Header Banner Advertisement

தூமணி மாடம் – வரதராஜன் ஸ்வாமி!


thoomani-madam

print

“கைலி கட்டிக்கொண்டும், மீசை வைத்துக்கொண்டும், திருமண் (நாமம்) இட்டுக் கொள்ளாது பாழும் நெற்றியுடன்” உள்ள லௌகீக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கான பத்திரிகை”

இப்படி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வெளிவந்த பத்திரிகைதான் “தூமணிமாடம்” என்னும் வைஷ்ணவ மாத இதழ்.

மிக எளிய, யார் மனதையும் புண்படுத்தாத எழுத்து நடை, கல்கியின் தீவிர ரசிகர் என்பதால் அதேபாணி நகை(ச்)”சுவை”.

விஷயங்களை “நறுக்”கென சொல்லி விளக்கும் தீவிரம், பிரச்சனைகளை மட்டும் சொல்லாது அதற்கு தீர்வும் சொல்லி, என்ன செய்யவேண்டும் என வழிகாட்டும் திட்டம், இதில் தூமணிமாடம் பாணி புத்தூர் ஸ்வாமி பாணி.

ஸ்ரீவைஷ்ணவம் என்பது உலகின் ஆதிமதம், வேதமதம், வைதீக மதம், இன்று அது ஐயங்கார்கள் என ஒரு ஜாதி போல அழைக்கப்படுவது அவலம், அறியாமை.

வைஷ்ணவ மத அடையாளம் என்பது எல்லாவற்றிலும் தனித்துவம் பெற்றது,நெற்றியில் இட்டுக்கொள்ளும் திருமண் என்னும் மத சின்னமானாலும் சரி, ‘பாயசம்’என்பதை ‘திருக்கண் அமுது’ என்றும் ‘துளசி’யை ‘திருத்துழாய்’ என சொல்லுவதிலும் சரி, ‘மறந்தும் புறந்தொழாமை’ என்னும் இறைவழிபாடானலும் சரி. கட்டிக்கொள்ளும் வேஷ்டி, உடுத்திக்கொள்ளும் மடிசார், மணிப்ரவாள எழுத்து நடை, பேச்சு நடை,மொழி, என எல்லாவற்றிலும் தனித்துவம்.

இந்த கலாசார அடையாளங்கள் நாகரீக உலகில் கடந்த சில தலைமுறைகளில் தொலைந்து வருவதை இயன்றவரை மீட்டு வரவேண்டும் என எண்ணி ஆரம்பிக்கப்பட்டது தூமணிமாடம் மாத இதழ், இது மற்ற ஸ்ரீவைஷ்ணவ பத்திரிகை போல அல்ல, இது செய்தியையும் சிந்தனையையும் தாங்கி வந்தது. ஸ்ரீ:யபதியான ஸர்வேஸ்வரன் என ஆரம்பிக்காத பத்திரிகை.

1993 களில் வெளியாகி பிறகு நின்றுபோய் மீண்டும் 2002 இல் துவங்கியது. ஸ்ரீ வைஷ்ணவர்கள் பரமபதம் அடைந்து விட்டால் மறுபிறவி கிடையாது ஆனால் ஸ்ரீ வைஷ்ணவ பத்திரிகைகளுக்கு அப்படியில்லையே? அதனால் மறுபிறவி.

எங்கும் சைவம்தான் வளர்ந்துள்ளது வைஷ்ணவம் வளரவே இல்லை

எப்படி சொல்றே ?!

எங்குபாத்தாலும் சைவ ஹோட்டல்கள் தான் உள்ளது ‘வைஷ்ணவ ஹோட்டல்’னு ஒண்ணுகூட இல்லையே?!

——————————————————————

இந்தாங்கோ கோவில் பிரசாதம் தத்யோன்னம் (தயிர்சாதம்), இன்னிக்கு எனக்கு பிறந்த நாள் அதனால்…

பெருமாளுக்கு சக்கரைபொங்கல்தானே உகப்பு

எனக்கு சுகர் இருக்கே அதனால்தான்

!!!!!

பல மனித மனத்தின் போலி பக்தியை கீரியும், கிண்டியும் பார்க்கும் அவரது கடைசி பக்க ஜோக்குகள்.. “விருச்சிகம்” என்ற பெயரில் எழுதியவை..

அதனால்தான் தேள் கொட்டுவது போல் உள் அர்த்தத்துடன் இருந்தது அவரது நகைச்சுவை.

வைஷ்ணவர்களுக்கு என்று ஒரு செய்தி பத்திரிகை வேண்டும் கோயில் ஸம்ப்ரோஷ்ணம், முதல் நமது சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் என எல்லாவற்றினையும் பற்றிய செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அவரது நோக்கம் அதுவே தூமணிமாடத்தின் ப(பா)ணியாக இருந்தது.

ஸ்ரீ ராமானுரரின் ஆயிரமாவது ஆண்டு வரப்போகிறது எனவே ஸ்ரீ ராமானுஜரின் திருவுருவம் பொறித்த காசு, ஸ்டாம்ப் வெளியிட வேண்டும் என அறிவிஜீவி உலகம் சிந்தனையை வெளியிட்டபோது அதில் உள்ள முட்டாள்தனத்தினை கிண்டல் செய்து அவர் தூமணிமாடம் இதழில் வெளியிட்ட கார்ட்டூன்.

கல்யாணம், சீமந்தம் என எந்த ஒரு பெரிய சிறிய குடும்ப விசேஷமானாலும் நடுத்தர வயதுக்காரர்கள் பத்துபேர் ஸம்ப்ரதாயம் கலாசாரம் எல்லாம் ரொம்ப கெட்டுடுத்து… யார் சொல்றது யார் திருத்துவது என “நெட்டைமரங்களென பெட்டை புலம்பல்” செய்யும்போது..

ஸம்ப்ரதாயம் கெட்டுப்போயிடுத்து என நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன் ஆனால் அதை திருத்த நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? நாம எல்லோரும் இப்படி புலம்பிக் கொண்டிருப்பதனால் ஆவது என்ன? ஏதாவது செய்ய வேண்டாமா? என எதிர்கேள்வி கேட்டு ஒரு லெட்டர் பேட் அமைப்பாவது நமக்கென வேண்டும் அது இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது என்பார்.

நமக்கென்று ஒரு அமைப்பு வேண்டும் என எண்ணி ஸ்ரீ வைஷ்ணவ கலாசார பாதுகாப்பு இயக்கம்” என்ற ஒன்றை துவங்கினார், வேளச்சேரியில் அவரது திருமாளிகையில் அதன் துவக்கவிழா.

இயக்கம் மூலம் வைஷ்ணவர்கள் பற்றிய சென்சஸ் ஒன்றை துவங்கியிருந்தார் அது நாகை மாவட்டத்தில் நடந்தது

நக்கீரனில் இந்துமதம் எங்கே போகிறது? என்னும் தலைப்பில் ஆஸ்திக வேடம் பூண்ட நாஸ்திகராம் ராமானுஜ தாதாசாரியார் அவர்கள் எழுதிவந்த பொய்யையே ஆதாரமாக கொண்ட தொடருக்கு எதிர்ப்பு தெரிவிக்க இயக்கத்தின் சார்பில், ராமானுஜ தாதாசாரியாரை நேரில் சந்தித்து கேள்விகள் கேட்டு திணற அடித்தததும்,தாதாசாரியாரே தனது தவறை ஒத்துக்கொண்டதும் சாதனைகள்

தினமலரில் ஆன்மீகம் என்கிற பெயரில் ஸ்ரீ ராமர் லிங்கபூஜை செய்தார், ஸ்ரீ நரசிம்ஹரை சரபர் அடக்கினார் என்றெல்லாம் பொய்யை எழுதி வந்த தினமலர் ஆன்மீகப்பகுதியை தினமலர் திருச்சி அலுவலகம் சென்று நேரடியாக கண்டித்து அதன் ஆசிரியரிடம் வலியுறித்தியது எல்லாம் இயக்கத்தின் சாதனைகள்.

திருக்கண்ணமங்கை திவ்யதேசத்தில் ஸாயரக்ஷை ஆராதனத்துக்காக திரை சாத்தியிருந்தது, பெருமாள் தரிசனத்திற்கென்று காத்திருந்தனர், சிலர் மௌனம், சிலர் பேச்சு, ஆனால், அங்கே இருந்த ஒரு சிறு கம்பை எடுத்துக்கொண்டு துவாரபாலகர் அருகேயும் நிலைக்கதவுகள் ஓரத்திலும் இருந்த ஒட்டடையை நீக்கிக்கொண்டிருந்தார். ஆம் அதுதான் அவர்…

தாம்ப்ராஸ் தலைவர் ஸ்ரீ நாராயணன் அவர்களை நீங்கள் வைஷ்ணவர் உங்கள் சமூக சேவை பாராட்டுக்குரியது அதே சமயம் உங்கள் சமயச்சின்னத்தினை திருமண்ணை ஏன் நீங்கள் நெற்றியில் தரிப்பதில்லை என நேரடியாக கேட்டவர்,இப்போதெல்லாம் ஸ்ரீ நாராயணன் நெற்றியில் குறைந்த பட்சம் ஒற்றை திருமண்ணுடனாவது காட்சி தரும்போது தூமணிமாடம் ஸ்வாமி அதில் தெரிகிறார்.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்ற அவரது பல நகைச்சுவைகளில் மற்றொன்று

அவர் எல்லா விஷயத்திலும் ஸ்ரீ வைஷ்ணவர்

எப்படி சொல்றே?

அவர் குடிப்பது சக்ரா டீ, வீடுகட்றது விஷ்ணு சிமிண்ட், அய்யங்கார் பேக்கரீலதான் ஸ்வீட் வாங்கறார். தீபாவளிக்கு லக்ஷ்மி வெடி, விஷ்ணு சக்கரம்தான்.

அப்படியா பேஷ் பேஷ் உடுத்திக்க என்ன செய்யறார்

சங்கு மார்க் கைலிதான்

———————————————————————

நம் மனதில் மாற்றத்தினை தூண்டும் அவரது சிறுகதை வாழைப்பழத்தில் ஸாரி தேங்காயில் ஏற்றிய ஊசி.

ஜருகண்டி

என்ன வரதன் ஸ்வாமி திருப்பதி போகலாமா?

என்ன விஸேஷம்?

கைங்கர்யத்துக்கும் பெருமாள் சேவிக்கவும் தான் ..திருப்பதி தேவஸ்தானம் இப்போ பக்தர்கள் வரிசையை சரிபண்ண, லட்டு புடிக்க, அன்னதான கூடத்தில் வேலை செய்ய என வாலண்டியர்சை கூப்பட்றா.. பத்துபேரா சேந்து போகலாம்…

அதுக்கென்ன எனக்கும் டிக்கெட் புக் பண்ணுங்கோ என்றார் வரதன்,

வரதனுக்கு பூர்வீகம் சீர்காழிக்கு அருகே உள்ள கூத்தியான்பேட்டை கிராமம் அவர் அப்பா சன்னதி அர்ச்சகர், எதற்கும் இருகட்டும், அவசர உதவிக்கு என ஆராதனையை பையனுக்கும் சொல்லிக்கொடுத்து வைத்திருந்தார். கிராமத்துக் கோயில் மிகச்சிறியதாக இருக்கும். ஒருவேளை பூஜைக்கே சிரமம்.

வேலை நிமித்தமாக வரதன் வெளியூர் சென்று ரிட்டயரும் ஆகி பையங்களுடன் சென்னையில் செட்டில் ஆனாலும் அடிக்கடி கிராமத்துக்கு வந்து வரதராஜ பெருமாளை சேவித்துச் செல்வதுண்டு தான் வாழ்கையில் இந்த அளவு முன்னேறி வந்தது கூதியான்பேட்டை பெருமாள் அனுக்ரஹத்தால்தான் என்பது வரதனின் அசைக்கமுடியாத எண்ணம்.

வயோதிக வயதில் பல கிலோமீட்டரிலிருந்து வரும் ஆராதகர். கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு ஸ்மார்தர் உதவியால் ஆராதனை நடக்கிறது. வயசாச்சு வேறு ஆள் வெச்சுக்கோங்கோ என அடிக்கடி சொல்லிவரும் வயோதிக ஆராதகர். காலம் ஓடிக்கொண்டிருக்கிறது

வரதா டிக்கெட் புக் பண்ணியாச்சு என இரவு வந்து சொல்லிவிட்டு போனார் ஜகந்நாதன் ஸ்வாமி.

திருப்பதி செல்லும் உற்சாகம், மனக்கண்ணில் விரிய படுக்கைக்கு சென்றார் வரதன்

திருப்பதிக்கு போயாச்சு நீண்ட க்யூவில் நின்று மெதுவாக நகர்ந்து இதோ பெருமாள் சன்னதி வாசலுக்கு வந்தாச்சு கூட்டம் மறைக்கிறது எம்பி பார்க்கிறார் வரதன்

இதென்ன ஆச்சர்யம் வேங்கடாசலபதியின் நெடிய உருவம் தெரியவில்லையே?சுற்றிலும் இப்போ ஜனங்களையும் காணவில்லை?! திருப்பதி கற்பக்ரஹமாகத் தெரியவில்லையே? அதற்குப் பதில் .. இருண்ட கற்பக்ரஹம், அங்கே மினுக்கென்று ஒளிரும் சிறுவிளக்கு வௌவால் புழுக்கை மணம், பெருமாளும் வேறே… அப்போ… பொரிதட்டினார் போல் விழித்து எழுந்தார் வரதன். உடம்பெல்லாம் இனம்புரியாத சிலிர்ப்பு.

வசந்தா வசந்தா என விடிந்ததும் விடியாதும் மனைவியை கூப்பிட்டார்.. ஜகந்நாதன் ஸ்வாமி வந்தால் திருப்பதிக்கு நான் வரலைன்னு சொல்லு.. நான் முன்னாடி கிளம்பி போறேன் நீ துணிமணியெலாம் எடுத்துண்டு ஆத்தை காலி பண்ணிண்டு வா. பஸ்டாண்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக பயணத்தினை துவங்கினார்.

கிராமத்துக்கு போய் சேரும்போது சாயங்காலமாகிவிட்டது.

மாமா நல்லவேளை நீங்களே வந்துட்டேள்.. நானே உங்களுக்கு போன் செய்யணும்னு நினைச்சேன். ஆராதகர் மாமா நாளையிலேந்து வரமுடியாதுன்னு சொல்லிவிட்டார். என்ன பண்றதுன்னு நினைச்சேன்…

கவலை படாதீர் எல்லாம் பகவான் செயல், உங்காத்திலே ஒரு போர்ஷனை ஒதுக்கி கொடுங்கோ நானும் என் ஆத்துக்காரியும் தங்க அதுபோதும்.

தீர்தாமாடி வேஷ்டி உடுத்தி, நெற்றி இட்டுக்கொண்டு சன்னதி நோக்கி நடந்தார்.

பெருமாள் சேவையானார்,

ஆனால்! என்ன ஆச்சர்யம் !

இங்கே ஸேவை ஆவது வரதராஜன் அல்லவே… ‘ஜருகண்டி’, ‘ஜருகண்டி’ என்ற சத்தம் துல்லியமாக கேட்டது.

தன்னை மறந்து கை கூப்பி நின்றுகொண்டே இருந்தார் வரதன். ஹே! வேங்கடேசா , ஹே! வரதராஜா! உடம்பில் ஒரு புல்லரிப்பு… கண்களில் நீர் பெருக்கு,மனதில் இனம் புரியாத உற்சாகம்..

கட்டுரை – தேப்பெருமாநல்லூர் நரசிம்மன்