
அணுமின் உலைகள் தீண்டத்தகாதவை அல்ல. பாதுகாப்பு அற்றவையோ, உயிருக்கு ஊறு விளை விப்பவையோ அல்ல. உலகம் முழுவதும் 440 அணுமின் நிலையங்கள் 31 நாடுகளில் இயங்கி வருகின்றன. அவற்றின் மூலம் 3 லட்சத்து 67 ஆயிரத்து 580 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் மட்டும் 104 அணுமின் நிலையங்கள் செயல்படுகின்றன. ஜப்பான் நாடு இந்தியாவைப் போல் தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்டதல்ல..
![]() |
ஃபுகுஷிமா |
அமெரிக்கா, ஜப்பானுடன் ஒப்பிடுகையில் அணுமின் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவு. இந்தியாவில் மொத்தமுள்ள அனுமின் நிலையங்களில் 20 மட்டுமே இயங்கி வருகின்றன. சிறிய மட்டும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டுவிட்ட விபத்துக்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால், உலகளாவிய அணுமின் உற்பத்தியின் 50 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை 3 விபத்துக்கள் மட்டுமே நடந்துள்ளன.
அமெரிக்காவில் பென்சில்வேனியா பகுதிக்கு அருகில் உள்ள மூன்று மைல் தீவு (1979 மார்ச்); ரஷ்யாவில் உக்ரைன் பகுதியில் உள்ள செர்னோபில் (1986 ஏப்ரல்) ; ஜப்பானில் ஃபுகுஷிமா (2011 மார்ச்) ஆகிய 3 இடங்களில் நிகழ்ந்த விபத்துக்களே உலகின் கவனத்தை ஈர்த்தவை. இவற்றில் மூன்று மைல் தீவு விபத்தானது அணுமின் உற்பத்தியின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது.
![]() |
செர்னோபில் |
உலகெங்கிலும் உள்ள நானூறுக்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்களுக்கு மிக அருகில் 20 இலட்சம் பொறியாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அணுமின் நிலையங்களால் எத்தகைய கதிர்வீச்சு ஆபத்தும் இல்லை என்பதற்கு அவர்களே சாட்சி. அணுமின் உலை ஆபத்தானது என்றால் எந்தப் பொறியாளராவது அதில் வேலை செய்ய முன்வருவாரா? அவர்களது படிப்புக்கு ஆபத்தில்லாத பிற துறைகளில் வேலை கிடைக்காதா? அணுமின் நிலையத்தால் ஆபத்து என்பது நாம் வலிந்து கற்பிதம் செய்து கொள்வது தானே தவிர வேறல்ல என்பதற்கு இதற்கு மேலும் என்ன நிரூபணம் வேண்டும்.?
கூடன்குளம் அணுமின் நிலையத்தை பொறுத்தவரை மொத்த நிதி ஒதுக்கீட்டில் 40% உயர் பாது காப்பு அம்சங்களுக்குதான் செலவிடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, மக்க ளின் விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் பயிற்சி என்பது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு புதிதல்ல. பாதுகாப்பு தொடர்புடையவற்றை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வெளிப் படுத்துவது இன்றியமையாதது. அதையே மக்களை பயமுறுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள இயலாது. அணுமின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் இவை ஒரு சில மட்டுமே. விரிவு கருதி எஞ்சியவற்றை இங்கு குறிப்பிடவில்லை.
![]() |
கூடன்குளம் அணுமின் நிலையம் |
தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவுகிறது. இதனால் தொழிற்துறை முடங்கியுள்ளது; பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் படிக்க வழியில்லாமல் மெழுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் அவல நிலை; மின்சாரம் இல்லாமல் குறுவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டு, விவசாயிகள் நிற்கதியாய் நிற்கும் நிலை… இதுபோன்ற கொடுமைகளில் சிக்கி திணறும் மக்கள் எதிர்பார்ப்பது, கூடன்குளம் அணுமின் நிலையம் எப்போது செயல்படத் தொடங்கும் என்றுதான்.
ஜப்பானை போல், தென்கொரியாவைப் போல் இப்போது கூடன்குளம் மின் உற்பத்தியை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் தமிழக மக்கள். காரணம், நமக்கு வேறு வழியில்லை. நடுவண் அரசும் மாற்றந் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டிருக்கிறது. கொடுக்க வேண்டிய மின்சார அளவைக் கூட நாள்தோறும் கூட்டியும் குறைத்தும் வழங்கி வருகிறது. இந்த அணுமின் நிலையத்தில் மின்உற்பத்தி தொடங்கினால், தமிழகத்தில் தற்போது நிலவும் 16 மணி நேர மின்வெட்டு கணிசமாக குறையும் என நிச்சயம் நம்பலாம். 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது தமிழகத்தின் தற்போதைய மின்வெட்டு பாதியாக குறையும் என நம்பப்படுகிறது.
இந்த நேரத்தில், அணுமின் நிலையம்… ஊழியர்கள் குடியிருப்பு முற்றுகை என தொடர்வது நியாயம் தானா? முதல் அணுமின் உலை மூலம் மின் உற்பத்தியை தொடங்கிய அடுத்த 6 மாதங்களிலேயே 2ஆவது அணுமின் உலை மூலம் மின்சார உற்பத்தியை தொடங்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அணுமின் நிலைய விஞ்ஞானிகள். கூடன்குளத்தில் 2 அணுமின் உலைகளும் செயல்படும் பட்சத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும்.
![]() |
அணுமின் தொழில் நுட்பம் தொடர்ந்து மாறி மாறி வருகிறது . புதுப்பிக்கப்பட்டு வருகிறது. முதல் தலைமுறையில் தொடங்கி இன்று மூன்றாம் தலைமுறையை எட்டி, நான்காம் தலைமுறையை நோக்கிப் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றது. ஆராய்ச்சி மற்றும் திருத்தங்களின் விளைவாக மென்மேலும் அதிகரித்து வரும் பாதுகாப்புக் கூறுகளுடன் அணுமின் நிலையங்கள் வடிவமைக்கப் பட்டு வருகின்றன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.!
உலகெங்கிலும் உள்ள மக்கள் அணுமின் நிலையங்களால் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கூடன்குளம் மக்கள் மட்டும் சபிக்கப்பட்டு விட மாட்டார்கள். அணுமின் நிலையங்களில் தீர்வு காண வேண்டிய சிக்கல்கள் இன்னமும் நிறைய உள்ளன என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதனால், கூடன்குளம் அணுஉலையே வேண்டாம் என்று சொல்வது எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல. இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் அவற்றுக்கு தீர்வு காணப்படும்.
கூடன்குளம் எதிர்ப்பின் நோக்கம் உண்மை என்று கூறினாலும், அதற்கு காலம் இசைவாக இல்லை என்பதை போராட்டக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்ற கோரிக்கையை மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஆதரிக்க தயாராக இல்லை. ஆகையால் பாதிப்புகளையும், இழப்பீடுகளையும் மட்டுமே இனி அவர்கள் பேச வேண்டும்.
கூடன்குளம் மக்களின் உயிருக்கும் – உடமைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய முழு பொறுப்பு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது. மக்களுக்கு இன்னும் நம்பிக்கையை ஊட்டுங்கள். பாவம்… சிலரின் நயவஞ்சகத்தால், சுயலாபத்தால் மக்களின் மூளை கசக்கிப் பிழியப்பட்டு, மழுங்கடிக்கப்பட்டுள்ளது.