Header Banner Advertisement

பக்தைக்காக போரிட்ட சிவபெருமான்


3

print

குலோத்துங்க பாண்டியன் மதுரையை சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் அது.

அப்போது கட்டுமஸ்தான ஒரு முதியவன் வேறொரு நாட்டில் இருந்து மதுரையில் வந்து குடியேறினான். அவன் அந்த முதிய வயதிலும் வாட்போர் புரிவதிலும், வாள்வித்தை செய்வதிலும் வல்லவனாக இருந்தான்.

இந்த வித்தையையே இளைஞர்களுக்கு கற்றுத் தந்தால் தனது ஜீவனத்துக்கு வாய்பாகிவிடுமே என்று செய்யலாமா என்று இறைவனைக் கேட்டான். இறைவனின் உத்தரவுப்படி கற்றுத்தரும் தொழிலைத் தொடங்கினான். எத்தகைய நிலையிலும் சோமசுந்தர பெருமானை வழிபடும் எண்ணம் கொண்டிருந்தான்.

அந்தப் பெரியவரிடம் பல இளைஞர்களும் வாள்வித்தைக் கற்றுக் கொண்டனர். அப்படிக் கற்றுக்கொண்டவனில் ஒருவன் சித்தன். அக்கறையோடு கற்றதால் குறுகிய காலத்திலே எல்லா வித்தையும் கற்றுக் கொண்டான். தனது குருவைவிட தனக்கு அதிகம் தெரியும் என்று கர்வங்கொண்டான். குருவை மதிக்காமல் நடந்து கொண்டான்.

தனது ஆசிரியரைவிடப் பெரிய வாட்பயிற்சிக் கூடத்தை அருகிலே தொடங்கினான். சித்தனிடம் பலரும் வந்து பயிற்சி பெற்றனர். ஆசிரியரை விட இவனிடம் கூடுதலாக இளைஞர்கள் பயிற்சி பெற்றார்கள். வருமானமும் அதிகமாக கிடைத்தது.

வசதிகள் பெருக பெருக சித்தனின் கர்வமும் யாரையும் மதிக்காத ஆணவமும் பெருகியது. தான் இருக்கும் போது வேறொரு ஆசிரியர் எதற்கு? அவரை நாட்டைவிட்டே துரத்திவிட்டால் எல்லோரும் தன்னிடமே பயிற்சி எடுக்க வருவார்கள். அதனால் வருமானம் மேலும் அதிகமாகும் என்று நினைத்தான்.

தொழில் கற்றுத் தந்த தனது குருவுக்கே நிறைய இன்னல்களைக் கொடுத்தான்.
ஆசிரியர் இல்லாத நேரம் பார்த்து அவரது இளம் மனைவியிடம் மையல் கொண்டான். எப்படியாவது அவளை அடைந்துவிட துடித்தான். “எனக்கு உன் மஞ்சத்தில் எப்போது இடம் தருவாய்?” என்று கேட்டு துன்புறுத்தினான். இளம் மனைவியும் இவனது முரட்டுத்தனத்துக்கு பயந்து சும்மா இருந்தாள். அதை தனக்கான சம்மதமாக எடுத்துக்கொண்டு அவளது கையைப் பிடித்து இழுத்தான்.

தனது சக்தியையெல்லாம் ஒன்றுதிரட்டி அந்த கயவனை வெளியே தள்ளிக் கதவைத் தாழிட்டுக் கொண்டாள். வீதியில் விழுந்த அவமானம் தாங்காத சித்தன் காமத்தீ கொழுந்துவிட்டு எரிய கதவை உடைத்து குருவின் மனைவியை மீண்டும் நெருங்கினான். எல்லாவற்றையும் பொறுமையோடு சகித்துக் கொண்ட அந்தப்பெண் “சேமசுந்தரப் பெருமானே! உன்னை நிதமும் தொழும் பக்தைக்கு இப்படியொரு சோதனையா…நீ சக்தியுள்ள தெய்வமாக இருந்தால் என்னை இந்த கயவனிடம் இருந்து காப்பாற்று!” என்று மனதுக்குள்ளே அழுதுதொழுதாள்.

தனது பக்தையின் பொறுமையையும், மனதுக்குள் மவுனமாக அழும் அவளின் வருத்தத்தையும் உணர்ந்து கொண்ட சிவபெருமான், சித்தனுக்கு பாடம் கற்பிக்க நினைத்தார்.

சித்தனின் குருவான அந்த வாளாசிரியர் வேடத்தில் முன்வந்தார். “சித்தா! நீயோ இளைஞன், நானோ வயது முதிர்ந்தவன். இருவருக்குமே வாள் வித்தை நன்றாகத் தெரியும். நாளைக்கு ஊருக்கு வெளியே உள்ள போர்க்களத்தில் இருவரும் சந்திப்போம். திறமையைக் காட்டுவோம். நாளை அங்கு வந்துவிடு. நானும் வருகிறேன்” என்று கூறினார்.

“இந்த தள்ளாத வயதில் உனக்கு எதற்கய்யா இந்த வேலை? சரி, என்ன இருந்தாலும் போட்டி என்று வந்துவிட்டால் நான் பின்வாங்க மாட்டேன். நாளை சண்டையிட்டு உன்னை இந்த ஊரைவிட்டே துரத்துகிறேனா இல்லையா பார்…!” என்று கர்ஜித்தான்.

மறுநாள் விடிந்தது.

செய்நன்றி மறந்தவனும், குருத்துரோகம் செய்தவனும், தெய்வமாக வழிபட வேண்டிய குருவின் மனைவியை அடைய நினைத்ததும் என்று அடுக்கடுக்காக பாவத்தை சுமந்த சித்தன், வாளையும் கேடயத்தையும் சுமந்து கொண்டு போர்க்களம் வந்து நின்றான்.
அவனது குருவின் உருவில் இருந்த சிவபெருமானும் போருக்கு தயாராகி களத்திலே சித்தனின் வருகையை எதிர்பார்த்து காத்து நின்றார்.
போர் தொடங்கியது.

முதியவர் தானே என்று அசட்டையாக போரைத் தொடங்கினான் சித்தன். அவன் நினைத்தது போல் போர் சுலபமாக இல்லை. தாக்குதல், எதிர்த்தாக்குதல், தாக்குதலை முறியடித்தல், முறியடித்து வெட்டுதல், எதிரி வெட்ட வரும் முன் மறைந்து திடீரென்று பாய்தல் என்று மாறி மாறிச் சுழன்று சுழன்று போராடினார். இருபது நாழிகை இப்படியே போர் நீடித்தது. சித்தன் களைத்து போனான். அதே வேளையில் சண்டை உச்சக்கட்த்தை அடைந்தது.

ஆத்திரம் கொண்ட வாளாசிரியர் பெருமான் “ஏய், சித்தா! ஆணவமும் கர்வமும் கொண்ட நீ உன் குரு பத்தினியை விரும்பினாய், அவளிடம் பேசக்கூடாத வார்த்தைகளைப் பேசினாய், கேட்கக் கூடாதவற்றை கேட்டாய், அவளின் கைபிடித்து இழுத்தாய், ஆசையாய் பார்த்தாய்! உன்னை விடமாட்டேன். இப்போதே உன் நெஞ்சைப் பிளப்பேன். உன் நாக்கைத் துண்டிப்பேன். கையை வெட்டி எறிவேன். கண்களைப் பிடுங்கிப் போடுவேன். முடிந்தால் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்” என்று கூறியபடி சித்தனின் கைகால்கள் என்று ஒவ்வொரு அங்கமாக வெட்டி எறிந்தார். கடைசியில் சித்தனின் தலையை வெட்டி வீழ்த்தினார். சித்தன் வீழ்ந்ததும் அந்த இடத்தைவிட்டு மறைந்தார்.

தனது குரு நாதருக்கும் சித்தனுக்கும் நடந்த போரை கேள்விப்பட்ட மாணவர்கள் அனைவரும் குருவைத் தேடி அவரது வீட்டிற்கு வந்தார்கள். அங்கு குரு இல்லை. அவர் கோவிலுக்குப் போயிருப்பதை தெரிந்து கொண்ட மாணவர்கள் கோவில் நோக்கி சென்றனர். அதற்குள் ஆசிரியர் திரும்பிவிட்டார். அவரைப் பார்த்த மாணவர்கள் பலவிதமாக வியந்து போற்றினார்கள்.

ஆசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை மிகுந்த ஆச்சரியத்தோடு “நான் சித்தனைப் பார்க்கவும் இல்லை. அவனுடன் போரிடவும் இல்லை. அவன் அங்கங்களை வெட்டி எறியவும் இல்லை. என் உருவில் வந்த யாரோ ஒருவர்தான் இதை செய்திருக்க வேண்டும். அந்த ஒருவர் நான் வணங்கும் சோமசுந்தரப் பெருமானாகத்தான் இருக்க வேண்டும்!” என்று விளக்கம் கொடுத்தார்.

வீட்டிற்கு வந்ததும் அவரின் மனைவியும் தன்னிடம் சித்தன் தவறாக நடக்க முயன்றதை ஒளிவின்றி கூறினாள். குருவின் மனைவி சொன்னதிலும் சித்தனுடன் போரிட்டவர் சொன்னதையும் ஒப்பிட்டுப் பார்த்து, வந்தவர் சொக்கநாதர் என்றும், அப்போது நடந்த போராட்டம் அவரின் திருவிளையாடல் என்றும் தெரிந்து கொண்டார். அனைவரும் திருக்கோவில் சென்று சோமசுந்தரக் கடவுளை வணங்கி மகிழ்ந்தனர்.

இந்த அற்புதம் உடனே மன்னன் குலோத்துங்கனையும் எட்டியது. மன்னன் நேராக வந்து வாள்வித்தைக் கற்றுத்தரும் அந்த ஆசிரியரையும் அவரின் மனைவியையும் மாணிக்க மாலை அணிவித்து கவுரவித்தான். அதன்பின் யானை மீது ஏற்றி ஊர்வலம் நடத்தி அவர்களை மரியாதை செய்து சிறப்பித்தான்.