சூரிய உதயம் தெரியும். சந்திரோதயத்தையும் அறிந்திருக்கிறோம். ஆனால், பூமி உதயம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சூரிய உதயம் போன்றே பூமி உதயமும் அழகான ஒரு இயற்கை அற்புதம். இந்த பூமி உதயத்தை பார்க்க வேண்டும்என்றால் நீங்கள் நிலவுக்கு போகவேண்டும். அங்கிருந்தால்தான் பூமி உதயமாவதையும் மறைவதையும் பார்க்க முடியும்.
 |
வில்லியம் ஆண்டர்ஸ் 1968-ல் எடுத்த படம் |
இப்படித்தான் வில்லியம் ஆண்டர்ஸ், பிராங் போர்மன் மற்றும் ஜேம்ஸ் லவ்வல் ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் அப்போலோ – 8 என்ற விண்கலத்தில் நிலவின் சுற்றுப்பாதை நோக்கி பயணித்தனர். இதுதான் மனிதன் நிலவுக்கு மேற்கொண்ட முதல் விண்வெளிப் பயணம். இவர்களில் யாரும் நிலவில் காலடி வைக்கவில்லை. இவர்கள் நிலவின் சுற்றுப்பாதையில் மட்டும் சுற்றிவிட்டு பூமிக்கு திரும்பிவிட்டனர். இவர்களின் பயண அனுபவங்களை அடிப்படையாக வைத்தே இவர்களுக்கு அடுத்து பயணம் செய்த நீல் ஆம்ஸ்ட்ராங் குழுவினரின் பயணம் இருந்தது. அவர்கள்தான் நிலவில் முதலில்காலடி வைத்தவர்கள்.
1968-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி அப்போலோ – 8 விண்கலத்தில் பயணம் செய்து கொண்டிருந்த வில்லியம் ஆண்டர்ஸ் திடீரென்று “ஓ..! மை காட்..! அங்க பாருங்கள், என்னவொரு அற்புதம்! பூமி கொஞ்சம் கொஞ்சமாக மேலே எழுந்து வருகிறதே! வாவ்..! இதை படமெடுக்க வேண்டும்.” என்றார். உடனே போர்மன் விளையாட்டாக “இது நமது பட்டியலில் இல்லை. அதனால் படமெடுக்க கூடாது” என்றார். ஆண்டர்ஸ் சிரித்தபடி “கலர் பிலிம் இருந்தால், கேமராவில் அதை லோடு செய்து கொடு ஜிம்..!” என்றார்.
அப்போது கலர் பிலிம் மிக அபூர்வம். இந்த பயணத்திற்காக கோடாக் நிறுவனம் 70 எம்.எம். கலர் பிலிமை இவர்களுக்காக பிரத்யேகமாக தயாரித்து வழங்கியிருந்தது. இந்த நிகழ்வை வண்ணப்படமாக எடுப்பதால், லவ்வல் “ஓ மேன், தட்ஸ் கிரேட்” என்று புல்லரித்துப் போனார்.
ஆண்டர்ஸ் சொல்ல சொல்ல கேமராவில் அவர் சொன்ன செட்டிங்க்ஸை செட் செய்து லவ்வல் ஆண்டர்ஸிடம் கேமராவைக் கொடுத்தார். பாதி பூமியில் பகலும் மீதி பூமியில் இருளும் சூழ்ந்திருக்கும் அந்த அற்புத பூமி உதயத்தை ஆண்டர்ஸ் படமெடுத்தார். பூமியின் உதயத்தை முதன் முதலில் படமெடுத்த மனிதர் என்று பெருமையை ஆண்டர்ஸ் பெற்றார்.

உலகின் மிக முக்கியமான 100 புகைப்படங்களில் இந்தப் படம் முதன்மையானதாக இருக்கிறது. மனித விண்வெளிப்பயணத்தின் புதிய மைல்கல், புகைப்பட வரலாற்றின் புதிய உச்சம் என்று வர்ணிக்கப்பட்டது.
நிலவின் சுழற்சி என்பது மிக மெதுவாகவே இருக்கும். அது தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 27 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பூமியை ஒருமுறை நிலவு சுற்றி வருவதற்கும் இதே கால அளவை எடுத்துக்கொள்கிறது. அதனால் நிலவின் ஒரு பகுதி மட்டுமே பூமியை நோக்கி இருக்கும் வண்ணம் சுற்றி வருகிறது. இந்த குறைந்த வேகத்தால் நிலவில் தோன்றும் பூமி உதயமும் மிக மெதுவாக நடைபெறுகிறது. நிலவின் சமத்தளத்திலிருந்து பூமி மெல்ல மெல்ல உதயமாகி முழு அளவும் மேலே வருவதற்கு 48 மணி நேரத்தை எடுத்துக்கொள்கிறது. அதனால் பூமி உதயம் காண மிகப் பெரிய பொறுமை வேண்டும்.