
ஆனால், தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள் அளவிலும், எடையிலும் பெரியவை. அவற்றை எடுத்துச் செல்ல ஜி.எஸ்.எல்.வி. தேவை. ஏனெனில், ஜி.எஸ்.எல்.வி. எடை கனமான செயற்கைக்கோள்களை பூமியிலிருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு எடுத்து செல்லக் கூடியது. கனமான செயற்கைக்கோளை உயரமான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால் ராக்கெட்டை அதிக அழுத்தம் கொடுத்துச் செலுத்தும் இன்ஜின் வேண்டும். அதற்காகத்தான் கிரையோஜெனிக் இன்ஜின் உருவாக்கப்பட்டது.
கிரையோஜெனிக் இன்ஜினின் சிறப்பு:
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இன்ஜின்கள் முதல் கட்டத்தில் திரவ எரி பொருளுக்குப் பதிலாக HTPB என்ற திட எரி பொருளைப் பயன்படுத்தின. ஜி.எஸ்.எல்.வி.யில் பயன்படுத்தப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின்கள் திரவ நிலையிலிருக்கும் ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்கள். அவற்றை திரவ நிலைக்கு மாற்ற வேண்டும். அதற்கு, ஆக்சிஜனை மைனஸ் 183 டிகிரி செல்சியசுக்கு குளிரூட்டி திரவ நிலைக்கு மாற்றுவர். அதேபோல ஹைட்ரஜன் -253 டிகிரி குளிரூட்டுவர். ராக்கெட் கிளம்பும் சில மணி நேரத்திற்கு முன் இந்த எரிபொருளை நிரப்பத் தொடங்கி, கிளம்ப 30 நொடி இருக்கும் வரை நிரப்பிக் கொண்டிருப்பார்கள்.
![]() |
World First Cryogenic Engine |
இந்த கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தை தங்கள் வசம் வைத்திருந்த நாடுகள் நமக்குத் தர மறுத்துவிட்டன. 1998-ல் பொக்ரானில் நாம் அணு குண்டு வெடித்ததை யடுத்து இது தொடர்பான தொழில் நுட்ப ஆலோச னைகள் பாதியில் நிறுத்தப்பட்டன. கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தைக் கொண்டு இந்திய விஞ்ஞானிகள் அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் ஏவுகணைகளை உருவாக்குகிறார்கள் என்று அபாண்டமாக குற்றம் சாட்டப் பட்டு, நமக்கு தொழில்நுட்பம் மறுக்கப்பட்டது.
இதற்குப் பின்னிருந்த உண்மையான காரணம், வணிகம். அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருந்தார்கள். தகவல் தொடர்புக்கு ஏதுவான பெரிய செயற்கைக் கோள்களை ஒருநாடு விண்ணில் நிலைநிறுத்த வேண்டுமானால் இவர்களைத்தான் சார்ந்து இருக்க வேண்டும். இந்தியா, இந்தத் தொழில்நுட்பத்தில் தேர்ந்துவிட்டால் மிகக் குறைந்த காசுக்கு மற்றவர்களுக்கு செயற்கைக் கோளை ஏவித்தரும் என்று இந்நாடுகள் அஞ்சின.
இந்நிலையில் இந்தியா தனக்கான தொழில்நுட்பத்தை,தாமே வடிவமைப்பது என்று அதிரடியாக முடிவெடுத்தது. தமிழகத்தில் நெல்லைக்கு அருகில் உள்ள மகேந்திர புரியில் Liquid Propulsion System Centre என்கிற அமைப்பை அதற்காக உருவாக்கியது. 2002 பிப்ரவரியிலேயே சில நொடிகளுக்கு விண்ணில் செயற்கைக்கோளை உந்திச் செல்லும் கிரையோஜெனிக் இன்ஜினை நாம் உருவாக்கிவிட்டோம். ஆனால், கிரையோஜெனிக் எந்திரங்களைப் பொருத்தவரை எவ்வளவு நொடிகளுக்கு இது விண்ணைக் கிழித்துக் கொண்டுச் செல்லும் என்பது மிக முக்கியம்.
அதிக நொடிகளுக்கு இயங்கினால்தான் நல்ல உயரத்தில், திட்டமிட்ட பாதையில் செயற்கைக்கோளை நிறுவமுடியும். 2002 செப்டம்பரில் 1000 நொடிகளுக்கு உந்திச் செல்லுகிற இன்ஜின் தயார். அடுத்தடுத்த சோதனைகளில் வெற்றிகண்ட பின்னரே மார்ச் 12, 2003 அன்று கிரையோ ஜெனிக் இயந்திரங்களை தயாரிக்கும் வல்லமையை இந்தியா பெற்றுவிட்டதாக உலகுக்கு அறிவிக்கப்பட்டது.