Header Banner Advertisement

பட்ஜெட் தயாரிப்பு எப்படி நடைபெறுகிறது?


www.villangaseithi.com

print
பட்ஜெட் விளக்கம்: மத்திய-மாநில அரசின் சார்பில் ஆண்டுதோறும் அரசின் வரவு-செலவு குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதை, பட்ஜெட் என்று அழைப்பர். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ‘பட்ஜெட்’ என்னும் சொல் எங்கும் இல்லை.

பெயர் வந்த விதம்: பல ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தின் நிதியமைச்சர், ஆண்டு நிதி தொடர்பான குறிப்புகளை ஒரு தோல் பையில் எடுத்துச் சென்றார். அந்த பைக்கு, ‘பட்ஜெட்’ என்று பெயர். நாளடைவில் அப்பையின் பெயரே பைக்குள் இருந்த ஆவணங்களுக்கு பெயராக, அதாவது ‘பட்ஜெட்’ என மாறியது.

பட்ஜெட்டில் இடம்பெறும் கணக்குகள்: 1. வருவாய் கணக்கு: வரி வருவாய், வரி வருவாய் அல்லாத பிற வருவாய், உதவி மானியங்கள் மற்றும் மத்திய அரசு கொடுக்கும் தொகைகள். 2. வருவாய் கணக்கில் செலவினங்கள்: சம்பளம், படிகள், ஓய்வூதியச் செலவு, பராமரிப்புச் செலவு, வட்டி செலவு. 3. மூலதன கணக்கு: கட்டடங்கள், சாலைகள், பாசனத் திட்டங்கள். 4. பொதுக் கணக்கு: கடன் வரவுகள், கடன் திருப்பிச் செலுத்துதல்.

பட்ஜெட் தயாரிப்பு: பட்ஜெட் தயாரிப்பை பொறுத்தவரை, ஒவ்வொரு துறைக்கான மானியத்துக்கு என, நிதித் துறையில், தனித்தனியாக மொத்தம் 51 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும், ஒரு பிரிவு அலுவலர், இரண்டு உதவி பிரிவு அலுவலர்கள் இருப்பர். முன்பெல்லாம், பட்ஜெட்டுக்கென நியமிக்கப்பட்டிருக்கும் சார்பு செயலர்தான், இவற்றை ஒருங்கிணைப்பார். ஆனால் தற்போது, அனைத்து சார்பு செயலர்கள், துணைச் செயலர்கள் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர். இவர்கள் ஒவ்வொரு துறையினரையும் அழைத்து, பட்ஜெட் கூட்டங்களை நடத்துவர். இக்கூட்டம் பட்ஜெட் தயாரிப்புக்கு ஆறு மாதத்துக்கு முன்பு நடத்தப்படும்.

இதுதவிர, மாநில திட்டம் மற்றும் வளர்சித் துறையும் தனியாக கூட்டம் நடத்தும். அரசின் புதிய திட்டங்கள் குறித்து இதில் ஆய்வு செய்யப்படும். பத்து நாள் முதல் 15 நாட்கள் வரை இக்கூட்டம் நடத்தப்பட்டு, அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். அதனடிப்படையில், எந்தெந்த திட்டங்களை சேர்க்கலாம், அதற்கான நிதி ஆதாரம் ஆகியவை குறித்து நிதித்துறை முடிவு செய்யும்.

images
பட்ஜெட் தயாரிப்பு பணியின் போது, அதில் ஈடுபடும் நிதித்துறை அலுவலர்கள், மாலை 5.45 மணிக்கு அலுவலக நேரம் முடிந்தபின், இரவு 8.45 மணி வரை கூடுதலாக பணியாற்றுவர். இந்த நேரத்தில் பட்ஜெட் தயாரிப்பு பணியில், ஈடுபடும் உதவிபிரிவு அலுவலர், பிரிவு அலுவலர் ஆகியோருக்கு 75 ரூபாயும், துணைச் செயலருக்கு 100 ரூபாயும், இணைச் செயலருக்கு 125 ரூபாயும் தினமும் படியாக வழங்கப்படுகிறது. இதற்கென தனி வருகை பதிவேடும் பின்பற்றப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவற்றை தயாரிக்கும் பணி வேகமாக நடக்கும். முதலில் நிதியமைச்சரின் பட்ஜெட் உரை தயாரிக்கப்படும். துணைச் செயலர் (பட்ஜெட்), நிதித் துறை செயலர், நிதியமைசர், முதல்வர் ஆகியோருடன் கலந்து பேசி, இந்த உரை இறுதி செய்யப்படும். பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு என தனி அடையாள அட்டை வழங்கப்படும். அவர்களுக்கென தனியாக போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்படும்.

இதன்பின், பட்ஜெட் தாக்கலுக்கு முதல் நாளன்றுதான் அதை அச்சிடுவதற்கு அனுப்புவர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று காலை 6 மணிக்குதான், அதன் பிரதிகளை அச்சகத்தில் இருந்து எடுத்துவருவர். நிதியமைச்சருக்கும், முதல்வருக்கும் இதன் பிரதி வழங்கப்படும். மற்ற பிரதிகள் ரகசிய ஆவணமாக, சட்டசபை செயலகத்திடம் ஒப்படைக்கப்படும். அவ்வாறு ஒப்படைத்தபின், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை அதை வெளியிடாமல் காப்பது, சட்டசபை செயலகத்தின் பொறுப்பு.