
‘களவாணி ‘ என்றொரு திரைப்படம். அதில் விமல், சூரி உள்ளிட்டோர், சொசைட்டிக்கு லாரியில் எடுத்துச் செல்லப்படும் உர மூட்டையில் ஒன்றை நூதனமான முறையில் திருடுவதாக ஒரு நகைச்சுவை காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதைப் பார்த்துவிடும் கஞ்சா கருப்பு, இந்த இடத்தில் பஞ்சாயத்து, ”சொசைட்டிக்கு போற உரத்தையா திருடுறீக. இந்தாப் போறேன் சொசைட்டிக்கு… என்று செல்வார்.” இதனால் பயந்து போகும் விமல், சூரி உள்ளிட்டோர், அங்கு கிடக்கும் பால்டாயில் டப்பாவை எடுத்துக் கொண்டு, பஞ்சாயத்தை கலாய்ப்பார்கள். எப்படி?
”நம்ம பஞ்சாயத்து பால்டாயில குடிச்சிட்டானாம். அப்படினு ஊரு பூரா சொல்லிபுட்டு அப்படியே ஊர்ல நாலு பேர கூப்பிட்டு, பஞ்சாயத்து பால்டாயில குடிச்சுட்டான்… பஞ்சாயத்து விஷம் குடிச்சுட்டான்… அப்படினு சொல்லிட்டு... ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறதுக்கு ஓடி போய் ஒரு கார் எடுத்துட்டு வா” என்று, ஒரு நண்பரை விமல் அனுப்பி வைப்பார். அவர் ”பஞ்சாயத்து பால்டாயில குடிச்சுட்டான்... பஞ்சாயத்து பால்டாயில குடிச்சுட்டானு” சொல்லி ஊர் முழுக்க தந்தியடிப்பார்.
பொய்யை உண்மையாக்கும் முயற்சி
இதில் இருந்து என்ன தெரிகிறது. ஒரு பொய்யை, உண்மையாக திரித்துக் கூறி தனக்கு சாதகமான ஒன்றை அடைவது. அதாவது, ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி உண்மை என்று நம்ப வைப்பது. அதேபோன்ற கதைதான் வாட்ஸ் அப்பில் வரும் பல தகவல்களும் இருக்கின்றன. அப்படிதான் இரண்டொரு நாட்களுக்கு முன்பு, பிரபல தமிழ் வில்லன் நடிகர் ஒருவர் இறந்துவிட்டதாக காட்டுத்தீயாய் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவ, பலர் அவருடைய வீட்டுக்கு தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்கள். அவர் நலமாக இருப்பதாக தெரியவரவே, தொடர்பு கொண்டவர்கள் சங்கடத்திற்கு ஆளானதோடு, வாட்ஸ் அப் தகவலால் கடுப்பானார்கள்.

பின்னர் நான் நலமாக இருப்பதாகவும், இறந்துவிட்டதாக கூறிய நபர் தன் கையில் கிடைத்தால் பூச்செண்டு தருவதாகவும், அந்த நடிகர் தெரிவித்திருந்தார். அவர் வேறு யாருமல்ல, நடிகர் ஆனந்த ராஜ்தான். இதற்கு என்ன காரணமென்று விசாரித்தால், முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சியைவிட, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி ஒஸ்தி என்று ஆனந்தராஜ் பேசியதுதானாம். அதனால் கொதித்தெழுந்த சிலர், ஆனந்தராஜ் இறந்துவிட்டதாக புரளியை கிளப்பியும், காமராஜரை தாழ்த்திப் பேசிய ஆனந்தராஜூக்கு கண்டனம் தெரிவித்தும் ஒரு பதிவை உலாவ விட்டார்களாம்.
பழிவாங்கும் ஆயுதமா வாட்ஸ் அப்?
இப்படிதான் யாரை நமக்கு பிடிக்காதோ அல்லது நம்மிடம் எதிரியாக யார் நடந்து கொள்கிறார்களோ அவர்களை பற்றி திட்டமிட்டு ஒரு தகவலை பரப்பி, சம்பந்தபட்டவரை கதிகலங்க வைக்கும் டிரெண்ட் வாட்ஸ் அப்பில் அரங்கேறி வருகிறது. இதனால், வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள், மக்களிடையே ஒருவித பீதியை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை. கொஞ்ச நாளைக்கு முன்னர், யாரையாவது பிடிக்கவில்லை என்றால், இவருக்கு ரத்தம் தேவை, இவரின் சான்றிதழ் தொலைந்துவிட்டது, இவர் சாலை விபத்தில் சிக்கிவிட்டார் என்று எதையாவது கதைகட்டிவிட்டு, அவருடைய தொலைபேசி எண்ணையும் தொடர்புக்கு கொடுத்து பதிவேற்றம் செய்து கொண்டிருந்தார்கள். இது வைரலாக பரவி, அந்த எண்ணிற்கு பலர் தொடர்பு கொண்டு பேசும்பொழுது, குறிப்பிட்ட நபர் எரிச்சலுக்கும், கோபத்திற்கும் ஆளாகிய நிலை இருந்தது. இது சற்றே உருமாறி, தற்போது ஒரு நபர் உயிரிழந்துவிட்டார் என்ற நிலைக்கு முன்னேறியிருக்கிறது.
பொறுப்பும், சமூக கடமையும் அவசியம்
நல்ல பல தகவல்களை தெரிந்து கொள்ளும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாகவே வாட்ஸ்அப் மாறியிருக்கும் சூழலில், நம்பிக்கையில்லாத, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வெளியிடுவதன் மூலம் வாட்ஸ்அப் பயன்பாட்டின் மீது ஒருவித வெறுப்பும், எரிச்சலும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. இந்த நிலை மாற வேண்டும். இதை சம்பந்தபட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமக்கு வரும் அனைத்து தகவல்களையும், பதிவுகளையும் அப்படியே நம்பியோ அல்லது வேண்டுமென்றோ பிறருக்கு அனுப்பி, மகிழ்கிறார்கள். அதனால் விளையும் தீமையை பற்றி அவர்கள் உணர்வதில்லை, புரிந்து கொள்வதுமில்லை. ஒருவர் அனுப்பும் ஃபார்வர்டு தகவல்கள் ஒரு சில நிமிடங்களில் பல ஆயிரம் பேரை சென்றடைவதால், மிகுந்த எச்சரிக்கையும், பொறுப்புணர்வும் ஒவ்வொருவருக்கும் தேவை. பயனுள்ள, உண்மையான தகவலாக இருந்தால் சரி. அதுவே, உண்மையில்லாத, சாத்தியமற்ற, தேவையில்லாத ஒரு பதிவாக இருந்தால் என்ன நடக்கும்? நாம் தெரிந்தோ, தெரியாமலோ அனுப்பும் தவறான ஒரு பதிவு, படிக்கும் நபரின் நேரத்தையும், சில நேரம் அவரின் வாழ்க்கையையுமே விழுங்கிவிடுமே என்ற எண்ணம் ஏன் வராமல் போகிறது?
நம்பகத்தன்மையை இழக்க நேரிடும்
தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் ஜூரம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான தேர்தல் தகவல்கள், அதுதொடர்புடய பதிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்சி அல்லது தலைவர் மீது வைத்திருக்கும் அதீத பற்றுக் காரணமாக வாட்ஸ் அப்பில் அதுதொடர்புடைய தகவல்களை பரப்பி பலர் ஆதாயம் தேட முயற்சி செய்வார்கள். எதிர்க்கட்சி தலைவர்களையும், எதிர் கருத்துகள் கூறுபவர்களையும் அவதூறாகவும், இழிவாகவும் விமர்சிக்கும் போக்கிலும் சிலர் வாட்ஸ் அப்பில் ஈடுபடுவார்கள். இதை உணர்ந்துதான், சமூக வலைதளங்களில் தலைவர்களை பற்றி இழிவான, அவதூறு பதிவுகளை தவிர்க்கும்படியும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல் ஆணையம் எச்சரித்திருக்கிறது.