
ஒரு விபத்து இவரை ஒட்டு மொத்தமாக முடக்கிப் போட்டது. திரையில் விண்ணில் பறந்து பல சாகசங்கள் செய்த இந்த துணிவு மனிதர், அந்த விபத்துக்குப் பின் தனது சுண்டு விரலைக்கூட அசைக்க முடியாமல் சக்கர நாற்காலியில் முடங்கிப் போனார். அந்த சோதனையை ஏற்றுக்கொள்ள முடியாத கிறிஸ்டோபர், தற்கொலை முயற்சிவரை போனார். பின்னர் மனம் மாறி வாழ்க்கையில் துணிவோடு போராடவும் முடிவு செய்தார்.
![]() |
கிரிஸ்டோபர் ரீவ் |
கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருவாயில் இவருக்கு உலகப் புகழ் பெற்ற ‘ஜூலியட் மேடை கலைப் பள்ளி’யில் நடிப்பு பயிற்சி பெறும் வாய்ப்பு கிட்டியது. அதில் பயின்ற போதே அவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன. முதன் முதலாக 1976-ல் புகழ்பெற்ற நடிகையான கேத்ரின் ஹெப்பர்னுடன் இணைந்து நடித்தார். ‘எ மேட்டர் ஆப் கிராவிட்டி’ என்ற இசை நாடகத்தில் நடித்தார். 1978-ல் அவருக்கு சினிமாவில் சூப்பர் மேனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்காக அப்போது 200 புதிய முகங்களை பல்வேறு கேமரா சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். இறுதியில் தேர்வானவர், கிறிஸ்டோபர் மட்டும்தான்.
![]() |
தொலைகாட்சி தொடரில் கிறிஸ்டோபர் |
1995 மே மாதம் 27-ம் தேதி, அவர் வாழ்வையே திருப்பிப் போட்ட நாள். அன்று தனது குதிரை மீது அமர்ந்து சாகசங்கள் செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று அவரது குதிரை மிரண்டுபோய் அவரை பின்பக்கமாக தூக்கி எரிந்தது. குதிரையின் கடிவாளத்தில் கிறிஸ்டோபரின் கை மாட்டிக்கொள்ள தலைக்குப்புற கீழே விழுந்தார். தலைதான் தரையில் மோதியது. தலையில் பலத்த அடி. அவரின் முதுகெலும்புகள் இரண்டு நொறுங்கின. கழுத்து எலும்புகளும் ஒடிந்தன. அந்த நொடியே அவரது கழுத்துக்கு கீழ் உள்ள உடல் முழுவதும் செயலிழந்தது. மூச்சுக் கூட விடமுடியாமல் தவித்தார். உடனடி மருத்துவம்தான் அவர் உயிரை காப்பாற்றியது.
![]() |
விபத்துக்குப் பின் |
முதுகெலும்பு காயங்களுக்கான ஆராய்ச்சிக்கு அதிகம் செலவிடும்படி அவர் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டார். 1996-ல் அவரது பெயரிலே ஒரு அறக்கட்டளையை தொடங்கினார். 1998-ல் இவர் எழுதிய ‘ஸ்டில் மீ’ என்ற சுயசரிதை புத்தகம் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் இடம்பெற்றது.
![]() |
மேடையில் நம்பிக்கை உரை |
இவருக்கு சிகிச்சை அளித்த வாஷிங்டென் பல்கலைக்கழக மருத்துவர் டாக்டர். ஜான் மெக்டொனால்ட் தன் வாழ்நாளில் தான் சந்தித்தவர்களில் கிரிஸ்டோபர் ரீவ்ஸைப் போன்ற மனோத்திடத்தை வேறு எவரிடத்திலும் கண்டதில்லை என்றும், இதற்கு முன்பு வரை இது போன்ற காயம் ஏற்பட்டவர்களால் எதுவும் செய்ய முடியாது என்றுதான் கருதப்பட்டது, ஆனால் ரீவ்ஸ்க்கு பிறகு தன்னம்பிக்கை என்றால் என்ன என்பதை நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார்.
விபத்து நிகழ்ந்ததிலிருந்து கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் ‘சூப்பர்மேன்’ என்ற பெயருக்கேற்ப அசாதாரணமான மனோதிடத்தை உலகுக்கு படம் பிடித்துக்காட்டிய கிரிஸ்டோபர் ரீவ்ஸ், தமது 52 ஆவது வயதில் 2004, அக்டோபர் 10-ல் காலமானார். அவரது உடல் நம்மை விட்டு மறைந்திருக்கலாம் ஆனால் அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் தன்னம்பிக்கை என்ற ஒளி என்றும் இந்த உலகில் மறையாதிருக்கும்.
![]() |
சுயசரிதை |