Header Banner Advertisement

‘சொல்லிட்டாளே அவ காதல..!’


MGM

print
றைந்திருந்து பார்ப்பதில் ஒரு மர்மம் இருக்கத்தான் செய்கிறது..! இலை மறைவாக இருப்பதில் இன்பம் பெருகத்தான் செய்கிறது..! ஜோக் நீர்வீழ்ச்சியை மழைக்காலங்களில் பார்ப்பவர்கள் இப்படிதான் சொல்கிறார்கள்.

மேகம் மேலிருந்து கீழிறங்கி பார்வையை மறைத்திருக்கும்போது கேட்கும் அருவி ஓசை, இனம்புரியா மர்மத்தைக் கொடுக்கும். அதே மேகம் சற்று கலைந்து விலகும்போது எதிரில் தெரியும் பிரமாண்ட நீர்வீழ்ச்சி கண்களை மயக்கும்.. மனதை சொக்க வைக்கும்..! மீண்டும் மேகம் மறைக்கும்.. மர்மம் கொடுக்கும். மீண்டும் விலகும்.. அருவியின் அழகு மனதை அள்ளும்..! இப்படி திரும்ப திரும்ப நடக்கும்..! ஆனால், இப்போது கொஞ்ச நாட்களாய் அருவியின் இரைச்சல் யாருக்கும் கேட்பதில்லை. பதிலாக ‘சொல்லிட்டாளே அவ காதல.. சொல்லும்போதே சுகம் தாளல..!‘ என்ற இனிமைதான் எல்லோருக்கும் கேட்கிறது.

‘கும்கி’ படத்தில் எம்.சுகுமார் தனது கேமராவில் பிரித்து மேய்ந்திருக்கும் அருவி இதுதான். இன்னும் பார்க்க மாட்டோமா என்று ஏங்கவைத்த இந்த இயற்கை பாடல் காட்சியை நேரில் பார்த்தால் மனதை பறிகொடுக்காமல் இருக்க முடியுமா..?

கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் தான் ஜோக் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்தியாவின் மிக உயரமான அருவியும் இதுதான். 830 அடி உயரத்தில் இருந்து வெள்ளிக்கம்பிகளை உருக்கிவிட்டது போல, பள்ளத்தை நோக்கி பாய்கிறது இந்த நீர்வீழ்ச்சி.

பசுமை, குளுமை இணைந்த இயற்கையை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு ஜோக் நீர்வீழ்ச்சி சொர்க்கம். அது மட்டுமல்ல, வனவிலங்கு பிரியர்களையும் இந்த இடம் கிறங்க வைக்கும்.

மலைகள் சூழ்ந்த இடங்கள், காடுகள், நதிகள் என இயற்கை அன்னை தன் அழகு பொக்கிஷங்களை கொட்டிவைத்திருக்கும் இடம் இது. இங்கிருந்துதான் ஷராவதி, துங்கபத்ரா, காளி, கங்காவதி, தடதி என்று ஆறு நதிகள் உற்பத்தியாகின்றன.

இந்தியாவின் மிகப் பெரிய பல்லுயிர் மண்டலமும் இதுதான். இங்கு ஏழு வனவிலங்கு சரணாலயங்களும் பூங்காக்களும் இருக்கின்றன. இவற்றில் மிக முக்கியமானது பத்ரா வனவிலங்கு சரணாலயம்தான். நாட்டின் மிக முக்கிய புலிகள் சரணாலயத்தில் ஒன்று இது. இவைகள் எல்லாமே பசுமையும் புத்துணர்வும் தருவதாக உள்ளன.

ஜோக் நீர்வீழ்ச்சி, ஷராவதி ஆற்றின் வீழ்ச்சிதான். இது ‘லிங்கன்மாக்கி’அணைக்கட்டிலிருந்து பிரிந்து வருகிறது. மேலிருந்து அருவி கீழே விழும்போது நான்கு பிரிவுகளாக பிரிந்து விழுகிறது. அதற்கு ராஜா, ராணி, ராக்கெட், கர்ஜனை என்று நான்கு பெயர்கள் வைத்திருக்கிறார்கள்.

இருப்பதிலேயே உயரமானது ‘ராஜா’. உயரம், பிரமாண்டம், வேகம் என்ற குணாதிசயங்களுக்கு சொந்தக்காரன் இந்த அருவி. அடுத்து ‘ராணி’, புரிந்திருக்குமே..! ஆமாம் அழகுதான்! இந்த அருவி பேரழகு, அடர்த்தியான நீர்த்துளிகள் மொத்தமாக பறந்து கீழே இறங்குவதுபோல் அழகு பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்.

‘ராக்கெட்’ என்பது செங்குத்தாக ராக்கெட் வேகத்தில் கொட்டும் அருவி. ‘கர்ஜனை’ என்பது இருப்பதிலேயே உயரம் குறைவான அருவி. உயரத்தில் குறை இருந்தாலும், இது உருவாக்கும் பேரிரைச்சல் காதை தவிடு பொடியாக்கும். அதனால்தான் இந்த அருவிக்கு அப்படியொரு பெயர்.

இந்த நான்கு அருவிகளும் நிரந்தரமானவை வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டும். இதுபோக பருவமழை, கனமழை காலங்கள் வந்துவிட்டால் ஏகப்பட்ட புது அருவிகள் உருவாகிவிடும். பல அருவிகள் மொத்தமாக தண்ணீரைக் கொட்டும். அப்போது இந்த நான்கு பிரதான அருவிகள் இன்னும் அழகு பெரும்.

ஜோக் அருவியின் அழகை விட்டு பிரிந்துபோக முடியாமல் இருந்தாலும், இதன் அருகில் பார்ப்பதற்கு வேறு இடங்களும் உள்ளன. அதில் ‘மந்தகட்டே பறவைகள் சரணாலயம்’சிறப்புமிக்க பொழுதுபோக்கு. இந்த சுற்றுவட்டாரங்களில் சாப்பிடுவதற்கென்று சில உணவுகளும் உண்டு.

கருணைக் கிழங்கு இலைகளை கொண்டு செய்யப்பட்ட ‘ரோடு’, பலாப்பழ பன், பேன் கேக்குகள், பஜியாஸ், கொழுக்கட்டை என எல்லாமே வித்தியாசமான மற்ற இடங்களில் கிடைக்காத உணவு வகைகள். அதன் ருசி அறிவது சுவையான அனுபவம்.

மழைக்காலங்களில் மேகமூட்டமாய் தெரியும் ஜோக் நீர்வீழ்ச்சி, கோடையில் சூரிய ஒளிபட்டு அதி அற்புதமான வானவில்லை உருவாக்கும்.எப்படிப் பார்த்தாலும் ஜோக் அழகுதான்.

பிரிந்துபோக முடியாமல் வசீகரத்தால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் இந்த இயற்கை காதலனிடம் இருந்து மனதை பறிக்கொடுத்து, திரும்பும்போது நம் மனதில் மீண்டும் ஒலிக்கிறது..

‘சொல்லிட்டேனே இவ காதல..!’எப்படி போவது?

பெங்களூரில் இருந்து 270 கி.மீ. தொலைவில் ஷிமோகா உள்ளது. பஸ், ரயில் என்று வசதிப்படி எதில் வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

எங்கு தங்குவது?

‘ராயல் ஆர்கிட் ஹோட்டல்’ தங்குவதற்கு ஏற்றது. சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட் அருகில் உள்ளது. முன்பதிவு செய்து போவது நல்லது. போன்: 08182-401999.