
ஆக, நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் தடைகள் எதிர்ப்பட்டால், சில சமயங்களில் இன்னும் கடினப்பட்டு உழைக்க வேண்டும், வேறு சில சமயங்களில் விட்டு விலகிவிட வேண்டும். இந்த வித்தியாசத்தை துல்லியமாக புரிந்துகொள்வதுதான் வெற்றிக்கான சூத்திரம் என்கிறார் சேத் கோடின்.
எந்த ஒரு வேலையையும் நாம் தொடங்குகிறபோது நமக்குள் ஒரு பெரிய உற்சாகம் இருக்கும். இதை முடித்தே தீரவேண்டும் என்கிற ஆவேசத்துடன் சுறுசுறுப்பாக வேலை பார்ப்போம். புதுப்புது விசயங்களை கற்றுக் கொண்டு அதிவேகமாக முன்னேறுவோம். ஆனால் ஒரு கட்டத்தில் சுலபமான விசயங்கள் தீர்ந்துபோய், கொஞ்சம் கடினமான சமாசாரங்கள் எதிர்ப்படும். இதற்கு மேலும் இந்த வேலையை செய்வது அவசியமா என்று கூடத் தோன்றும். அதை சமாளிக்க பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும் என்கிறார் சேத் கோடின்.
டெட்என்ட் என்பது இதற்கு நேர் எதிர். இங்கேயும் நீங்கள் ஒரு பெரிய தடையைச் சந்திக்கிறீர்கள். ஆனால், அந்த இடத்தில் நீங்கள் எவ்வளவுதான் முட்டி மோதினாலும் பலன் இருக்காது. முன்னேற வாய்ப்பே இல்லாத முட்டுச் சந்து. அதற்காக, கடினம் வரும்போதெல்லாம் அது முட்டுச்சுவர் என்று நினைத்து விலகிவிடக்கூடாது. அது சுத்த முட்டாள்தனம். ஓர் இடத்தில் பத்து அடி தோண்டி விட்டு தண்ணீர் வரவில்லை என்று நம்பிக்கை இழந்து, இன்னோர் இடத்தில் இன்னொரு பத்து அடி தோண்டி, மீண்டும் நம்பிக்கை இழப்பதைவிட, முதல் இடத்திலேயே இன்னும் ஆழமாக இருபது அடி தோண்டியவர்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இல்லையா?
ஆக, எப்போது விலகவேண்டும், எப்போது இன்னும் தீவிரத்துடன் போராடவேண்டும் என்கிற வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது அவசியம். நீங்கள் கேள்விப்பட்ட வெற்றியாளர்கள் எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் இதுமாதிரி பல தடைகளைச் சந்தித்திருப்பார்கள். டெட்என்ட் களைவிட்டு விலகி டிப்களை எதிர்த்துப் போராடி முன்னேறியிருப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால்;
* தேவையில்லாத விசயங்களில் அதிக நேரம் செலவிடுவதன் மூலம் நாம் நம்முடைய உழைப்பை வீண்டிக்கிறோம்.
* பயனில்லாத முயற்சிகளை சீக்கிரத்தில் அடையாளம் காணவேண்டும், தயவு தாட்சண்யமே பார்க்காமல் அவற்றை விலக்கிவிடவேண்டும்.
* அதே நேரம் நமக்கு எது அவசியம் என்பதில் தௌ¤வாக இருக்க வேண்டும், எங்கே நம்முடைய முயற்சியைச் செலுத்தினால் வெற்றி உறுதிப்படும் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப உழைப்பைப் புத்திசாலித்தனமாகச் செலவிட வேண்டும்.
இந்த மூன்று அம்சங்களை முக்கியமாக சொல்கிறது இந்தப் புத்தகம். நீங்களும் பழகிப் பாருங்கள் வெற்றி நிச்சயம்.!