
ஜவ்வரிசி அப்பளம் – 1
தேவையான பொருள்கள்:
ஜவ்வரிசி – 250 கிராம்
பச்சை மிளகாய் – 8
உப்பு
பெருங்காயம்
எலுமிச்சம் பழம் – 2
செய்முறை:
பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரம் அல்லது குக்கரில் தண்ணீர் வைத்து, கொதித்ததும் ஜவ்வரிசியைச் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
நிதானமான சூட்டில் அல்லது சிம்மிலேயே எரியவிட்டு, ஒரு கொதி வந்ததும் அரைத்த மிளகாய் விழுதைச் சேர்க்கவும்.
தண்ணீர் தேவையானால் சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஜவ்வரிசி பாதி வெந்ததும், மேல் பாகம் கண்ணாடிபோல் ஆகி, உள்ளே சிறிதுமட்டும் வெள்ளை தெரியும்போது மூடிவைத்து, அடுப்பை அணைத்துவிடவும்.
உள் சூட்டிலேயே இன்னும் சிறிது வெந்து கலவை ஆறியதும், எலுமிச்சைச் சாறு சேர்த்து சுவைத்துப் பார்த்து திருத்தலாம்.
கெட்டியான விழுதாக இருக்கும் இந்தக் கலவையை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து, தண்ணீரைத் தொட்டுத் தொட்டு, கையால் பெரிதாக அப்பளமாகத் தட்டவும்.
இரண்டு பக்கமும் வெயிலில் காய்ந்ததும் எடுத்துவைத்து விரும்பும்போது எண்ணெயில் பொரிக்கலாம்.
இந்த வகை அப்பளத்திற்கு ஜவ்வரிசிக்கு மொத்தமாக நீர்விட்டு கொதிக்கவிடக் கூடாது. சிறிது சிறிதாக குளிர்ந்த நீர் விட்டு கொதிக்கவிட்டால்தான் ஜவ்வரிசி ஒட்டாமல் வெந்து, கரையாமல் முத்து முத்தாக இருக்கும்.
தக்காளி ஜவ்வரிசி அப்பளம்:
கால்கிலோ ஜவ்வரிசிக்கு கால் கிலோ தக்காளி சேர்த்துக் கொள்ளவேண்டும். தக்காளியை லேசாக வெந்நீரில் கொதிக்கவிட்டு தோலை நீக்கி, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொண்டு, மேலே சொன்னபடி தயாரிக்கலாம். கொதிக்கும் ஜவ்வரிசிக் கலவையில் பச்சைமிளகாய் விழுதைச் சேர்க்கும்போது தக்காளி விழுதையும் சேர்க்கவேண்டும். எலுமிச்சைச் சாறு இதற்குத் தேவை இல்லை.
=============================================================
ஜவ்வரிசி அப்பளம் – 2
தேவையான பொருள்கள்:
ஜவ்வரிசி – 250 கிராம்
பச்சை மிளகாய் – 4
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம் பழம் – 1
உப்பு
பெருங்காயம்
செய்முறை:
ஜவ்வரிசியை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
குக்கரில் மேலும் ஒரு பங்கு தண்ணீர் வைத்து குழைய வேகவிடவும்.
மறுநாள் காலை வெந்த ஜவ்வரிசியுடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
எலுமிச்சைச் சாறு, சீரகம் சேர்த்து சுவையை சரிபார்த்துக் கொள்ளவும்.
பிளாஸ்டிக் பேப்பரில் ஒரு பெரிய கரண்டி மாவை விட்டு வட்டமாக அப்பள வடிவில் இழுக்கவும்.
மறுநாள் அடுத்தப் பக்கமும் திருப்பிப் போட்டு, இருபுறமும் காய்ந்ததும் எடுத்து வைத்து தேவைப்படும்போது பொரிக்கலாம்.
இது எக்ஸிபிஷன் அப்பளம் போன்ற சுவையுடன் இருக்கும். நமக்கு விருப்பப்பட்ட அளவில் செய்துகொள்ளலாம்.
வடாம்களுக்குச் சேர்ப்பது போல் அப்பள வகைகளுக்கு புளிப்பு காரம் அதிகம் சேர்க்கத் தேவை இல்லை.
பொதுவாக வடாம் அப்பளம் வகைகளுக்கு நைலான் ஜவ்வரிசியாக இல்லாமல் மாவு ஜவ்வரிசியாக இருந்தால் நல்லது.
பொதுவாக ஜவ்வரிசி வடாம் அப்பளம் வகைகளில் அதிகமாக நீர் விட்டால் லேசாக இருக்கும். பொரித்தால் சிவந்து போவதுடன் பல்லிலும் ஒட்டிக்கொள்ளும். அதனால் நன்கு வேகவைத்து கனமாக இழுப்பதே சரியான முறை.
மைதா ஜவ்வரிசி அப்பளம்:
முதல்நாள் இரவே ஜவ்வரிசியை ஊறவைத்து வேகவைத்து, ஐந்து கப்புக்கு ஒரு கப் அளவு மைதாவை நீரில் கரைத்துச் சேர்த்துக்கிளறி மூடிவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை மேற்சொன்ன முறையில் பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து தயாரிக்கலாம்.
ஓமம் ஜவ்வரிசி அப்பளம் (குட்டீஸ் ஸ்பெஷல்):
பச்சை மிளகாயே சேர்க்காமல், சிறிது தயிர், உப்பு, ஓமம், சிலதுளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து செய்யலாம்.