
தேவையான பொருள்கள்:
ஜவ்வரிசி – 1கப்
தண்ணீர் – 3 கப்
பச்சை மிளகாய் – 6
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 2 சிட்டிகை
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம் பழம் – 1
செய்முறை:
இரவில் ஒரு கப் ஜவ்வரிசிக்கு இரண்டு கப் தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
பச்சைமிளகாய், பெருங்காயம், உப்பு மூன்றையும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் உள்பாத்திரத்தில் மேலும் ஒரு பங்கு தண்ணீர் வைத்து அரைத்த விழுதைச் சேர்த்து சூடாக்கவும்.
தண்ணீர் காய்ந்ததும் ஊறவைத்த ஜவ்வரிசியை(அதன் தண்ணீருடன்) சேர்த்துக் கலந்து, குக்கரை மூடி, வெயிட் போட்டு மிதமான சூட்டில் மேலும் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களுக்கு வைத்திருந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
மறுநாள் காலையில் கசகசாவை வெறும் வாணலியில் லேசாக வறுத்துச் சேர்க்கவும்.
எலுமிச்சைச் சாறு கலந்து சுவையைச் சரிபார்க்கவும். இந்தப் பக்குவத்தில் சிறிது மாவை சாப்பிட்டுப் பார்த்து, தேவையான திருத்தங்களைச் செய்துகொள்ளலாம்.
பிளாஸ்டிக் பேப்பரில் ஒரு சிறிய ஸ்பூனால் எடுத்து வரிசையாக விடவும். (வட்டமாக இருக்கத் தேவையில்லை. குழந்தைகள்கூட செய்யலாம்.)
வெயிலில் நன்கு காயவைத்து, தேவைப்படும்போது எண்ணெயில் பொரிக்கலாம்.
சாதாரண ஜவ்வரிசி வடாத்திற்கு சிறிது தயிர் சேர்த்துச் செய்தால் வெள்ளை வெளேரென்று இருக்கும்.
இந்த ஜவ்வரிசி வடாத்தை பலவிதமான உபரிமசாலாக்களுடன் செய்யலாம் என்றாலும் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே சொல்லியிருக்கிறேன்.
வெங்காய ஜவ்வரிசி வடாம்:
மேற்சொன்ன முறையிலேயே பச்சை மிளகாய் அரைக்கும்போது ஒரு பெரிய வெங்காயத்தையும், அதற்கு ஈடாக அதிகம் ஒரு பச்சை மிளகாயும் அரைத்துச் சேர்க்கவேண்டும்.
தக்காளி ஜவ்வரிசி வடாம்:
ஒரு கப்புக்கு இரண்டு பெரிய தக்காளி என்ற விகிதத்தில் பச்சை மிளகாயுடன் அரைத்துக் கலக்கலாம். அல்லது தக்காளியை தனியாக அரைத்து சாறை வடிகட்டி சேர்த்துக் கொள்ளலாம். சாறு சேர்ப்பதால் தண்ணீரைக் குறைத்து உபயோகிக்கவும். இந்த வகைக்கு, எலுமிச்சை சில துளிகள் சேர்த்தால் போதும்.
பூண்டு ஜவ்வரிசி வடாம்:
10 லிருந்து 15 பூண்டுப் பற்களை பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைக்கவேண்டும்.
பிரண்டை ஜவ்வரிசி வடாம்:
பிஞ்சு பிரண்டையாக எடுத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
வேப்பம்பூ ஜவ்வரிசி வடாம்:
வேப்பம் பூக்களை மரத்திலிருந்து நேரடியாகப் பறித்து அரைக்காமல் அப்படியே கூழோடு கலந்துகொள்ளலாம்.
புதினா கொத்தமல்லி ஜவ்வரிசி வடாம்:
கொத்தமல்லி முக்கால் பங்கும் புதினா கால் பங்கும் இருக்குமாறு கால் கப் எடுத்து பச்சை மிளகாயோடு அரைத்துச் சேர்க்க வேண்டும்.
மிக்ஸியில் இவைகளை விழுதாக அரைக்கமுடியவில்லை என்றால், அவற்றோடு 2 டீஸ்பூன் கூழையே சேர்த்து ஒரு ஓட்டு ஓடவிட்டால் விழுது நைசாக அரைந்துவிடும்.