Header Banner Advertisement

ஜலஸ்தம்பம்! சித்து செய்ய முடியுமா உம்மால்???


002

print

இராமகிருஷ்ண பரமஹம்சர் யோகத்தில் மூழ்கி இருந்தார்!

இமயமலைத் துறவி ஒருவர் அவர் முன் வருகிறார்!”என்ன இராமகிருஷ்ணரே…உங்களைப் பற்றிப் பலதும் பெருசா சொல்றாங்க? அதைக் கேள்விப்பட்டு வந்தேன்! ஆனா முகத்தில் ஒரு தேஜஸே இல்லையே! போதாக்குறைக்கு மனைவியோடு வாழ்ந்துகிட்டு இருக்கீங்க!
காளி கோயில் பூஜாரி-ன்னாலே சகல ஞானங்களும் கைவந்து விடும் என்ற நினைப்பா? அதுக்கெல்லாம் ஞானம் கைகூடணும், யோகம் செய்யணும்! ஆத்ம விசாரம் செய்யணும்! இதெல்லாம் ஞானிகளால் மட்டுமே முடியும்! என்றைக்கு இருந்தாலும் பூஜாரி பூஜாரி தான்! ஞானி ஞானி தான்!”

(சிரிப்பு)
“என்ன சிரிக்கிறீர்? உம்ம பின்னாடி சின்னூண்டு சிஷ்யக் கூட்டம் தான் இருக்கு! அப்புறம், நீங்க என்ன ஒரு பெரிய ஆச்சார்யர்?”

(சிரிப்பு)

“நான் ஆச்சார்யன் அல்ல மகாஞானியே! வெறும் ஆச்சர்யன்!
இறைவன் உண்டாக்கிய பல ஆச்சர்யங்களில், அடியேனும் ஒரு ஆச்சர்யம்! அவ்வளவு தான்!”
“இப்படி வார்த்தை விளையாட்டு விளையாடினால், நான் மயங்கி விடுவேன் என்று நினைத்தீரா? வார்த்தை எவனும் விளையாடுவான்! சித்து விளையாடத் தெரியுமா உமக்கு?”

“தெரியாது ஐயா!”

“இவ்வளவு நாள் என்ன தான் பண்ணிக்கிட்டு இருந்தீர்? உம்மையும் ஏமாற்றிக் கொண்டு, உம்ம சீடர்களையும் ஏமாற்றிக் கொண்டு…என்ன தான் பெருசா சாதிச்சீர்?”
“எதுவும் சாதிக்கலை ஐயா! அம்பாளின் காளி பக்தியில் களித்திருந்தேன்! அவ்வளவு தான்!”
“இது ஒரு பூஜாரி வேலை! ஒரு ஆச்சார்யன் வேலை அல்ல!”

“ஓ…..”

“எல்லாரும் சொல்வது போல், உம்மிடம் பல சித்திகள் இருக்கும் என்று நினைத்துத் தான் வந்தேன்!
ஆனால் நீரே மாணவர்களிடம் இருந்து தான் தெரிந்து கொள்கிறீர் போலும்! நல்ல வேடிக்கை! நான் வருகிறேன்! இனியாவது திருந்துங்கள்! ஆத்ம ஞானத்தைத் தேடப் பாருங்கள்”

“ஞானியே! ஒரு நிமிடம்! என்னைப் பல கேள்விகள் கேட்டீர்கள்! இது தெரியுமா? அது தெரியுமா? என்றெல்லாம் கேட்டீர்கள்…..சரி, எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன்! நீங்கள் இத்தனை நாள் யோகத்தில் அடைந்த சாதனையை, அடியேனுக்குச் சொல்லிவிட்டுச் செல்லுங்களேன்! உங்களையே முன் மாதிரியாக வைத்து நானும் கடைத்தேறப் பார்க்கிறேன்!”

“ஹா ஹா ஹா…சரி கேளும்…

பல ஆண்டுகள் இமய மலைச் சாரலில் தவம் இருந்த தப்ஸ்வி நான்! பல சித்தர்களை, அவர்கள் உலாவும் குறிப்புகளை நேரடியாகப் பார்த்து இருக்கேன்! என் யோகத்தின் பயன் என்ன தெரியுமா? –
ஜலஸ்தம்பம்!”

“அப்படின்னா என்ன ஞானியே?”

“ஆகா…இது கூடத் தெரியாதா?

பரமஹம்சர் என்று பட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் உமக்கு இது கூடத் தெரியாமல் போனது ஆச்சர்யம் தான்! நான் சொன்னது சித்த புருஷ லட்சணம்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சித்தி! அணிமா, கரிமா, மகிமா, லகிமா என்று பல சித்திகள்! அதில்,
ஜலஸ்தம்பம் என்பது ஜலத்தின் மேலே நடப்பது!

நான் நீர் மேலேயே நடப்பேன் இராமகிருஷ்ணரே!

தெரியுமா உமக்கு? அதுக்கெல்லாம் சித்தி அருளப் பெற்று இருக்கணும்! தவம் ஐயா தவம்!”
(இராமகிருஷ்ணர் விழுந்து விழுந்து சிரிக்கிறார்…குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார்…ஞானிக்குக் கோபம் பொத்துக்கிட்டு வருகிறது…)

“உமக்கே கேவலமாக இல்லை? இப்படிச் சிரிக்கிறீர்களே? நான் சபித்தால் என்ன ஆவீர் தெரியுமா?”
“அச்சோ! மன்னியுங்கள் மகா ஞானியே! நான் உங்களை இழிவுபடுத்த நினைக்கவில்லை! என்னையும் மீறி, என் காளி சிரித்து விட்டாள்…

கொஞ்சம் பொறுங்கள்…அவள் என்னை ஏதோ சொல்லச் சொல்கிறாள்…உங்களுக்குச் சொல்லச் சொல்கிறாள்…சொல்கிறேன்!


ஏன்பா…ஓடக்காரா…ஹூக்ளி ஆற்றைத் தாண்டிப் போகனும்! எவ்ளோ-ப்பா?”
“பத்து பைசா சாமீ! நீங்க பாக்க சாமீ மாதிரி இருக்கீங்க ரெண்டு பேரும்! பரவாயில்ல, சும்மாவே படகுல குந்திக்குங்க! காசு வேணாம்!”

“பார்த்தீங்களா ஞானியே! ஒரு பத்து பைசா கொடுத்தா, இவனே “ஜலஸ்தம்பம்” பண்ணிடுவானே! ஹா ஹா ஹா!”]

(ஞானி திடுக்கிடுகிறார்…)

“இதுக்கு நீங்க…இத்தனை வருஷம் பிரயாசைப்பட்டு, யோகப்பட்டு, தவப்பட்டு, அணிமா, மகிமா, கரிமா, லகிமா-ன்னு பல மாக்களை எல்லாம் சாதனை பண்ணி…கடைசீல உங்க யோகத்தின் மதிப்பு வெறும் பத்து பைசா தானா?”

(ஞானிக்குத் தூக்கி வாரிப் போடுகிறது…..)

“உங்க ஜலஸ்தம்பத்தால் யாருக்கென்ன லாபம், சொல்ல முடியுமா? இத்தனை மக்களும் ஆற்றைக் கடக்க உம்ம “ஜலஸ்தம்பம்” உதவுமா?”

(மெளனம்)

“ஜலஸ்தம்பம்-ன்னு எங்கே பிரமாணம் ஆச்சு உங்களுக்கு? சொல்லுங்களேன்”

“சித்த நூல்களில் எல்லாம் உள்ளது இராமகிருஷ்ணரே! யோக ரகஸ்யங்களில் அதுவும் ஒன்னு! யோகத்தைக் கேவலமாக மட்டம் தட்டி விட்டீரே, உம்ம வார்த்தை விளையாட்டால்! ச்சே!”‘
“சித்த நூல்கள், யோக ரகஸ்யம் இதெல்லாம் அற்புதமானது ஞானியே! அடியேன் அதை மட்டம் தட்டவில்லை! நான் வார்த்தை விளையாடவும் இல்லை!

என் வார்த்தையின் உண்மை, உங்கள் மனத்தில் விளையாடி விட்டது! அதான் வார்த்தை+விளையாட்டு!”

(மெளனம்)

“ஜலஸ்தம்பம்-ன்னா என்ன? சித்த புருஷர்கள் ஆற்றின் ஜலத்தையா ஸ்தம்பம் செய்யச் சொன்னார்கள்?ஹா ஹா ஹா!

சம்சார ஜலம் = பிறவிக் கடல் = அதை உம்மால் ஸ்தம்பம் செய்ய முடியுமா?
சம்சார ஜலஸ்தம்பம்! செய்வீரா? சாதனை பண்ணி இருக்கீரா?
சம்சார ஜலஸ்தம்பம்! பகவத் சரணார விந்தம்! அதைச் சாதனை பண்ணி இருக்கீரா?
சம்சார ஜலஸ்தம்பம்! திருவடி ஓடம்! அதில் பயணித்து இருக்கீரா?”
(ஸ்தம்பம் செய்த ஞானி இப்போ ஸ்தம்பித்து நிற்கிறார்)

“இவ்வளவு நாட்கள் ஆன்மீக வாழ்க்கையை வீணடித்து விட்டேன் என்று என்னைச் சொன்னீர்களே, மஹாப்ரபு! ஆனால் ஜலஸ்தம்பம் என்றால் என்ன என்றே தெரியாமல்,
ஏதோ பைசா பெறாத ஒன்றை ஜலஸ்தம்பம் செய்யத் தெரிந்து கொண்டதாக நினைத்து இப்படி ஏமாந்து விட்டீர்களே? மகாஞானியே!”

(ஞானி, இராமகிருஷ்ணரின் காலடிகளில்
நெடுஞ்சாண்கிடையாக வீழ்கிறார்! நாமும் வீழ்வோம்!)

புத்தகச் சுரைக்காய்களைக் கரைத்துக் குடித்து விட்டு,
பலதும் படித்துப் படித்து,
எதைப் பிடிக்கப் படிக்கிறோம் என்றே தெரியாமல், மேலும் படித்துப் படித்து,
சொந்தக் கருத்துகளையும், தன் கட்சியையும் நிலைநாட்ட மட்டுமே
தேடித் தேடிப் படித்து…
கண்டதே காட்சி, கொண்டதே கோலம்! கண்டதே கருத்து, கொண்டதே பதிவு! என்று இருக்கும் நாமும்…..
பரமஹம்சர் காலடியில் வீழ்வோம்! பரம ஹம்சம் பெறுவோம்!
மனம் என்னும் தோணி பற்றி, “மதி” என்னும் கோலை ஊன்றி,
சினம் என்னும் சரக்கை ஏற்றி, செறி கடல் ஓடும் போது,
மனன் என்னும் பாறை தாக்கி, மரியும் போது அறிய ஒண்ணாது,
“உனை” எண்ணும் உணர்வை நல்காய்! ஒற்றியூர் உடைய கோவே!

திருச்சிற்றம்பலம்!

COURTESY & SOURCE :  : சசி ராமா