
பசுவின் சிறுநீரில் தங்கம் இருப்பதாக குஜராத் மாநிலம் ஜுனாகத் வேளாண் பல்கலைகழகம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலத்திலுள்ள ஜுனாகத் வேளாண் பல்கலைகழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் பசுவின் சிறுநீரில் தங்கம் இருப்பதாக தெரியவந்திருக்கிறது. 400 கிர் இனத்தைச் சேர்ந்த பசுக்களிடம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் கிடைத்துள்ளது.
ஜி.சி.-எம்.எஸ். எனப்படும் ஆய்வு முறையில் க்ரோமோகிராபி மற்றும் நிறமாலை ஆகியவற்றின் உதவியுடன் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வேளாண் பல்கலைகழகத்தின் உயிரி தொழில்நுட்பவியல் துறை தலைவர் பி.ஏ.கொலகியா தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பழங்கால நூல்களில் பசுக்களின் சிறுநீரில் தங்கம் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
ஆனால், அதனை உறுதிசெய்யும் ஆதாரம் ஏதும் இல்லை. எனவே, அதனைக் கண்டறியும் முயற்சியாகவே கிர் பசுக்களில் இந்த சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கிர் பசுவின் சிறுநீரில் கிடைத்துள்ள தங்கத்தாதுக்கள் இரும்புடன் கலந்துள்ளன என்றும் அவற்றைத் தண்ணீரின் உதவியுடன் பிரித்தெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கிர் பசுவின் சிறுநீரில் உள்ள 388 பொருட்கள் மருத்துவ குணம் உடையன. இதே ஆய்வை ஒட்டகம், எருமை, மற்றும் ஆடுகளின் சிறுநீரில் செய்துபார்த்த போது கிர் பசுவில் கிடைத்ததைப் போல தாதுப்பொருட்கள் எதுவும் இல்லை. எனவே, தற்போது 39 இந்தியப் பசுவினங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிர் பசுவில் கிடைத்துள்ள மருத்துவ குணமுள்ள பொருட்களை மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் வகையில் பயன்படுத்தவும் ஆய்வு நடத்தப்படுகிறது.” என்று ஆய்வுக்குத் தலைமை வகிக்கும் கொலகியா கூறியுள்ளார்.
ஜுனாகத் பல்கலைக்கழகத்திலுள்ள உணவுப்பொருட்கள் சோதனைக்கான ஆய்வகத்தில் இதே போன்று 50,000 ஆய்வுகள் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.