்ஜியம் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று ப்ருகேஸ். இது ஒரு பழமையான நகரமாகும். யுனெஸ்கோவின் பாரம்பரிய பகுதி பட்டியலில் இந்த நகரமும் உண்டு. இங்கு வாழும் மக்கள் ஒரு சைக்கிள் பிரியர்கள். இந்த நகரின் மொத்த பரப்பளவு 138.4 சதுர கி.மீ. ஆகும். இங்கு 1,17,000 மக்கள் வாழ்கிறார்கள். இங்கு 4-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப் பழமையான தேவாலயங்கள், கட்டிடங்கள் என்று பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. இவற்றைப் பார்ப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
அவர்களில் பலரும் சைக்கிளில் நகரை சுற்றி பார்க்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு வசதியாக பல பாதைகளை அமைத்துள்ளனர். அதில் சமீபத்தில் இவர்கள் அமைத்துள்ள சைக்கிள் பாலம் அதற்குள் உலக அளவில் புகழ்பெற்று விட்டது. கீழே ஒரு நெடுச்சாலை, அதன்மீது ஒரு சுற்றுச்சாலை என்று சிக்கலான இந்த சாலைகளை மணிக்கு 300 கார்களும், 300 பைக்குகளும் கடந்து போகும் இந்த சாலையை ஒரு சைக்கிள் ஒட்டி கடப்பது கடினம்.
இந்த கார்களுக்கு இணையாகவே இங்கு சைக்கிள்களும் அதிகமாக இருக்கின்றன. இவர்கள் சுலபமாக கடந்து போவதற்காக சைக்கிள்கள் மற்றும் நடந்து செலபவர்களுக்காக பிரமாண்டமான ஒரு பாலத்தை அமைத்திருக்கிறது பெல்ஜிய அரசு.
நம் நாட்டில் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள் இருவருக்குமே மதிப்பில்லை. ஆனால், இங்கும் சைக்கிள்களைக் கொண்டாடும் காலம் விரைவில் வரும். சுற்றுச்சூழல் அதைக் கொண்டு வரும்.