
கெட்டவனைக் காட்டிடுவது எளிதான காரியம், ஓரளவு திறமை பெற்ற எழுத்தாளனுக்கு. நல்லவனைக் காட்டிடும் எழுத்தோவியம் தந்திடுவதும் எளிதுதான் தரமான எழுத்தாளனுக்கு. ஆனால், ‘கெட்டவன்’ நல்லதும் எண்ணுகிறான்; செய்கிறான் என்று காட்டிடவும், நல்லவனிடம் புற்றுக்குள் அரவு போல கேடு நினைப்பு செயலோ இருந்திடுவதைக் காட்டிடவும்; எழுத்தாளனாக மட்டும் இருந்தால போதாது; எண்ணங்களை ஆள்பவனா கவும் இருந்திட வேண்டும்.
இது எளிதான காரியம் அல்ல என்பதுடன், ஒரு துளி தவறினால், அத்தகைய முயற்சி, ஆபத்தையே கூட மூட்டிவிடக்கூடும். படிப்போரின் உள்ளத்தில், இந்தச் சூழ்நிலையில், இவன் இப்படித்தான் எண்ணியிருப்பான் இவ்விதம் தான் செய்திருப்பான் என்று யூகித்து எழுதுவதிலேயே தவறுகள் நேரிட்டு விடுகின்றன.
எண்ணத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, முற்றிலும் வேறான, ஆனால் தூய்மையான எண்ணத்தை ஒருவன் கொண்டிருந்தான் என்பதை எடுத்துக்காட்டும் எழுத்தோவியத்த எந்த எழுத்தாளர்களும் தருவதில்லை. காரணம், அது ஆபத்தான முயற்சி என்பதால். ஆனால், தனித் திறமை பெற்ற சிற்சிலர், இத்தகைய எழுத்தோவியத்தை தருகின்றனர். அவர்கள் இறவாப் புகழுக்கு உரியவராகின்றனர்.
– ‘இரும்பு முள்வேலி’ என்ற படைப்பில் அறிஞர் அண்ணா கூறியது.