Header Banner Advertisement

நான்கு மதங்களின் புனித இடம்


848f350efa6690947053d13a5f5c348a

print
 ஒரே இடம் இந்து, புத்தம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய நான்கு மதங்களுக்கும் புனித இடமாக இருக்க முடியுமா? முடியும். மிக அரிதாக இப்படிப்பட்ட இடங்கள் உலகில் உள்ளன. அப்படியொரு இடம் தான் இலங்கையில் அமைந்துள்ள ‘ஸ்ரீபாதா’ என்ற ‘சிவனொளி பாத மலை’.

இந்த மலையானது இலங்கையின் சபரகமுவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இடையே ஆன எல்லையில் அமைந்துள்ளது.

கிட்டத்தட்ட 7,359 அடி உயரம் கொண்ட கூம்பு வடிவில் அமைந்த இந்த மலையில் ஏறி இறங்குவதே ஒரு ஆன்மீக அனுபவமாகும்.

இந்த மலையின் உச்சியில் 1.8 மீட்டர் அளவு கொண்ட ஒரு பாறை பாத வடிவில் அமைந்திருக்கிறது. இதை கெளதம புத்தரின் காலச் சுவடு என்று புத்த மதத்தினர் கொண்டாடுகிறார்கள்.

இந்துக்களின் புராண நியதிப்படி இது சிவனின் காலடி. அதனால் இந்துக்களும் இங்கு பயபக்தியோடு கூடுகிறார்கள்.

இஸ்லாமியர்களோ இறைவனின் கட்டளைப்படி ஆதம் வானிலிருந்து முதன் முதலாக இங்குதான் இறக்கி விடப்பட்டார்.

கிறிஸ்துவர்களுக்கோ இது புனித தோமையர் கால் பட்ட இடம். அதனால் அவர்களும் மனமுருகி பிரார்த்தனை செய்கிறார்கள்.

அதனால் இந்த மலையை இந்துக்கள் ‘சிவனொளி பாத மலை’ என்றும், பெளத்தர்கள் ‘ஸ்ரீபாதா’ என்றும், இஸ்லாமியர்கள் ‘பாவா ஆதம் மலை’ என்றும், கிறிஸ்துவர்கள் ‘செயிண்ட் தாமஸ் மவுண்ட்’ என்றும் அழைக்கிறார்கள்.

ஆன்மீகத்தை தவிர்த்துப் பார்த்தால் இந்த மலைக்கு ‘பட்டர்ஃபிளை மவுண்டெய்ன்’ என்று அம்சமான பெயரும் இருக்கிறது.

இந்த மலையின் உச்சியை அடைவதற்கு 6 வழிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிகள் இருக்கின்றன. கீழேயிருந்து மேலே செல்வதற்கு வெகு நேரம் பிடிக்கும். அதனால் இரவு நேரத்தில் மலையேறுகிறார்கள்.

கோடை காலங்களில் மட்டுமே இந்த மலை மீது ஏற முடியும். மழைக்காலங்களில் பெரும் மழை பெய்வதால் ஏறுவதற்கான இடர்பாடுகள் அதிகம் இருக்கும்.

மதங்களின் வேறுபாடின்றி எல்லா மதத்தினரும் சுற்றுலாப்பயணிகளும் கூட்டம் கூட்டமாக மலை ஏறுவதை இங்கு காண முடியும். பாதையின் இடையிடையே சிறு கோயில்களும், கடைகளும் உள்ளன. படிகளின் பல இடங்களில் அடர்ந்த புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. படிகளும் சிதைவடைந்து உள்ளன.

ஆங்காங்கே இளைப்பாறுவதற்கென்றே மர இருக்கைகள் அமைத்துள்ளார்கள். மிகவும் செங்குத்தான பாதை! மேலே செல்ல செல்ல மலைப்பைத் தரும். மலை உச்சியில் உள்ள மண்டபங்களில் சிவன் படமும் புத்தர் படமும் வைக்கப்பட்டிருக்கின்றன.

குளிர் கடுமையாக இருக்கும் இடம் இது. காலையில் சூரிய உதயம் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இரவில் மலையேறுபவர்கள் தான் இங்கு அதிகம். விடிவதற்கு முன் உச்சியில் வந்து சூரிய உதயத்தை பார்க்கின்றனர்.
மலையின் உச்சியிலிருந்து சூரியன் உதிப்பதைப் பார்ப்பது ஒரு அருமையான நிகழ்வு. வாழ்நாளில் கிடைப்பதரிது.

மலைமேலிருந்து அருகிலிருக்கும் மற்ற மலைகளின் எழில் பார்ப்பது பேரழகு. கடைசியாக அழகான கூரையின் கீழ் அந்த பிரமாண்ட பாதத்தைப் பார்க்க முடியும். சிவன் நடனமாடும்போது ஒரு காலை இமய மலையிலும் மறு காலை சிவனொளி பாத மலையிலும் வைத்ததாக ஒரு ஐதீகம்.

இஸ்லாமியர்களின் ஆதம் 30 அடி உயரம் கொண்டவராம். அதனால் தான் பூமியில் அவர் முதல் காலடி பதித்த இடம் இவ்வளவு பெரியதாக இருக்கிறது என்று ஒருவர் விளக்கம் கொடுத்தார்.
ஆன்மிக அன்பர்களுக்கு ஆரோக்கியம்
தரும் ஒரு பயணம் இது!