Header Banner Advertisement

தெற்கேயும் ஒரு எல்லோரா !


DSCN1802

print
கழுகுமலையைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அங்கு போக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றவில்லை. என் முகநூலில் இருந்த ஜெர்மனி தேசத்து நண்பர் ஒருவர் கழுகுமலையைப் பற்றி சிலாகித்துப் பேசினார். அந்த அற்புதத்தை இதுவரை நான் பார்த்ததில்லை, என்றதும் ‘அட! அற்ப பதரே…!’ என்று என்னை மனதுக்குள் திட்டித் தீர்த்திருப்பார். நமது கலைப் பொக்கிஷங்களைப் பற்றி நம்மை விட வெளிநாட்டினர் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
அந்த உரையாடலுக்குப் பின் கழுகுமலையைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற தீராத வேட்கை என்னுள் குடிகொண்டது.
ஒரு நல்ல நாள், காலைப் பொழுதில் மைசூரிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவில்பட்டிக்கு டிக்கெட் எடுத்து ஏறிக் கொண்டேன். கழுகுமலைக்கு கோவில்பட்டி வழியாகத்தான் போயாக வேண்டும். ரயில் சீமைக்கருவேலம் செடிகளுக்கு நடுவே போய்க் கொண்டிருந்தது.
அன்று வெயில்  இல்லை!
லேசான மேகமூட்டம்…
இதமான சாரல்…
குளுமையான காற்று…
பயணத்தை இனிமையாக்க இது போதாதா…?!
இப்படிப்பட்ட சூழல் மனிதர்களை விட மயில்களுக்கு மிகவும் பிடிக்கும்.
திருமங்கலத்தைக் கடந்து விட்டால் ரயில் பாதை அருகே நிறைய மயில்கள் பறந்து திரியும்!
நமக்கு நல் அதிர்ஷ்டம் இருந்தால், அந்த மயில்கள் தோகை விரித்து ஆடுவதையும் பார்க்கலாம்.
இயற்கையின் இனிமையை ரசித்தபடி கோவில்பட்டி வந்து சேர்ந்தேன்.
பகல் ரயிலில் ஒரு சௌகர்யம் இருக்கிறது. நாம் எந்த ஊருக்கு அருகில் பயணிக்கிறோமோ அந்த ஊர் தின்பண்டங்களை ரயிலில் விற்று வருவார்கள்.மணப்பாறை முறுக்கு, கடம்பூர் போளி,  ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வரிசையில் கோவில்பட்டி கடலை  மிட்டாயக்கும் இடம் உண்டு. இதற்கு ருசியும் அதிகம்!
கோவில்பட்டியில் இறங்கினேன். மதுரையிலிருந்து 92 கி.மீ. பயணித்து வந்திருந்தேன். இங்கிருந்து இனி பஸ்ஸில் போகவேண்டும்.
கழுகுமலை இங்கேயிருந்து சங்கரன்கோவில் போகும் வழியில் 25வது கி.மீ. தொலைவில் இருக்கிறது.பஸ் நிலையத்தில் சங்கரன்கோவில் செல்லும் பஸ் தயாராக உறுமிக் கொண்டு நின்றது. அதில் ஏறினேன்.
கோவில்பட்டி நகர எல்லையைக் கடந்து சங்கரன் கோவில் ரோட்டில் பயணிக்கும் போதே கிராமிய மணம் காற்றோடு கலந்து வருகிறது. இந்தப் பகுதிக்கும் பறவை, விலங்கு போன்ற உயிரினங்களுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் இருக்கிறது போலும். ஊர் பெயர்கள் குருவி குளம், வானரமுட்டி, நாலாட்டின் புத்தூர், கழுகுமலை என்று அவைகளின் பெயரிலேயே இருக்கிறது. ஒருவழியாக கழுகுமலை வந்து சேர்ந்தேன். கழுகுமலை பஸ் நிலையமும் சமணர் மலையும், ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் போல் அருகருகே இருக்கின்றன. நடந்து செல்லும் தொலைவில் மலைமீது ஏறுவதற்கான நுழைவு வாயில் இருக்கிறது.
 மலையின் உயரமும் குறைவுதான். 300 அடி. உயரத்தை விட அகலமாக பரவியிருக்கும் மலை இது. சமணர்கள் வாழ்ந்த மலைகள் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. பெரும் பாறை தான் அவர்களின் இலக்காக இருந்திருக்கிறது. மரங்கள், செடிகள் சூழ்ந்த மலைகçe அவர்கள் விரும்பவில்லையோ என்னவோ தெரியவில்லை. யானை மலை, கீழ்க்குயில் குடி, அரிட்டாப்பட்டி, நாகமலைப்புதுக்கோட்டை, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் இருக்கும் சமணர் மலைகள் இதைத்தான் ஞாபகப்படுத்துகின்றன.
விதிவிலக்காக சிதறாலைச் சொல்லலாம். அங்குதான் கொஞ்சம் பசுமை கண்ணுக்குத் தெரிகிறது. கழுகுமலையின் படிக்கட்டுகளில் ஏறினேன். 15 நிமிடங்களில் உச்சியை அடைந்து விடலாம். உயரம் செல்ல செல்ல கீழே தெரியும் காட்சிகள் ஆச்சரியமாக விரிந்தது. உயரத்திலிருந்து பார்க்கும்போது பூமித்தாய் பசுமைப் போர்வையை தன் மீது அடர்த்தியாக போர்த்திக் கொண்டதுபோல் இருந்தது. எங்கும் பசுமை. கண்ணை குளிர்ச்சியாக்கியது. மலையின் கிழக்குப் பக்கம் வெட்டுவான் கோயில் இருக்கிறது. இதை தென்னகத்தின் எல்லோரா என்று சொல்கிறார்கள். எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில்தான் ஒரே கல்லில் பாறையின் மேலிருந்து கீழ்பக்கமாக செதுக்கிக் கொண்டே வருவார்கள். இந்தக் கோயிலும் அதே பாணியில்தான் அமைக்கப்பட்டுள்ளது.

எல்லோராவின் பாறை கடினத்தன்மையற்றது. கழுகுமலையோ கடினமான பாறையால் ஆனது. இந்த கடினமான பாறையை 25 அடி ஆழத்திற்கு நான்கு புறமும், வெட்டி எடுத்து. நடுமையத்தில் அழகிய கோயிலை உருவாக்கியிருக்கிறார்கள். கி.பி.8ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் உருவாக்கப்பட்டகோயில், முழுமை பெறாமல் பாதியோடு நிற்கிறது.
கோபுர சிகரமும், கருவறையும், அர்த்த மண்டபமும் உள்ளன. கோயில் கோபுரத்தில் உமாமகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா வடிவங்கள் காணப்படுகின்றன. விமானத்தின் மேற்கு திசையில் நரசிம்மரும். வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகள் உள்ளன. அவற்றுக்கு கீழே யாளி வரிகளும், கமோதகமும் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. ஒரு சிற்பக் களஞ்சியமாக இந்த இடம் உள்ளது. இந்த வெட்டுவான் கோயிலிருக்கும் மலையின் பெயரை அரைமலை என்று சொல்கிறார்கள். பாண்டியன் பராந்தக நெடுஞ்செழியன் காலத்தில் இங்கு நிலைப்படை ஒன்று இருந்ததாம். வரலாறு இப்படி சொன்னாலும் உள்ளூர் மக்கள் வெட்டுவான் கோயிலைப் பற்றி சிறப்பான கதையயான்றை சொல்கிறார்கள்.
பாண்டிய நாட்டில் மிகப் புகழ்பெற்ற ஒரு சிற்பி இருந்தான். அவன் சிலை செதுக்கும் நேர்த்தியைக் கண்டு அவன்தான் தெய்வ தச்சன் என்று அழைக்கப்படும் மயன் என்றே நம்பினர். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். மிகச் சிறியவன். கோயில் திருவிழாவில் திரண்டிருந்த கூட்டத்தில் மகனை தொலைத்து விட்டான். அதன்பின் எங்கெங்கோ தேடியும் மகன் கிடைக்கவில்லை. மகனுக்காக பல நாட்கள் அழுது புலம்பினான். பிறகு மனதை தேற்றிக் கொண்டு இந்த மலைக்கு வந்தான். சமணத் துறவிகள் சிலைகள் வடித்துக் கொடுத்துக் கொண்டு இங்கேயே தங்கி விட்டான். இந்த மலையே அவனது உலகமானது.

சில வருடங்கள் கழித்து மலையின் கீழ்பகுதியிலிருந்து கல் செதுக்கும் ஒலி கேட்கத் தொடங்கியது. அதைப் பெரிதாக அவன் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மலைக்கு மேலே வருபவர்கள் எல்லாம் அந்த சிற்பியைப் பற்றியே பேசினார்கள். சிலர் இவனிடம் கீழே ஒரு இளைஞன் என்னமாக சிலை செதுக்குகிறான் தெரியுமா? ஒவ்வொன்றும் கண்களை விட்டு அகலாத அழகு! பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது…! என்று சொன்னார்கள். வருபவர்கள் எல்லாம் புதிதாக முளைத்த அந்த சிற்பியைப் பற்றியே பேசியது இவனுக்கு வெறுப்பைத் தந்தது?

 

 

ஒரு நாள் கோபத்துடன் தன் கையிலிருக்கும் உளியைக் கீழே சிலை செதுக்கும் இளம் சிற்பியை நோக்கி வீசி எறிந்தான். அவன் அப்பா…! என்று அலறி விழுந்தான். அந்த இறுதிக்குரல் சிற்பியை இழுத்தது. போய் பார்த்தால் திருவிழாவில் காணாமல் போன அவனுடைய மகன். உளி தலையை இரண்டாக வெட்டியிருந்தது. மகன் செதுக்கிய சிற்பங்களைப் பார்த்து மலைத்துப் போய் நிற்கிறான். மகனை மடியில் போட்டு அழுகிறான். இப்படி சிற்பி பாதியிலேயே இறந்து போனதால் கோயிலும் முடிவு பெறாமல் இருக்கிறது என்றும் வெட்டியதால் வெட்டுவான் கோயில் என்று பெயர் வந்ததாகவும், பாறையிலிருந்து வெட்டியயடுக்கப்பட்ட கோயில் என்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். சிலைகள் ஒவ்வொன்றும் பேசும் அழகு. கோயிலின் முகப்பின் அன்னியோன்யமாகப் பேசிக் கொண்டிருக்கும் சிவன்-பார்வதி சிற்பங்களை வேறு எங்கும் பார்க்க முடியாது.

 

 

பொதுவாக கோபுரங்களிலில் காணப்படும் சுதைச் சிற்பங்கள் இங்கு கருங்கல்லில் நுணுக்கமான அழகுடன் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. நடன மாதர்களின் சிற்ப அழகும் வியக்க வைக்கிறது. இதுபோன்ற ஒரு கலைப்படைப்பு மேலைநாடுகளில் இருந்திருந்தால் இந்நேரம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டிருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்களுக்குக் கூட இதன் அருமை தெரியவில்லை.

  

வெட்டுவான் கோயிலிலிருந்து மலையின் மேற்கு பகுதியில் சென்றால் பாறையின் சரிவில் சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் வரிசையாக உள்ளன. சமணர்கள் தங்களின் குரு, தாய், தந்தை, மகன், மகள் நினைவாக இந்த சிற்பங்கçe உருவாக்கியிருக்கிறார்கள். சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயரை வட்டெழுத்துக்களாகப் பொறித்தும் வைத்துள்ளார்கள்.
மூன்று வரிசைகளாக இந்த சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. சேலைகளுக்கும், பார்டர்களுக்கும் பயன்படுத்துவது போன்ற வடிவமைப்பை அந்த காலத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள். சமணர்கள், தியானம் செய்த குகையும் இங்குள்ளது. சமீப காலத்தில் ஒரு அய்யனார் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவிலின் பின்புற சுவருக்கும், பாறைக்கும் இடையே இருக்கும் சிற்பங்களின் அழகு வெளியே தெரியாமல் கோவில் சுவர் மறைத்திருக்கிறது. நமது மக்களுக்கு கலைகளின் அழகும், பாரம்பரியத்தின் பெருமையும் தெரியவில்லை என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணத்தை பார்க்க முடியாது. அய்யனார் கோயில் அருகே செல்லும் பாதை வழியாக மேலே சென்றால் அங்கு ஒரு மகாவீரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் பார்த்து திரும்பலாம். எல்லா மலைகளிலும் இருப்பது போல் இங்கும் குரங்குகள் தொல்லை இருக்கிறது. வெட்டுவான் கோயிலில் இருந்து சமணர் சிற்பங்களுக்கு போகும் வழியில் ஒரு சிறிய குளம் இருக்கிறது. சமணர்கள் நீராடுவதற்கும் அருந்துவதற்கும் இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கழுகுமலையில் இருக்கும் இன்னொரு சிறப்பு என்னவென்றால் கழுகாசலமூர்த்தி முருகன் கோயில். அருணகிரிநாதர் இந்தத் தலத்தைப் பற்றி பாடியிருக்கிறார். மலையைக் குடைந்து குகைக்குள் மூர்த்தி அமைக்கப்பட்டுள்ளதால் இதைக் குடவறைக் கோயில் என்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு விமானம் கிடையாது. மலையே விமானமாக திகழ்கிறது. கருவறையில் வள்ளி, தெய்வானையோடு முருகன் காட்சியளிக்கிறார். மற்ற கோயில்களில் இருப்பது போல் அல்லாமல் முருகனின் வாகனமாக மயில் இடது பக்கத்தில் காட்சி தருகிறது. இது கோயிலின் தனிச்சிறப்பு. இங்குள்ள மூர்த்திக்கு ஒரு முகமும் 6 கரங்களும் தான் உள்ளது. தென்னிந்தியாவிலேயே இந்தக் கோயில் மட்டும்தான் இப்படி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளுக்கு அடுத்ததாக சிறப்பு பெற்றது இந்தக் கோயில். இதை தென்பழனி என்று அழைக்கிறார்கள்.
இங்குள்ள மலையின் கற்பாறையைக் குடைந்து மூர்த்தி அமைக்கப்பட்டிருப்பதால் இது குடவறைக் கோயில் ஆகும். சுற்றுப்பிரகாரம் கிடையாது என்பதால் மலையைச் சுற்றித்தான் வர வேண்டும். அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும் போது இந்தத் தலத்தில் தங்கி பூஜை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோவிலும் பாண்டிய மன்னர்களால் 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோயிலை எட்டயபுரத்து ஜமீன் வழி வாரிசுகள் நிர்வகித்து வருகின்றனர். சிற்பங்களும், ஓவியங்களும் சிறந்து விளங்கும் ஒரு கலைக்கூடமாகவே கழுகாசலமூர்த்தி கோயில் விளங்குகிறது. அரிதான பல வரலாற்று பொக்கி­ங்கள் நிறைந்த இடம் கழுகுமலை. நீங்களும் ஒருமுறை வந்து பாருங்கள்…!