Header Banner Advertisement

தூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் ‘சிப்ஸ்’


Untitled

print
விதவிதமான வண்ணமயமான காற்றடைத்த சிப்ஸ் பாக்கெட்டுகள் பெட்டிக் கடைகளில் கூட சாரை சாரையாகத் தொங்குகின்றன. இந்த ‘சிப்ஸ்’ ருசிக்காக ஒருவன் இறந்து போவதாக விளம்பரம் டிவியில் வருகிறது. உண்மையில் இந்த சிப்ஸை சாப்பிட்டால்தான் ஆரோக்கியம் கெட்டு மரணம் கூட வந்தாலும் வரும்போல. ஒவ்வொருநாளும் சிப்ஸ் குறித்து வரும் ஆய்வுகள் திடுக்கிட வைக்கின்றன.

இரவில் ‘சிப்ஸ்’ கொறித்துக் கொண்டும், ‘ஜோக்’ அடித்துக் கொண்டும் டி.வி. நிகழ்சிகளை பார்ப்பது இரவின் ஆழ்ந்த தூக்கத்தை கெடுக்கும் என்று ஒரு ஆய்வு தற்போது தெரிவிக்கிறது.

கிரிக்கெட், கால்பந்து போட்டிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பாகின்றன. இப்போது கூட டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி இரவில்தான் நடக்கிறது. நல்லவேளை நள்ளிரவுக்கு முன்பே முடிந்துவிடுகிறது.

இப்படிப்பட்ட போட்டிகளை விளையாட்டு ரசிகர்கள் இரவு நேரத்தில் கண்விழித்து டி.வி. பார்ப்பது வழக்கம். அத்துடன் ‘சிப்ஸ்’ போன்ற நொறுக்குத்தீனிகளை கொறிப்பதும், குளிர்பானங்கள் குடிப்பதும் நாகரிக வழக்கமாகி வருகிறது. இது இரவு நேர ஆழ்ந்த நித்திரையை கெடுக்கும் என்கிறது ஆய்வு.

சிப்ஸைக் கொறிப்பதால் இரவில் அடிக்கடி விழித்துக் கொள்வதும், தூக்கம் வராமல் புரள்வதும் நேரிடும். பொதுவாக நமது உறக்கத்தின் போதும், கனவு காணும் போதும், கருவிழிகள் அசையும். இரவு நேரத்தில் கொறிப்பதால், கருவிழி அசைவு குறைவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சராசரியாக ஒரு நாளுக்கு ஆண் என்றால் 1600 கலோரியும், பெண் என்றால் 1400 கலோரியும் உணவு தேவை. இந்த உணவில் 25 சதவீதத்துக்கு குறைவாக கொழுப்புச்சத்து இருக்க வேண்டும். ஆனால் 10 துண்டு ‘சிப்ஸ்’ சாப்பிட்டால் அதில் 4 கிராம் கொழுப்புச்சத்து கூடிவிடும். அதாவது நம் உடலில் உடனடியாக 36 கலோரி சேருகிறது. தினமும் ஏராளமாக ‘சிப்ஸ்’ சாப்பிடுவதால் சராசரியாக ஒரு பாக்கெட்டுக்கு 40 கிராம் கொழுப்பும், 360 கலோரியும் உடலில் சேர்கிறது. இதனால் மொத்த கலோரி 2 ஆயிரமாக அதிகரிக்கிறது. இதனால் இரவில் ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை. சிப்ஸை கணக்கில் சேர்க்காமல் நாள் முழுவதும் சாப்பிடும் உணவில் கொழுப்புச்சத்து அதிகமாக இருந்தாலும், அந்தக் கொழுப்பு இரவில் ஆழ்ந்த உறக்கத்தை கெடுக்கும்.

இந்தியாவைப் பொறுத்த வரை ஒருவரது உணவில் 45 சதவீதம் கொழுப்புச்சத்து உணவாகவே இருக்கிறது. இதனுடன் இரவு நேரத்தில் சிப்ஸ் அல்லது நொறுக்குத்தீனிகளை கொறிப்பதால் கொழுப்புச்சத்து மேலும் அதிகரித்து தூக்கத்தை கெடுக்கிறது.

ஒருவருக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூக்கம் தேவை. நல்ல தூக்கம் இல்லாததால் மறுநாள் பகல்பொழுதில் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கபடுகின்றன. சிந்தனைத்திறன் குறைதல், கவனம் சிதறுதல், நினைவு மறதி, விபத்துக்கள் போன்றவை நிகழ்கின்றன.

இரவு உணவு முடிந்த பின் குறைந்தபட்சம் 3 மணி நேரத்துக்குப் பிறகே தூங்கச் செல்ல வேண்டும். இரவு நேரத்தில் காலம் தாழ்த்தி சாப்பிடுவதும், தூக்கம் விழிப்பதற்காக நொறுக்குத்தீனிகள் கொறிப்பதும் தூக்கத்தை கெடுக்கும். ஒருநாள் இரவின் நல்ல தூக்கம் 10 வேலை உணவு தரும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் தரும். அதனால் நல்ல இனிமையான ஆழ்ந்த உறக்கத்தை துரத்தும் சிப்ஸ்களை தவிர்ப்பது நல்லது.

குழந்தைகளுக்கு சிப்ஸை கண்ணில்கூட காட்டி விடாதீர்கள். டி.வி.யில் எத்தனை கவர்ச்சியாக விளம்பரம் வந்தாலும் அதைப் பார்த்து குழந்தைகள் கேட்டாலும் அந்த பாழும் கொழுப்பை வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள். இதுதான் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நாம் தரும் ஆரோக்கிய முதலீடு.