Header Banner Advertisement

 தனி மனிதன் உருவாக்கிய பெருங்காடு


jadav-payeng

print

முலாய் கதோனி

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்கிறது அரசு. அந்த ஒரு மரத்தை நட்டு, அதை பராமரித்து பெரிதாக வளர்ப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது நமக்கு. ஆனால் இங்கொரு மனிதர் ஒற்றை ஆளாய் நின்று பெரும் காட்டையே உருவாக்கியிருக்கிறார். ஒன்றல்ல… இரண்டல்ல… லட்சக்கணக்கான மரங்களை வளர்த்திருக்கிறார். இவரது காட்டில் யானை, புலி, மான், காண்டாமிருகம் மற்றும் ஏராளமான பறவைகள் பயமின்றி வாழ்கின்றன. அந்த மனிதரின் பெயர் ஜாதவ் பயேங்க்.

ஜாதவ் பயேங்க்

உலகம் அண்ணாந்து பார்க்கும் ‘ஃபாரஸ்ட்மேன்’ இவர். இந்திய வரைப்படத்தில் புதிதாக இணைந்திருக்கும் ‘முலாய் கதோனி’ இவர் உருவாக்கியது. ‘முலாய்’ என்பது ஜாதவ் பயேங்கின் செல்லப் பெயர். ‘கதோனி’ என்றால் அஸாமி மொழியில் காடு. முலாய் உருவாக்கிய காடு என்பதால் இந்தப் பெயர். இந்தக் காட்டின் பரப்பளவு 1,360 ஏக்கர். மனிதன் நினைத்தால் இயற்கையைக் கூட உருவாக்க முடியும் என்பதற்கு வாழும் உதாரணம் இந்த ஜாதவ் பயேங்க்!

‘மிஷிங்’ பழங்குடி இனத்தில் 1963-ல் பிறந்தவர் ஜாதவ். அஸாமில் ‘போடோ’ பழங்குடி இனத்தவருக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் மக்கள் தொகை கொண்ட பழங்குடியினம் ‘மிஷிங்’தான்.

பழங்குடியினத்தவர்களுக்கு இயல்பாகவே வனக் காதல் அதிகம். ஜாதவிற்கும் அந்தக் காதல் ஏராளமாய் இருந்தது. அவர் 16 வயது சிறுவனாக இருந்த போது பிரம்மபுத்திரா நதியில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது மாஜூலி தீவு.

அப்போதைய வெள்ள நீரில் ஏராளமான பாம்புகளும் அடித்து வரப்பட்டன. வெள்ளம் வடிந்த பின் எல்லா பாம்புகளும் இறந்து கிடந்தன. ‘மாஜூலி’ என்ற அந்த தீவு முழுவதும் பாம்புகளின் உடல்கள் நிலமே தெரியா வண்ணம் போர்வை போல் மூடிக் கிடந்தன.

பிரம்மபுத்திரா நதியின் மையத்தில் அமைந்திருக்கும் ‘மாஜூலி’ தீவுதான், உலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவாகும். இந்தத் தீவில் பாம்புகள் மடிந்ததற்கு காரணம் மரங்கள் இல்லாததுதான் என்பதை ஜாதவ் உணர்ந்த போது அவரின் வயது 16.

மரங்கள் இல்லாமல் வெப்பம் அதிகரித்திருக்கும் இந்தப் பகுதியில் மரம் வளர்க்க வேண்டும். அதன் மூலம் குளுமையை உருவாக்க வேண்டும், என்பதற்காக வனத்துறையை ஜாதவ் அணுகினார். மணல் மண்டிக்கிடக்கும் அந்த இடத்தில் மூங்கில் மரங்களை வேண்டுமானால் வளர்க்கலாம், என்று வனத்துறைச் சேர்ந்தவர்கள் சொல்லி விட்டார்கள்.

சரியாக ஒரு வருடம் கழித்து, 1980-ல் வனத்துறை ஜாதவ் குறிப்பிட்ட இடத்துக்கு மிக அருகிலேயே அதாவது அஸாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் மாவட்டம் ‘கோகிலமுக்’ என்ற இடத்தில் 200 ஹெக்டேர் பரப்பளவில் சமூக காடுகளை உருவாக்க முனைந்தார்கள். அந்த திட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்ட ஜாதவ் மற்ற தொழிலாளர்களோடு இணைந்து மரக் கன்றுகளை நட்டார்.

வேலை முடிந்ததும் மற்ற தொழிலாளர்கள் அவரவர்கள் ஊருக்கு கிளம்பி விட்டார்கள். லேசாக துளிர் விட்டு நிற்கும் மரக்கன்றுகளை அப்படியே விட்டு விட்டால், வாடிப்போய்… மரித்து விடும். அந்த மரங்களைப் பார்த்து பராமரிக்க அனுமதி கேட்டார் ஜாதவ். வனத்துறையும் அனுமதி கொடுத்ததோடு, எல்லா விஷ­யங்களையும் மறந்தும் போய் விட்டது. அதன்பின் ஒருவர் கூட அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.

மூங்கில் மட்டுமே வளர்ந்து வந்த சமூக காட்டில் வேறு சில மரங்களையும் வளர்க்க ஜாதவ் முயன்று பார்த்தார். மண்ணின் தன்மை மற்ற மரங்களை வளரவிடவில்லை.

மண்ணை வளப்படுத்துவதற்காக அவர் ஒரு யுக்தியைக் கையாண்டார். நமது மண்ணை மண்புழுக்கள் வளப்படுத்துவது போல் அஸாமில் சிவப்பு நிற எறும்புகள் மண்ணை வளப்படுத்தும் உயிரினம். அதற்காக தனது ஊருக்குச் சென்று சிவப்பு நிற எறும்புகளை பெருமளவில் பிடித்து வந்து இந்த மணல் திட்டில் விட்டார்.

மூர்க்கத்தனமாக தாக்கும் தன்மைக் கொண்ட அந்த சிவப்பு எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் தனது முயற்சியில் தொய்வடையாமல் பல இடங்களில் இருந்து சிவப்பு எறும்புகளை சேகரித்து இங்கு வந்து விட்டிருக்கிறார். எறும்புகள் மண்ணின் தன்மையை அதிகப்படுத்தியது. மண்ணும் வளம் பெற்றது.

மூங்கிலோடு மற்ற மரங்களையும் வளர்க்க நினைத்தார். மற்ற மரங்களின் விதைகளையும் ஊன்றினார். மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இரவு பகல் பாராமல் பராமரித்தார். ஜாதவின் நம்பிக்கை வீண் போகவில்லை. பண்பட்டுப் போன பூமித்தாய் தனது பொக்கிஷத்திலிருந்து மரங்களைப் பலனாய் கொடுத்தாள்.

ஜாதவ் கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கிய காடு ஆயிரம் ஏக்கர்களை கடந்து வளர்ந்து கொண்டிருந்தது. பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் அது பெருகிக் கொண்டே சென்றது. வெளி உலகத்திற்கு இது தெரியவே இல்லை.

2008-ம் ஆண்டில் அருகில் இருந்த காட்டுக்குள் இருந்து 115 யானைகள் இவரது காட்டுக்குள் தற்செயலாக வந்து புகுந்து கொண்டன. அதைத் துரத்திக் கொண்டு வந்த வனத்துறையினர் முலாய் காட்டைப் பார்த்ததும் அதிர்ச்சித்துப் போய் நின்றனர். தங்களது பட்டியலில் இருந்து இவ்வளவு பெரிய காடு எப்படி விடுபட்டுப் போனது என்று வியந்தனர்.

அந்த நேரத்தில் தான் ஜோர்ஹாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜீத்தோ கலிதா ஜாதவ் பயேங்கைப் பற்றி அஸாமிய பத்திரிகையில் விரிவாக ஒரு கட்டுரை எழுதினார். அதன்பின்னே ஜாதவ் பெயர் வெளியுலகுக்கு தெரியத் தொடங்கியது.

30 வருடங்களாக எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தன்னந்தனியாக தனது குடும்பத்தினருடன் இணைந்து இந்த சாதனையை செய்திருக்கிறார். காடு வளர்ப்பதற்காக நகர வாழ்க்கையை விட்டு இந்த காட்டில் வாழத்தொடங்கினார். மாஜுலி தீவில் மரங்களால் ஆன சிறு வீட்டை ஏற்படுத்திக் கொண்டார். அதில் அவரின் மனைவி பினிதா பயேங்க். மகன்கள் சஞ்சய், சஞ்ஜீவ் மற்றும் மகள் மூன் முனி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.

தனது வருமானத்திற்காக 50 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். பாலின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் ஓடுகிறது. காலை 3.30 மணிக்கே எழுந்துவிடும் இவர் மாடுகளிடம் பால் கறந்து விற்றப்பின் முழு நேரமும் காட்டைப் பராமரிக்கவே நேரத்தை செலவிட்டுள்ளார்.

சிறிய உயிரினம் கூட வாழத் தகுதியற்றதாக இருந்த இந்த மணல் திட்டு மரங்கள் பெருக பெருக பல உயிரினங்கள் வாழும் இடமாக மாறியிருக்கிறது. பக்கத்து காடுகளில் இருந்து வரும் புலிகள் தனது வளர்ப்பு ஆடுகள் நூறை தனக்கு இரையாக்கியுள்ளன. அப்படி இருந்தும் தனது காட்டில் விலங்குகள் வாழ வேண்டும் என்று நினைக்கிறார். இப்போது இவரின் காட்டில் 5 புலிகள், 3 காண்டாமிருகங்கள் நிரந்தரமாக வாழ்கின்றன.

இதுபோக நூற்றுக்கணக்கான முயல்கள், மான்கள், பறவைகள் வாழ்கின்றன. நூறுக்கும் மேற்பட்ட யானைகள் ஒவ்வொரு வருடத்திலும் 6 மாதங்கள் இங்கு வந்து தங்கி குட்டிகளை ஈன்று செல்கின்றன.

இந்த வனவிலங்குகளால் ஜாதவிற்கும் நிறைய தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளன. பக்கத்திலிருக்கும் விளைநிலங்களை இங்கிருந்த யானைகள் பாழாக்கியதால் இந்தக் காட்டை அழிக்க விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்தார்கள்.

அதற்கு ஜாதவ் அந்த மக்களிடம் ‘காட்டையும் வனவிலங்குகளையும் அழிப்பதற்கு பதில் என்னைக் கொன்று விடுங்கள்!’ என்று தீர்மானமாகச் சொன்னார். அவரது உறுதியைக் கண்டு வனத்துறையினர் அவருக்கு உதவ முன்வந்தனர். ஜாதவின் சாதனையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். முலாயின் காட்டை வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சிகளை அரசு எடுத்துள்ளது.

தனது 17 வது வயதில் தொடங்கி 51 வயது வரை தன்னலமற்ற சேவை மனித குலத்திற்கு செய்துள்ள ஜாதவ்வை எவ்வளவு பாராட்டினாலும் அதற்கு ஈடாகாது. ஆனால் இதை எதையும் காதில் வாங்காத ஜாதவ், ‘இது எனது சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமை’ என்று ஒற்றை வரியுடன் தனது மொத்த உழைப்பையும் சாதனையையும் முடித்துக் கொள்கிறார்.

இப்பொழுதும் நான் உருவாக்கிய காட்டை வனத்துறையினர் நன்றாக பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால், ‘நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயாராக உள்ளேன்!’ என்று கூறுகிறார் இந்த சாதனை மனிதர்.

ஒரு அரசாங்கமே செய்யத் தயங்கும் வேலையை தனிமனிதனாக இருந்து சாதித்த ஜாதவ் பயேங்கை வாழ்த்துவோம்.