Header Banner Advertisement

பண்ணை வீட்டில் ஒருநாள்


surjivan-resort1

print
ரபரப்பான இந்த உலகில் இருந்து விலகி, விளைநிலங்களுக்கு நடுவே… கறவை மாடுகளுக்கு மத்தியில்…வித்தியாசமாக விடுமுறையை கழிக்க நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது, சுர்ஜீவன். அழகான தோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட ஓலைக்குடிசை வீடுகள் நமக்காகவே காத்திருக்கின்றன.

மார்பிள் தரையிலும், பளிங்கு படிகளிலும், கிரானைட் அறைகளோடு வாழ்ந்து பழகியவர்களும் சாணம் மெழுகிய மண் தரை வித்தியாசமான அனுபவத்தைத் தரும். பண்ணை வீடுகள் எப்படி என்ற அனுபவத்தை உணர்வுப் பூர்வமாக உணரலாம்.

வெறுமனே பண்ணை வீட்டில் தங்குவதோடு இந்த பயணம் முடிந்து விடாது… நம்மூர் மாட்டு வண்டிகள் போல் ஒட்டகங்கள் பூட்டிய வண்டிகளில் வலம் வரலாம். விவசாய வேலைகளை பார்வையிடலாம். பாறைகள் மீது ஏறலாம். ‘பாராகிளைடிங்’ பண்ணலாம். இப்படிப்பட்ட சாகஸங்களும் இங்குண்டு.

மேலும் பண்ணையில் விளையும், ஃப்ரெஷ் காய்கறி, வாசனைப் பொருட்களோடு தயாரான ரொட்டிகளையும் சாதத்தையும் சாப்பிட்டு மகிழலாம்.

போக்குவரத்து நெரிசலும், மக்கள் கூட்டமும் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று நினைப்பவர்கள் இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள குர்கான் நகருக்கு சென்று வரலாம். நாட்டிலேயே சிறந்த ஷாப்பிங் மால்கள் இங்கு இருக்கின்றன. இந்தப் பண்ணை வீடுகளில் தங்க குளிர்காலமே சிறந்தது.

எப்படி போவது?
ஹரியானா தலைநகர் சண்டிகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் மானேஸர் என்ற ஊரில் இந்த பண்ணை வீடுகள் இருக்கின்றன. சாலை வழியாக 6 மணி நேரத்தில் சென்று சேரலாம்.

எங்கு தங்குவது?
சுர்ஜீவன் பண்ணை வீடுகள் தங்குவதற்கு ஏற்ற இடம். ஒருநாள் இரவு தங்க ரூ.5,000-ல் இருந்து கட்டணம் பெறப்படுகிறது.