Header Banner Advertisement

திருப்புவனம்


848f350efa6690947053d13a5f5c348a

print

மதுரை அருகே இருக்கும் திருப்புவனம் கோவிலில் வேலைப் பார்ப்பவர்கள் பலர். அதில் தேவர் அடியார்களாகவும் பல கன்னிகையர் பணிபுரிந்து வந்தனர். அந்தப் பெண்களில் ஒருத்திதான் பொன்னனையாள். அவள் இறைவன் மீது அளவற்ற பற்றுக் கொண்டவள். இறைவனுக்காக என்னவும் செய்ய சித்தமாக இருந்தாள்.

பெண்களே கண்டு பொறாமைக் கொள்ளும் பேரழகோடு திகழ்ந்தாள். இன்னும் சில பெண்கள் இவளை மணந்துக்கொள்ள தாங்கள் ஆணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்கினர். அழகில் அவள் ரதியாக இருந்த போதும், பாடலிசைப்பதில் அவளுக்கு இணையாக ஒரு பெண்ணைப் பார்க்க முடியாது. பாடிக் கொண்டே நடனம் ஆடுவதற்கு மிகுந்த திறமையும் அனுபவமும் வேண்டும். அது பொன்னனையாளிடம் கொட்டிக்கிடந்தது.

இப்படி அழகிலும் திறமையிலும் திக்குமுக்காட வைக்கும் பெண்களிடம் இயல்பாகவே யாரையும் மதிக்காத ஆணவப்போக்கு இருக்கும். ஆனால் இவளிடம் ஆணவம் இல்லை. அன்பு இருந்தது.

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட பொன்னனையாள் தினமும் அதிகாலையில் எழுந்து சலசலத்து ஓடும் வைகையில், தனது தோழியரோடு நீராடிவிட்டு தியானத்தில் ஈடுபடுவாள். சிவனை தியானித்தப்பின் சிவ பூஜை செய்வாள். அது முடிந்ததும் நேராக திருப்புவன நாதனை வணங்கி, ஒரு தேவ நடனம் ஆடுவாள். திருத்தமான அந்த நடனத்தில் எந்தக்குறையும் கண்டுபிடிக்க முடியாது. நடனத்தாலே இறைவனை தொழுது முடிப்பாள்.

அதன்பின் தோழிகள் புடைசூழ வீட்டிற்கு வருவாள். தன் இல்லம் தேடி வரும் சிவனடியார்களுக்கு அமுது படைப்பதற்காக சமையல் வேலையைத் தொடங்குவாள். சிவனடியார்களை சிவன் என்றே நினைத்து பாவிப்பாள். அவர்களை மனம் மலர வரவேற்று உணவுப் படைப்பாள். அவர்கள் அனைவரும் சாப்பிட்டு எஞ்சியிருக்கும் உணவை தேவமிர்தமாக உண்டு பசியாறுவாள்.

இப்படி சதாசர்வகாலமும் சிவனையே நினைத்து வாழ்வு நடத்தும் பொன்னனையாளுக்கு மனம் நிறைந்த கனவு ஒன்று இருந்தது. அது திருப்புவனம் கோவிலுக்கு சிவபெருமானின் உற்சவ சிலையை செய்து அளிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் நடனம் மூலம் கிடைக்கும் வருமானம் தனது ஆசையை நிறைவேறும் விதமாக இல்லை. வரும் வருமானம் முழுவதும் அடியார் பூஜைக்கே செலவானது. எவ்வளவு முயன்றும் பணத்தை சேமிக்க முடியவில்லை. அப்படியிருக்கையில் எப்படி சிவனின் உற்சவ சிலையை செய்யமுடியும்? அதனால் வருத்தத்தில் இருந்தாள்.

தினமும் சிவனடியார்களுக்கு விருந்து படைப்பது விருப்பமான நிகழ்ச்சியாக இருந்தாலும் மனதுக்குள் சிவனின் சிலையை வடிவமைக்க முடியவில்லை என்ற வருத்தம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள் வழக்கம் போல் சிவனடியார்களுக்கு திருவமுது படைக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. எல்லா சிவனடியார்களும் அமுதுண்டு சென்றனர். ஒரேயொரு சிவனடியார் மட்டும் உணவருந்தாமல் யாரிடமும் பேசாமல் தனித்து நின்றிருந்தார்.

தூய திருநீறு அணிந்திருந்த மேனியும் யோக பட்டினைக் கட்டிய இடையும் இடுப்பு ஆடையில் விபூதிப் பையும் கொண்டிருந்த அவர் மகாஞானம் வாய்ந்த சித்தராகவே தெரிந்தார். மற்ற சிவனடியார்களைவிட இவரிடம் தெய்வாம்சம் நிறைந்திருந்தது. அதனாலே எல்லோரின் கவனமும் அவர் மீது திரும்பியது.

சிவனடியார்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த பொன்னனையாளின் தோழிகள் வசீகரமாக தனித்திருந்த அந்த சிவனடியாரிடம் வந்தார்கள். அவரை வணங்கி “அய்யனே! அனைவரும் திருவமுதம் உண்கின்றனர். தாங்கள் மட்டும் எதிலும் கலந்து கொள்ளாமல் தனித்து நிற்கிறீர்களே எங்களின் உபசரிப்பில் ஏதாவது குறையிருந்தால் தாங்கள் பொறுத்தருள வேண்டும். திருவமுது செய்ய இல்லத்துள்ளே எழுந்தருள வேண்டும்!” என்று வேண்டினர்.

அதற்கு அந்த சித்தர் மென்மையாக சிரித்தார். “மங்கையரே! எனக்கு திருவமுது வேண்டாம். அமுதம் போன்ற உங்கள் தலைவி வேண்டும். அவளை இங்கே அழைத்து வாருங்கள்” என்றார்.

சித்தரின் பேச்சு தோழிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் நேராக சென்று பொன்னனையாளிடம் “தலைவியே! சிவனடியார்கள் அனைவரும் வந்தனர். வயிறாற உணவருந்தி வாழ்த்திவிட்டு சென்றனர். ஆனால் ஒரு சித்தர் மட்டும் இன்னமும் திருவமுது செய்யாமல் தனியாக நிற்கிறார். அவரிடம் தெய்வீகத்தன்மை நிறைந்திருக்கிறது. ஆனால் அவரது பேச்சில்தான் சற்று செருக்குத் தெரிகிறது. அந்த அடியார் தங்களைக் காண வேண்டும் என்று அழைக்கிறார், வாருங்கள்!” என்று அழைத்தனர்.

கோடி மலர்கள் ஒன்று சேர்ந்து நடப்பது போல் மென்மையாக நடந்து சித்தரின் முன்வந்து நின்றாள் பொன்னனையாள். சித்தர் திருமேனியின் அழகும் வனப்பும் கண்டு மதிமயங்கிய அவள் பேச வார்த்தையின்றி நின்றாள். பின் சுதாரித்துக் கொண்டு சித்தருக்கு ஆசனம் கொண்டு வந்து கொடுத்து அமரச் சொன்னாள்.

திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்தாள். “எல்லாம் வல்ல எம் பெருமானே! தாங்கள் இங்கு எழுந்தருள நாங்கள் என்ன தவம் செய்தோமோ அறியோம்!” என்று கூறி கைக்கூப்பித் தொழுதாள். சித்தரின் அன்புவலையில் பொன்னனையாள் அகப்பட்டாள்.

“பெருமானே! எனது இல்லத்தின் உள்ளே தாங்கள் எழுந்தருள வேண்டும். தங்களின் திருவுள்ளத்திங்கு ஏற்றவாறு தொண்டுபுரிய காத்திருக்கிறேன்” என்று அன்போடு அழைத்தாள். சித்தரும் அவள் அழைப்பை ஏற்று இல்லம் புகுந்தார்.

என்னதான் பொன்னனையாள் மனம் மகிழ்ந்து சித்தரை வரவேற்றாலும் மனதுக்குள் உள்ள சோகத்தை சோமசுந்தரக் கடவுளாகிய சித்தர் உணர்ந்து கொண்டார்.

“பொன்னனையாளே ஏன் உன் முகம் வாட்டத்துடனே இருக்கிறது? என்ன காரணமாக இருந்தாலும் என்னிடம் மறைக்காமல் சொல்! என்னால் முடிந்ததை நான் செய்கிறேன்..!” என்று மனம் கனிந்து சொன்னார்.

சித்தரின் திருவடிகளை வணங்கி “எம்பெருமானே! என் மனதினுள் நீண்ட நாளைய ஆசை ஒன்று இருக்கிறது. அது சிவபெருமானின் உற்சவர் சிலையை உருவாக்க வேண்டும் என்பதே. ஆனால் எனக்கு வரும் பொருளெல்லாம் மிச்சமில்லாமல் செலவாகிவிடுகிறது. நிலைமை இப்படியிருக்கையில் எங்கே என் ஆசை நிறைவேறப்போகிறது? என்ற எண்ணம் நாளும் என்னை வாட்டி எடுக்கிறது” என்று கூறிமுடித்தாள்.

பக்தையின் பரிதவிப்பைக் கண்டு இறைவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். “பெண்ணே! நீ அறிவில் சிறந்தவள். இந்த சிறு வயதிலே யாக்கையும் இளமையும் செல்வமும் நிலையில்லாதவை என்று உணர்ந்து வைத்திருக்கிறாய். தர்மம் மட்டுமே நிலையானது என்பதை புரிந்து கொண்டுள்ளாய் தருமங்களுள் சிவதர்மமே சிறந்தது என்றும். அந்த சிவதர்மத்துள்ளும் சிவபூஜையே உயர்ந்தது என்று உணர்ந்து அதற்கேற்ப மகேஸ்வர பூஜை செய்து வருகிறாய். இத்தனையும் உன்னுள் இருப்பதால் நீ இந்தப் பிறவியின் பயனையும் மறுமைப் பயனையும் பெற்றுக்கொண்டாய். அதனால் உன் ஆசை நிறைவேறும் பொன்னனையாள் என்ற உன் பெயருக்கு ஏற்றபடி அழிவில்லாத இறைவன் திருவுருவைப் பொன்னால் செய்யப் பெறுவாயாக. இப்போதே உன் வீட்டில் உள்ள பாத்திரங்கள் அனைத்தையும் இங்கு கொண்டு வா” என்று கூறினார்.

சித்தரின் கட்டளைக்கு இணங்கி வெள்ளி செம்பு பித்தளை ஈயம் இரும்பு என்று வீட்டில் இருந்த அத்தனைப் பொருட்களையும் கொண்டுவந்து சித்தர் முன் வைத்தாள். தனது விபூதிப் பைக்குள் இருக்கும் திருநீறை எடுத்து பாத்திரங்கள் மீது தூவிய சித்தர் “இவையெல்லாம் பொன்னாக மாறுக!” என்றார்.

பிறகு பொன்னனையாளிடம் “இந்த பாத்திரங்களை எல்லாம் இன்றிரவே நெருப்பிலிடு. நெருப்பு பட்டவுடனே இவைகள் பொன்னாக மாறிவிடும். பிறகு இறைவனின் திருவுருவை வார்ப்பித்து உன் ஆசையை நிறைவேற்றுவாயாக!” என்று ஆசிர்வதித்தார்.

“சுவாமி! தாங்கள் இன்றைய இரவு இங்கு தங்கி திருவமுது செய்து அதன்பின் பொன்னாக்கும் இந்த அற்புதத்தையும் செய்து முடித்துவிட்டு பொழுது விடிந்ததும் தாங்கள் தங்கள் இருப்பிடம் செல்லலாமே!” என்று வேண்டினாள்.

“பெண்ணே! சந்நியாசி இரவில் தங்கக் கூடாது”.

“சுவாமி! எனக்கு இத்தனை பேருதவி செய்த தாங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாமா?”

“நான் மதுரையில் வசிக்கும் ஒரு சித்தர்” என்று கூறிய இறைவன் அங்கிருந்து மறைந்தார்.

சித்தராய் வந்தவர் சிவனான அந்த சோமசுந்தரக் கடவுளே என்பதை உணர்ந்து கொண்ட பொன்னனையாள் இறைவனைக் கண்ட மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினாள். சித்தர் கூறியது போலவே பாத்திரங்களை தீயிலிட்டு பொன்னாக மாற்றினாள்.

பொன்னாக ததும்பிக் கொண்டிருந்த உலோக திரவத்தை எடுத்து எந்த வடிவமும் இல்லாத இறைவனை திருவுருவமாக வார்ப்பித்தாள். சிலை அழகாய் வந்திருந்தது. சிலையின் அழகில் சொக்கிப் போன பொன்னனையாள் கன்னத்தைக் கிள்ளினாள். பின் கிள்ளிய இடம் வலிக்குமே என்று முத்தமிட்டாள். பின்னர் அந்த உற்சவ திருவுருவை திருப்புவனம் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து திருவிழாவையும் தேர்விழாவையும் நடத்தினாள்.

இன்றைக்கும் திருப்புவனம் சௌந்தரநாயகியம்மாள் புஷ்பனேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவனின் சிலையில் கன்னத்தில் கிள்ளிய வடு இருப்பதைக் காணலாம். சித்தர்களுக்கு எல்லாம் முதன்மை சித்தரான சிவனின் திருவிளையாடல்களில் 36வது திருவிளையாடலாக திருவிளையாடற் புராணம் கூறுகிறது.