Header Banner Advertisement

பக்தைக்காக பாலகனாக மாறிய சிவபெருமான்


09-1412834346-2-goddess-sati

print
விக்ரம பாண்டியன் மதுரையை ஆண்டு வந்த போது விரூபாட்சகன் என்ற வேதியன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு அழகும் குணமும் நிறைந்த சுபவிரதை என்ற மனைவி இருந்தாள். மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்த அவர்களுக்கு ஒரேயொரு மனக்குறை இருந்தது. வருடங்கள் பல கடந்தும் அவர்களுக்கு ஒரு மழைலச் செல்வம் இல்லை.

ஒரு குழந்தைக்காக பல சிவதர்மங்களையும், விரதங்களையும் மேற்கொண்டு வந்தனர். இப்படி அருந்தவம் புரிந்ததாலே அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையொன்று அழகே உருவாகப் பிறந்தது. அந்த குழந்தைக்கு கௌரி என்று பெயர் வைத்தனர்.

கௌரிக்கு ஐந்து வயது முடிவதற்குள்ளே அவளின் மனம் இறைவன்பால் சென்றது. பிறவிப்பயனைப் போக்குவதற்கான வழிகளைப்பற்றி ஆராயத் தொடங்கினாள். தனது தந்தையிடம் பிறவியை ஒழிக்கும் திவ்ய மந்திரத்தை கற்றுத் தரும்படி கேட்டாள்.

இதனைக் கேட்டு வியப்படைந்த விரூபாட்சகன் மிக்க மகிழ்ச்சியோடு தனது மகளுக்கு பராசக்தி மகாமந்திரத்தை உபதேசித்தார். இதை கேட்டுணர்ந்த கௌரி தினமும் பயபக்தியுடன் ஜபம் செய்து வந்தாள்.

வயது ஏறஏற பெண்மையின் இலக்கணங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கௌரியை எழில் மிகுந்த பருவ மங்கையாக பூரிக்க வைத்தன. திருமண வயதும் நெருங்கிவிட்டது. அவளுக்கு பொருத்தமான ஒரு மணமகளைத் தேடினான் விரூபாட்சகன்.

அப்போது வெளியூர் பிரம்மச்சாரி ஒருவன் பிச்சை எடுத்துக் கொண்டுவந்தான். அவன் ஒரு வைணவப் பிரம்மசாரி. அவனுக்கு தனது மகளைக் கொடுக்க விரும்பினான். அவன் எப்படிப்பட்டவன்? அவன் குடும்பம் எப்படிப்பட்டது? என்று ஆராயாமல் கன்னிகாதானம் கொடுக்க முன்வந்ததை பற்றி சுபவிரதையின் உறவினர்கள் மிகவும் கவலைக் கொண்டனர்.

பின்னர் விசாரித்ததில் மணமகனின் குலம், கோத்திரம் எல்லாவற்றையும் பார்த்ததில் எல்லாம் ஒத்து வந்திருந்தது. மதம் மட்டும்தான் வைணவமாக இருந்தது. அனைவரும் ஒப்புக் கொண்டனர். வேதங்கள் கூறிய நெறிபிறழாமல் திருமணம் நடந்தது. பல வகையான சீர்வரிசைகளோடு தன் மகள் கௌரியை மணவாளனோடு அனுப்பி வைத்தனர்.

வைணவப் பிராமணன் தனது புது மனைவியுடன் அவன் இல்லம் சென்றான். அவனது பெற்றோர்களால் மகனின் செயலை எற்க முடியவில்லை. வைணவப் பாரம்பரியம் கொண்ட ஒரு குடும்பத்தில் சிவக்கோலம் கொண்டு சிவ சிந்தனையுடன் இருக்கும் பெண்ணை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அவள் மீது வெறுப்பு கொண்டனர். அவளை ஒதுக்கி வைத்தனர்.

ஒரு நாள் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பக்கத்து ஊரில் நடைபெறும் ஒரு திருமணத்திற்கு செல்ல முடிவு செய்தனர். தங்களுடன் கௌரியை அழைத்துச் செல்ல அவர்கள் விரும்பவில்லை. அதனால் அவளை தனியே வீட்டில் விட்டுவிட்டு பூட்டுப்போட்டு பூட்டி சென்றுவிட்டனர்.

தனியாக வீட்டில் இருந்த கௌரிக்கு பலவிதமான சிந்தனைகள் மனதை ஆக்ரமித்தன. சிவனடியார்களைப் பார்த்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது? எனது குற்றம் நீங்கும் வண்ணம் ஒரு சிவனடியாரையும் காண முடியவில்லையே! என்று ஏக்கம் கொண்டாள். அதுவே அவளை பெருங்கவலையாக ஆட்கொண்டது.

பக்தர்களின் கவலையைப் போக்குவதுதான் சிவபெருமானின் வேலை. தனது பக்தைக்காக சைவக் கிழவர் உருவில் சிவனின் அடையாளங்கள் சிறந்து விளங்க கௌரியின் வீட்டுக்குள் வந்தார். கௌரி அவரைக் கண்டதும் மனம் மகிழ்ச்சிக் கொண்டாள்.

அந்தண முதியவரை வரவேற்று உபசரித்தாள். வேதியர் தான் பசியோடு இருப்பதை தெரியப்படுத்தினார். கௌரிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் எப்படி சிவனடியார் பசியை தன்னால் போக்க முடியும் என்று கவலைக் கொண்டாள்.

“பெண்ணே! பூட்டு போட்டு பூட்டப்பட்டிருக்கிறது என்று தயங்காதே! நீ தொட்டால் பூட்டு திறந்து கொள்ளும்” என்றார் சைவ முதியவர்.

சொன்னபடியே நடந்தது. கௌரியும் சுவையான உணவு சமைத்து அந்த முதியவருக்கு அமுது படைத்தாள். அவர் மனம் இறங்கும் வண்ணம் உபசரணை செய்தாள். வேதியர் அமுதுண்டு முடிந்தவுடனே அவர் தனது வயோதிகம் மறைந்து, இளமையம் அழகும் கொண்ட வாலிபனாக மாறினார்.

மன்மதனனையே மிஞ்சும் பேரழகுடன் கட்டுடலுடனும் காட்சியளித்தார். ஏற்கனவே உடலில் பூசியிருந்த திருநீறு சந்தனமாக மாறியது. உருத்திராட்ச மாலை நல் பொன் நகையாக மாறியது. பொக்கைவாய் சிரிப்பு போய் வசீகர சிரிப்பு வந்தது.

எந்தப் பெண்ணும் கண்டவுடன் காதல் கொள்ளும் அழகுடன் காட்சி தந்தார் வேதியர். முதியவரின் இளமை வடிவம் கண்டு மனம் பதைத்தாள் கௌரி. கற்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்த அந்தப்பெண், உடல் வியர்த்துக் கொட்ட, பயத்துடன் நடுநடுங்கிப் போய்வீட்டின் ஒருபக்கமாக ஒதுங்கி ஒடுங்கி நின்றாள்.

யாராவது தனது வீட்டை பார்த்தாலே பெரிய பூகம்பமே ஏற்படுமே என்று பயந்தாள். ஆள் இல்லாத வீட்டில் ஒரு வாலிபனுடன் புது மணப்பெண் இருப்பது தெரிந்தால் எத்தகைய பழி சொல்லுக்கு ஆளாவோமோ என்று மனம் கலங்கி இருந்த வேளையில், வெளியூர் திருமணத்துக்குப் போயிருந்த கௌரியின் உறவினர்கள் அனைவரும் வீடு திரும்பினர்.

இன்றுடன் தன் வாழ்வு முடிந்தது! என்ற எண்ணத்துடன் வாசற்கதவை திறந்தாள். அதற்குள் வாலிபனாக இருந்த அந்தணப் பெருமான் பச்சைக் குழந்தையாக மாறிவிட்டார். அந்த சிவக்குழந்தை அழத்தொடங்கியது.

வீட்டுக்குள் நுழைந்த கௌரியின் மாமியார் திடீரென்று வீட்டுக்குள் இருக்கும் குழந்தையை திகைப்புடன் பார்த்தாள். ஆச்சரியம் கொண்டாள். மருமகளை எரித்துவிடும் கோபப் பார்வை பார்த்தாள்.

“இந்தக் குழந்தை எப்படி வந்தது? யாருடைய குழந்தை இது?” என்று கேட்டாள்.

அதற்கு கௌரி பயத்துடன் நடுங்கியவாறு, “தேவதத்தன் என்றொரு அந்தணன் தனது மனைவியோடு இங்கு வந்தான். அவன்தான் இந்தக் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டுப் போனான்” என்றாள்.

இதனைக் கேட்டதும் வைணவர்களாகிய கௌரியின் மாமியும் மாமனும் கடுங்கோபம் கொண்டனர். பொறுமையும் கருணையும் ஒரு சேர இழந்தனர். “அடியேய் வைணவர்களாகிய நாம் சைவர்கள் மீது அன்புக்காட்டக் கூடாது, சைவக் குலத்தில் நீ பிறந்திருந்தாலும் மணமானப் பின் கணவனின் வழிமுறைகளைப் பின்பற்றுவதுதான் நல்ல பொண்ணுக்கு அழகு. நீயோ கணவனின் வீட்டாரை மதிப்பதில்லை. சைவக் குழந்தையின் மேல் மாறா அன்பு கொண்டிருக்கிறாய். நீ எங்களுக்கு வேண்டாதவள். இந்த குழந்தையையும் எடுத்துக் கொண்டு இந்த வீட்டைவிட்டு வெளியே போ!” என்று கோபத்துடன் கர்ஜித்தாள். கௌரியையும் குழந்தையையும் வீட்டைவிட்டே வெளியேற்றினாள்.

கைக்குழந்தையுடன் செய்வதறியாது கலங்கிநின்றாள் கௌரி. எதுவும் அறியாதவளாக சோமசுந்தர பெருமானை இடைவிடாது தியானம் செய்து கொண்டே இருந்தாள். உமா தேவியின் மகாமந்திரத்தை உச்சரித்தாள். மகாமந்திரம் சொன்ன மாத்திரத்தில் கையில் இருந்த குழந்தை காணாமல் போனது. உடனே ஆகாய மார்க்கமாக சிவபெருமான் உமா தேவியுடன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். இந்த தேவக் காட்சியை கண்ட கௌரி சிவானந்தக் கடலில் மூழ்கி ஆனந்த வெள்ளத்தில் நீந்தினால்.

உமாதேவியின் திருமந்திரத்தை தொடர்ந்து உச்சரித்ததால் கௌரியை சிவபெருமான் உமையின் திருவடியாக மாற்றி தன்னிடம் ஐக்கியமாக்கிக் கொண்டார். சிவன் உமாதேவியின் ரிஷப வாகனம் கௌரியையும் தாங்கிக் கொண்டு சிவலோகம் சென்றது.