
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தின் பெரும் பகுதி உணவு தானிய உற்பத்திக்கு இயற்கை பெரிய பாதிப்பை உருவாக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாகவே, நல்ல விளைச்சல் வந்த காலகட்டம் இது. அதுவும் கடந்த ஆண்டு இந்திய வரலாற்றிலேயே அதிகபட்ச உணவு தானிய விளைச்சல் கிடைத்தது. இப்படிப்பட்ட சூழலிலேயே, அரிசி விலை உயர்ந்து கொண்டே இருக்கும் போது, பற்றாக்குறை ஏற்பட்டால் என்னவாகும்?
“பயப்படத் தேவை இல்லை. இன்னும் ஓர் ஆண்டுக்கான அரிசி சேமிப்பில் இருக்கிறது” என்கிறார் உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ். ஆனால், இவர்களை நம்ப முடியாது. கடந்த 2009ல் நாட்டின் 177 மாவட்டங்கள் வறட்சியில் சிக்கியபோது, “பயப்பட வேண்டாம். இன்னும் 30 மாதங்களுக்கான உணவு தானியங்கள் கைவசம் இருக்கின்றன” என்றார் அமைச்சர் சரத்பவார்.
வறட்சியின் தாக்கம் அதிகரித்ததும் அடுத்த சில வாரங்களிலேயே “இன்னும் 13 மாதங்களுக்கான உணவு தானியங்கள் கையிருப்பில் இருக்கின்றன. தேவைப் பட்டால், இறக்குமதி செய்து கொள்ளலாம்” என்றார். 3 வாரங்களுக்குள் எப்படி 17 மாத தானியங்கள் காலியாகின என்ற கேள்வி எழுந்தபோதுதான் அமைச்சர் வாயில் வந்ததைச் சொல்லிவிட்டுப் போனது தெரிய வந்தது.
இந்தியாவில் அரசின் தானியக் கையிருப்புக் கணக்கு என்பது எப்போதுமே ஏட்டில் உள்ள கணக்கு. திறந்தவெளியில் வெயிலிலும் மழையிலும் புழுத்து, எலிகள் புகுந்து நாசமாக்கியது போக பயன்படுத்தத்தக்க அளவில் இருக்கும் தானியங்கள் குறைவு. இப்போதைய சூழல் முன்பைவிட மோசமானது. நாட்டின் 350 மாவட்டங்கள் வறட்சி அபாயத்தில் சிக்கி இருக்கின்றன. நாட்டின் முக்கியமான நீர்த்தேக்கங்கள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குப் போகிறது.
இந்தியாவில் கடந்த நூற்றாண்டுகளைப் போல வறட்சியால் பஞ்சம் ஏற்பட்டு கோடிக்கணக்கானோர் இறந்து போகும் சூழல் இன்றைக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், பட்டினிச் சாவுகள் இன்றைக்கும் நடக்கின்றன. ஒவ்வோர் வறட்சியும் எங்கோ ஆயிரம் குடும்பங்களை விவசாயத்தில் இருந்து வெளியேற்றுகிறது, எங்கோ ஆயிரம் குடும்பங்களைக் கடனாளிகள் ஆக்குகிறது. எங்கோ ஆயிரம் கறவை மாடுகளை அடி மாட்டுக்கு அனுப்பி வைக்கிறது. எங்கோ ஆயிரம் பேரைத் தற்கொலை செய்துகொள்ள வைக்கிறது. எங்கோ ஆயிரம் குழந்தைகளை ஊட்டச் சத்துக் குறைவால் கொல்கிறது.
கட்டுரையாளர்: சமஸ், ஆனந்த விகடன்.