
காங்கிரஸில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர். மது ஒழிப்பு, தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் என காந்தியின் பல போராட்டங்களை தமிழகத்திலும், கேரளத்தில் உள்ள வைக்கத்திலும் முன்னெடுத்துச் சென்றவர். பின்னர் திராவிட கழகத்தைத் தோற்றுவித்ததோடு, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவை தன் வாழ்நாள் முழுக்க கொள்கைகளாகக் கடைபிடித்தவர். மூட நம்பிக்கைக்கு காரணமாக இருப்பது கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்க ளும்தான் என்பது அவரது கருத்து. அதனால் இறுதிவரை அவர் ஒரு தீவிர நாத்திகராகவே செயல் பட்டார்.
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றிருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளைப் பேசும் ஆற்றல் கொண்டிருந்த பெரியார், இந்தியாவில் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இலங்கை போன்ற நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தன் கருத்துகளைப் பதித்தார். தமிழ் எழுத்துக்களின் சீரமைப்பில் பெரியாரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவரின் சமுதாயப் பங்களிப்பிற்காக யுனெஸ்கோ நிறுவனம் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இறுதிக் காலத்தில் குடலிறக்க நோயினால் பாதிக்கப்பட்ட பெரியார், டிசம்பர் 24, 1973ல் தனது 94ம் வயதில் இயற்கை எய்தினார்.