
புத்தகங்களும், ஆசிரியர்களும் கடைசி வரை நல்ல வழிகாட்டிகளாக இருப்பார்கள். அவர்களே நமது நல்ல நண்பர்கள். இளமையில் நமக்கு நிறைய நண்பர்கள் இருக்கலாம். இளமை பருவத்திற்குப் பிறகு தனிமையை உணரும் போது புத்தகம் படித்தல்தான் உண்மையான துணையாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கும்.
ராபர்ட் சவுதே எனும் ஆங்கிலக் கவிஞர், தன் கடைசிக் காலம் வரை புத்தகங்களே தனக்கு உண்மையான நண்பர்களாக இருந்தன என்று கூறியுள்ளார். புத்தகம் படிப்பது ஒரு நல்ல பொழுது போக்காகவும், அதிக மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருக்கும். புத்தகம் படிப்பது மனித நேயம் வளர்ப்பதற்கும் புதுமையாகச் சிந்திப்பதற்கும், சமுதாயத்தைப் புரிந்து கொள்வதற்கும், பல்துறை அறிவு வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. புத்தகம் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் தொடர்ந்து நூலகம் செல்வதன் மூலமும் அங்கு புத்தகங்களைப் படிப்பதன் மூலமும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.
புத்தகங்கள் மட்டும் இல்லையென்றால் கடவுள் இல்லை. நீதி சகிக்க முடியாததாக இருக்கும். இயற்கை விஞ்ஞானம் குத்திட்டு அசையாமல் நின்றுவிடும். தத்துவங்கள் ஊமையாகிவிடும். சகலமும் இருண்டு விடும். வாசிப்பின் பலத்தை இப்படி மிகைப்படுத்தியுள்ளனர் அறிஞர்கள். அவர்கள் சொல்வது போல் புத்தகம் என்ன செய்யும்? புத்தகம் புது உலகம் காட்டும். புரட்சி செய்யும். புதுமை படைக்கும். தாலாட்டும். தாகம் தீர்க்கும். வலிக்கச் செய்யும். வலியை மறக்கச் செய்யும். நல்ல வாசிப்பாளருக்கு, ‘நூலகம் ஒரு கோவில், நூல்கள் தெய்வம்’.