Header Banner Advertisement

தமிழ் வலைப்பூக்களின் நிலை!


www.villangaseithi.com

print
தமிழ் வலைப்பூக்களில் எழுதுதல் என்பது 2003 ஆம் ஆண்டு கார்த்திக் ராமதாஸ் என்ற அமெரிக்க வாழ் தமிழரால் தொடங்கப்பட்டது. அந்த ஆண்டில் அறிமுகமான தமிழ் யுனிகோடு எழுத்துருவின் காரணமாக, வலைப்பூக்களில் எழுதக்கூடிய வாசல் திறந்திருக்கிறது. இன்று சுமார் 4500 முதல் 5000 வலைப்பூக்கள் வரை உள்ளன. ஆன்மீகம், அரசியல், வரலாறு, பொது அறிவு, கல்வி, சுயபுராணம், பைத்தியக்காரத்தனம், குழு விவாதம், வசைகள், சினிமா, நையாண்டி என எல்லாவற்றுக்கும் இதில் இடம் இருக்கிறது.

இணையத்தளத் தொடர்பு இருந்தால் உலகின் எந்த மூளையிலிருந்தும் தங்கள் கருத்துகளை எழுதிக் குவித்து, பிறரைப் படிக்க வைக்கக் கூடிய அளவிற்கு வலைப்பூக்கள் முன்மாதிரியாக இருக்கின்றன. எந்தப் பிரச்சனை க்கும், படித்த இளைஞர்களின் கருத்து என்ன என்பதை இதில் நடக்கும் விவாதங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒரு கட்டுரையின் கருத்துக்கு எதிர்வினை இருப்பின் அதுவும் இங்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விவாதிக்கக் கூடிய அளவிற்கு ஆரோக்கியமான நிலையும் வலைப்பூவில் இருக்கிறது. அதே சமயம் வலைப்பூவில் வரக்கூடிய பெரும்பாலான கட்டுரைகள் குப்பைகளாகத்தான் இருக்கின்றன என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது.

வலைப்பதிவில் தொடக்கத்தில் சுமாராக எழுதி போகப் போக எழுத்தில் கில்லியாகி பிரபலப் பத்திரிகைகளால் கவனிக்கப்பட்டு வாய்ப்பு பெற்றவர் களும் உண்டு. அவர்களில் நிறைய பேர் புத்தகங்களும் எழுதியிருக் கிறார்கள். அதேசமயம், மூன்றாவது வலைப்பதிவிலேயே சரக்கு காலியாகி, டைரி லெவலுக்கு வந்து, பின் பத்திரிகைகளில் வந்ததை எடுத்து காப்பி பேஸ்ட் செய்பவர்களும் உண்டு.

யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளை எழுதுவதற்கு அல்லது வெளியிடுவதற்கு பத்தரிகைகள், தொலைக்காட்சிகளை விட தற்போது வலைப்பூக்களில்தான் கட்டற்ற சுதந்திரம் இருப்பதை பலர் உணர்ந்து ள்ளனர். ஆதலால், இங்கு யாராக இருந்தாலும் விமர்சனத்துக்கு ஆளாக்கப் படுகின்றனர். போற்ற வேண்டியதைப் போற்றியும் தூற்ற வேண்டியதைத் தூற்றியும் எல்லோரும் தைரியமாகப் பதிவு செய்கிறார்கள்.

பேனா நட்பு அருகிப்போகியிருக்கும் இக்காலத்தில் வலைப்பதிவுகள் மூலமாக உருவாகும் நட்புகள் மிக ஆழமானவையாக உள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த நட்பு வட்டத்தின் மூலம், வலைப்பதிவர்கள் ஆரோக்கியமான சில சமூகப் பணிகளையும் செய்கிறார்கள். அதேபோல், புதிய பதிவர்களுக்கு வலைப்பதிவு தொடர்பான தொழில் நுட்ப அறிவு மேம்படவும், புதிய பதிவர்களை வரவேற்கும் முகமாகவும் அவ்வப்போது பதிவர் பட்டறைகளும் நடைபெறுகின்றன.

ஆனால், செய்திகளை வாசித்து அவற்றை அலசி மாற்றுக் கருத்தை முன்வைப்பவர்களும் இத்தளங்களில் அரிதே. அதே சமயம் பழைய நல்ல சினிமாக்கள் குறித்தும் மாற்று சினிமாக்கள் குறித்தும் தெரிந்து கொள்ள நல்ல வலைப்பதிவுகள் இருப்பினும், கிழக்குப் பதிப்பகம் பத்ரி ஒருவர்தான் அவரது வலைப்பூவில், உலகின் எல்லா விசயங்களுக்கும் ஏதோ ஒரு கருத்தோ அல்லது தகவலோ வைத்திருக்கிறார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஜனரஞ்சகமாக எழுதும் பதிவர்களுக்குதான் இங்கு மவுசு அதிகம். அதேசமயம், தங்கள் பிரச்சினைகளை விலாவாரியாக நாகரிகமாக எழுதுவதில் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், நிறைவாக எழுதுகிறவர் கள் பெண் பதிவர்கள் என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். பெற்றோர் உதவியுடன் எழுதும் குழந்தைப் பதிவர்கள் கூட இங்கு உண்டு.

ஒருபுறம் இப்படி மிகவும் பாசிட்டிவான விசயங்கள் இருக்கின்றன. ஆனாலும், சைபர் க்ரைம் போலீசார் தலையிடும் அளவுக்கு கட்டுக் கடங்காமல் போன சில சம்பவங்களும் உண்டு. சொந்த தகவல், புகைப் படங்கள் போன்றவற்றை எந்தக் காலத்திலும் பகிர்ந்து கொள்ள இயலாத அளவுக்கு வலையுலகம் பாதுகாப்பு அற்றதாக இருக்கிறது என்பது நடுநிலையாளர்களின் கணிப்பு.

தமிழ் வலைப்பதிவுகளை திரட்டுவதற்கென்றே சில திரட்டிகளும் உண்டு. இந்தத் திரட்டிகளில் இணைந்து கொள்வதில் மூலமாக நொடிகளில் நம் வலைப்பதிவினை உலகின் எந்த மூலைக்கும் எடுத்துச் செல்ல முடியும் என்ற நிலை இருப்பதால், எளிதில் எழுத்தாளர்கள் புகழ்பெறுகின்றனர். ஜெய மோகன், ரவிக்குமார், சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், பா.ராகவன் போன்ற பிரபலமான பலரும் தமிழில் வலைப்பூ எழுதுகிறார்கள். ஊடகங்களில் தங்களால் எழுத முடியாத சில விசயங்களுக்கு வலைப்பூவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

வலைப்பூக்கள் என்பது வெறும் இலக்கியம் மற்றும் பொழுது போக்கானது மட்டுமல்லமால் பல்வேறு தளங்களிலும் எழுதப்படுவதால் ஒரு மாற்று ஊடகமாகவும் இவை உருவாகி வருகின்றன. அதோடுமட்டுமல்லாமல் சொந்த தளங்களாகவும், பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றின் கிளைகளாக வும் வலைப்பூக்கள் பிரிந்துள்ளன. இன்னும் சிறப்பாகச் செயல்பட்டால் பல நல்ல விவாதங்களையும் படைப்புகளையும் வலைப்பூக்களின் மூலம் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையோடு நடைபோடுகிறது தமிழ் வலைப்பூக்கள்!