Header Banner Advertisement

தன்னம்பிக்கை தரும் ஆத்திச்சூடி


Avvaiyaar

print

யானைக்கு தும்பிக்கை, மனிதனுக்கு தன்னம்பிக்கை. என்னால் முடியும் என்றே முயன்றால் எதையும் சாதிக்கலாம். மூன்றாவது கை தன்னம்பிக்கை. உருவம் இல்லாத உறுப்பு. உள்ளத்தில் இருப்பதே சிறப்பு. எதை இழந்தாலும், பெற்று விடலாம் தன்னம்பிக்கை மட்டும் இருந்தால்!

ஆத்திச்சூடி தரும் தன்னம்பிக்கை 

‘உன்னால் முடியும் தம்பி’ என்றார் தன்னம்பிக்கை எழுத்தாளர் எம்.எஸ். உதயமூர்த்தி. “உன்னை பலமானவன் என்று நினைத்தால் பலமானவன். உன்னை நீ பலவீனமானவன் என்று நினைத்தால் பலவீனமாவாய். என்னவாக நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்” என்றார் விவேகானந்தர்.

‘உன்னால் முடியும் வரை முயல்வது அல்ல, நீ நினைத்த செயல் முடியும் வரை முயல வேண்டும்’ என்றார் அப்துல் கலாம். “இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும், விதைத்துக் கொண்டே செல்ல வேண்டும்” என்பார் ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு.

இப்படி எல்லோரும் சொல்லும் தன்னம்பிக்கை கருத்துக்களுக்கு ஆணி வேர் நம் தமிழ் இலக்கியங்கள். தன்னம்பிக்கை சிந்தனையின் சுரங்கமாக இருப்பது தமிழ் இலக்கியம்.

வெற்றியாளராக மாற்றும் 

அன்றே ஔவை பாடிய அற்புதமான ஆத்திச்சூடியில் உள்ள அனைத்து கருத்துக்களும், தன்னம்பிக்கை விதைக்கும் கருத்துக்கள். மனிதனை, பண்பாளனாக, நல்ல மனிதனாக ஒழுக்கமுள்ளவனாக நேர்மறை சிந்தனையாளனாக மனிதநேயம் மிக்கவனாக வெற்றியாளனாக மாற்றிட உதவுவது ஆத்திசூடி. ஆத்திசூடியில் “தன்னம்பிக்கை” விதைக்கும் கருத்துக்கள் இருப்பது தான்.

அறம் செய விரும்பு 

நல்லது நினை என்பது போல அறம் செய்ய விரும்பு என்கின்றார் ஔவையார். எந்த செயலாக இருந்தாலும் அறம் சார்ந்ததாக நல்ல செயலாக இருக்க வேண்டும். தமிழர்களின் வாழ்வியல் முறையில் ஒன்று அறவழி நடத்தல். அதனால் அறம் செய்ய விரும்பு என்கிறார்.அறம் செய்ய விரும்பி விட்டால் சிநதனை, செயல், சொல் யாவும் அறம் சார்ந்தே அமையும். மனிதனை நெறிப்படுத்தி பண்பாடு பயிற்றுவிக்கும் விதமாக ஔவை நீதி நூல் எழுதி உள்ளார்.

ஆறுவது சினம்

“ஒருவன் கோபத்தோடு எழுந்தால் நட்டத்தோடு அமர்வான் ” என்று பொன்மொழி உண்டு. சினத்தை அடக்க மட்டும் கற்று கொண்டால் வாழ்வில் சிறக்கலாம். ஒரு முறை புத்தரை ஒருவர் கண்டபடி திட்டி இருக்கிறார். திட்டி முடிக்கும் வரை எதுவும் பேசாதிருந்த புத்தர், நீங்கள் என்னிடம் ஒன்றை தருகிறீர்கள், அதனை நான் பெறவில்லை என்றால் அது உங்களிடமே இருந்து விடும். அது போல தான் நீங்கள் திட்டிய எதையும் நான் பெற்று கொள்ளவில்லை என்றார். திட்டியவர் தலை குனிந்தார். இப்படிதான் கோபத்தில் ஒருவர் நம்மை திட்டும் பொது நாமும் பதிலுக்கு திட்டினால் சண்டை வரும். பேசாமல் அமைதி காத்திட்டால் சண்டைக்கு வாய்ப்பு இல்லை. “பொறுத்தார் பூமி ஆள்வார்” என்ற பழமொழி உண்டு. பொறுமையாக இருந்து கோபம் தவிர்ப்பதும் ஒரு தன்னம்பிக்கையாளரின் கடமை .

இயல்வது கரவேல்

கொடுக்க முடிந்த பொருளை ஒளிக்காமல் கொடு. நம்மால் முடிந்ததை பிறருக்கு கொடுத்து உதவிடல் வேண்டும் என்கிறார் ஔவை.

ஊக்கமது கைவிடேல் 

மனவலிமையை கை விடாதே. தன்னம்பிக்கை விதைக்கும் வைர வரிகள் இவை. மனவலிமை தான் தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எல்லா கதவுகளும் திறந்து வரவேற்பு அளிக்கும்.

எண்ணெழுத் திகழேல் 

கணக்கையும் இலக்கணத்தையும் இகழாமல் நன்றாக கற்றுக் கொள். கணக்கு, இலக்கணம் எனக்கு வராது என்று சொல்பவர்களும் உண்டு. அவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் விதமாக சொன்ன கருத்து இது.

ஔவையின் ஆத்திசூடி உணர்த்தும் தன்னம்பிக்கையை எழுத தொடங்கினால் எழுதிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு அள்ள அள்ள அன்னம் வரும் அட்சய பாத்திரம் போல ஆத்திசூடி படிக்கப்படிக்க தன்னம்பிக்கை கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கும்.

யாரிடமும் இனிமையாக பேசு

சாதனையாளர், வெற்றியாளர் இவர்களின் ரகசியம் என்னவென்று பார்த்தால் எல்லோருடனும் இனிமையாக பேசும் பண்பு உள்ளவர்களாக இருப்பார்கள்.

இணக்கமறிந் திணங்கு

நல்ல குணம் உள்ளவரோடு நட்பு செய். உன் நண்பன் யார் என்று சொல் ‘நீ யார் என்று சொல்கிறேன்’ என்பார்கள். அது போல நல்ல நண்பர்களுடன் பழகினால் நன்மைகள் கிட்டும்.

எந்த செயலையும் உரிய காலத்தில் செய்

இந்த ஒற்றை வரியில் ஓராயிரம் தன்னம்பிக்கை கருத்துக்கள் உள்ளன. எந்த ஒரு செயலையும் நாளை, நாளை என்று நாளை கடத்தாமல் உடன் உரிய நேரத்தில் செயலை செய்து முடித்தால் வெற்றிகள் குவியும், சாதனைகள் நிகழும், புகழ் மாலைகள் தோளில் விழும்.

வஞ்சகம் பேசேல்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதே. உள்ளத்தில் உள்ளதை அப்படியே பேச வேண்டும். நல்லது நினைக்க வேண்டும். தன்னம்பிக்கை வளர்க்க உதவுவது இது போன்ற பண்பு.

குணமது கை விடேல்

உயர்குணத்தை எந்த நிலையிலும் கைவிடாதே. நல்ல குணத்துடன் என்றும் நடப்பவர்களுக்கு சமுதாயத்தில் நன்மதிப்பும், மரியாதையும் என்றும் உண்டு. மேன்மக்கள் மேன்மக்களே என்ற கூற்றுக்கு ஏற்ப உயர்ந்த குணத்தை எந்த சூழ்நிலையிலும் கைவிடாமல் தன்னம்பிக்கையோடு வாழ ஔவை கற்று தருகிறார்.

கேள்வி முயல்

நல்ல கருத்துக்களை விரும்பி கேட்க முயற்சி செய். நல்ல கருத்துக்களை கேட்கும் போது நமது குணம் செயல் யாவும் நல்லவையாகவே இருக்கும். செவிகளை நல்லது கேட்க மட்டும் பயன்படுத்துவது நல்லது, கெட்டவை கேட்காமல் இருப்பது சிறப்பு.

ஆத்திசூடி என்பது குழந்தைகள் படிப்பதற்கு என்றே பெரியவர்கள் படிக்காமல் இருந்து விடுகிறோம். ஆழ்ந்து படித்தால் கவலைகள் காணாமல் போகும். விரக்திகள் ஓடி போகும். தாழ்வு மனப்பானமை தகர்ந்துவிடும். இன்றைய தன்னம்பிக்கை எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் அனைவருக்கும் ஆணி வேர் ஒளவையின் ஆத்திசூடி தான். ஆத்திசூடியை ஆழ்ந்து படித்து தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வோம்.