
![]() |
தஸ்லிமா நஸ்ரின் |
அந்த நாவலின் கதை இதுதான்.
பலதலைமுறைகளாய் பங்களாதேஷில் வாழ்ந்து வரும் ஒரு இந்து குடும்பம், சுத்தமோய் தத்தாவினுடையது. அவருக்கு கிரோன்மோயி என்ற மனைவியும், மாயா என்ற மகளும் சுரஞ்சன் என்ற மகனும் இருந்தனர். சுத்தமோய் ஒரு மருத்துவர். அங்கு வாழும் மக்களுக்காக பல கடினமான வேலைகளை செய்து உயிருக்கு போராடும் பலரையும் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார். நோய்களை தீர்த்து மக்களின் இன்னல்களை போக்கியிருக்கிறார்.
அவர் வாழும் பகுதி முழுவதும் இஸ்லாமிய மக்களே நிறைந்திருந்தனர். மதபேதம் அவர்களிடம் இல்லை. முஸ்லிம்கள் அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதி அன்பு செலுத்தினர்.
திடீரென்று ஒரு நாள் மதக் கலவரம் வெடிக்கிறது. இஸ்லாமிய மதத் தீவிரவாதிகள் சிறுபான்மை இந்து மதத்தினரை அடித்து துன்புறுத்தினர். கொலையும் செய்தனர். ஆனாலும் சுத்தமோய் கொஞ்சமும் பயப்படவில்லை. தன்னையும் தன் குடும்பத்தையும் தன்னை சுற்றியிருக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் சிறிய ஆபத்து கூட நேராமல் பார்த்துக்கொள்வார்கள் என்று முழுமையாக நம்பினார்.
கலவரம் உச்சக்கட்டம் அடைந்தபோது மதத் தீவிரவாதிகள் சுத்தமோய் வீட்டுக்குள் புகுந்து அவரையும் அவருடைய மனைவி மக்களையும் அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி ஆபாசமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தினார்கள். நடுத்தெருவில் நிற்கும்போது கூட ‘இந்த நிலை நிரந்தரமானது அல்ல. இஸ்லாமிய நண்பர்கள் என்னுடைய வீட்டை மீட்டுத்தருவார்கள்’ என்று அவர் நம்பிக்கையோடு இருந்தார்.
அந்த கலவரத்தின்போது அங்கு வாழ்ந்து வந்த இந்து மக்கள் வேறு வழியில்லாமல் தங்கள் நிலம், வீடு, சொத்து அனைத்தையும் விட்டுவிட்டு தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து இந்தியாவிற்கு தப்பி ஓடி வந்தார்கள். கிரோன்மோயி தனது கணவரிடம் நாமும் குடும்பத்துடன் இந்தியாவுக்கு சென்று விடுவோம் என்று நச்சரித்து வந்தார்.
தத்தா அதை ஏற்கவில்லை.
“நான் இங்கு நீண்ட காலமாக டாக்டராக பணியாற்றி வருகிறேன். இங்கு வாழ்ந்து வரும் மக்களின் கொடிய நோய்களைக்கூட குணப்படுத்தியிருக்கிறேன். நமக்கும் நம் குடும்பத்துக்கும் இந்த முஸ்லிம் சகோதரர்கள் கட்டாயம் பாதுகாப்பு கொடுப்பார்கள். நீ பயப்படாதே..!” என்று கூறி மனைவியின் வேண்டுகோளை நிராகரித்துவிட்டார்.
அடுத்த நாள் ஏழு மதத் தீவிரவாதிகள் தத்தாவை தாக்கிவிட்டு அவருடைய 21 வயது மகள் மாயாவை பலவந்தமாக கடத்திக்கொண்டு போய்விடுகிறார்கள். அவளது அண்ணன் சுரஞ்சன் தனது நண்பன் ஹைதரை அழைத்துக்கொண்டு டாக்கா நகரம் முழுவதும் தங்கையை தேடுகிறான். அவள் கிடைக்கவேயில்லை. மாயா பலரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பாள் என்று நாவல் உணர்ச்சிப்பூர்வமாக போகிறது.
“எந்த ஒரு குற்றமும் செய்யாத அப்பாவி மக்களை நம் மதத்தை சேர்ந்த சில தீவிரவாதிகள் துன்புறுத்தி வருகிறார்கள். பெண்களை அவமானப் படுத்துகிறார்கள். இந்த அவலத்தைத் தான் என்னுடைய புத்தகம் லஜ்ஜா விவரிக்கிறது. உண்மையில் நாம் நம் செய்கைகளுக்கு வெட்கி தலை குனிய வேண்டும்.” என்று நஸ்ரின் கூறினார்.
‘ஸ்டேட்ஸ்மேன்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையில் “குரானில் தவறுகள் நிறைந்திருக்கின்றன. அவை திருத்தப்பட வேண்டும்.” என்று நஸ்ரின் பேட்டி கொடுத்தார். அவ்வளவுதான் ஒட்டுமொத்த பங்களாதேசமும் பற்றிக்கொண்டது. மத வெறியர்கள் நஸ்ரினை திட்டி தீர்த்தார்கள். ஃபாத்தா அறிவித்தார்கள். நஸ்ரினை கொல்பவர்களுக்கு 50,000 ரூபாய் பரிசு என்றார்கள்.
1993, செப்டெம்பர் 24-ந் தேதி காலை ஆங்கில செய்தித்தாளை பிரித்துப் பார்த்த நஸ்ரின் உறைந்து போய்விட்டார். அதில் நஸ்ரின் படத்தை பெரிதாக வெளியிட்டு அதன் கீழே ‘இஸ்லாம் மதத்தின் கடவுளை தெய்வ நிந்தனை செய்ததற்காக நஸ்ரினை தேடிக் கண்டுபிடித்து கொன்று விடும்படி இஸ்லாமிய மக்களுக்கு வேண்டுகோள் விடப்படுகிறது.’ என்றிருந்தது.
உலக நாடுகள் நஸ்ரினுக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி பங்களாதேசத்தை நிர்பந்தித்தன. நஸ்ரின் கொல்லப்பட்டால் வங்கதேசத்துடனான ராஜ்ய உறவுகளை முறித்துக் கொள்வோம் என்றும், பொருளாதார தடை விதிப்போம் என்றும் பல நாடுகள் அறிவிப்பு செய்தன.
1997-ல் லஜ்ஜா ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. 1999-ல் டில்லியில் வெளியிடப்பட்டது. பின்னர் லஜ்ஜா தடை செய்யப்பட்டது. மதவெறியர்களின் தொடர் மிரட்டலாலும் அவர் தலைக்கு விலை வைத்ததாலும் தஸ்லிமா வங்கதேசத்தை விட்டு வெளியேறி சுவீடன் நாட்டுக்கு சென்றார். 2002-ல் நஸ்ரின் ‘அடங்காத காற்று’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார்.
“குரான், பைபிள், வேதங்கள் போன்றவற்றில் தவறுகள் மிகுந்திருக்கின்றன. குர்ஆன் பெண்களின் சுதந்திரத்தை பறித்து அவர்களை அடிமைகளைப் போன்று நடத்துவதை அனுமதிக்கிறது. இது நாட்டின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி விடுகிறது. நமது மதத்தலைவர்கள் செய்து வரும் அட்டூழியங்களை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நான் என் பேனாவைக் கொண்டு அவர்களோடு போராடி வருகிறேன். அவர்களோ கத்தி, துப்பாக்கி போன்றவற்றைக் கொண்டு நல்லவற்றை அழித்து வருகிறார்கள். எனக்கு என் உயிர் முக்கியமானது அல்ல. என் எழுத்தைக்கொண்டு நான் இந்த அநியாயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்போகிறேன். எனக்கு நியாயம் என்று தோன்றுவதையே நான் எழுதி வருகிறேன். அதற்காக அவர்கள் என்னை கொலை செய்ய விரும்புகிறார்கள். யாரும் என்னை பயமுறுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது.” என்று அடிக்கடி கூறுவார் நஸ்ரின்.
2001-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரெஞ்ச் பாராளுமன்றத்தில் நஸ்ரின் பேசும்போது “குரான் இன்னமும் சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்று போதித்து வருகிறது. இப்படி தவறான உபதேசத்தை நம்பி வாழ்ந்து வரும் மக்களைக் கொண்ட ஒரு நாடு எப்படி முன்னேற முடியும்?” என்று கேட்டார்.
வங்கதேசத்து மதத்தலைவர்கள் இவருக்கு வழங்கிய மரண தண்டனை இன்னமும் விலக்கிக் கொள்ளவில்லை. நஸ்ரினை கொல்வதற்கு இப்போதும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்து கொண்டேதான் இருக்கின்றன.