
முக்கல புலுசு போலவே இந்த உணவும் நம் ஊர் பருப்புக் குழம்பின் ஆந்திர வெர்ஷன் தான்.
தேவையான பொருள்கள்:
புளி – எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு – 3/4 கப்
காய்கறி – 2 கப்
தக்காளி – 2
வெங்காயம் – 1 (விரும்பினால்)
பூண்டு – 4 பல் (விரும்பினால்)
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
வெல்லம் – நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லித் தழை
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 5, 6
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
புளியைக் கரைத்து நன்கு வடித்துக் கொள்ளவும்.
காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
துவரம் பருப்பை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து, காய்ந்தமிளகாய், கடுகு, வெந்தயத்தை வரிசையாகச் சேர்த்து வறுத்து, ஆறியதும் நைசாகப் பொடித்துக் கொள்ளவும்.
மீண்டும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் வைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம், உரித்த பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
மெலிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கியபின் நறுக்கிய காய்கறி, தக்காளி சேர்த்து மேலும் சிறிது லேசாக வதக்கவும்.
சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி வேகவைக்கவும்.
காய்கறி பாதி வெந்ததும் புளிநீர், வறுத்து அரைத்த பொடி சேர்த்து மேலும் 4, 5 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்.
காய்கறிகள் வெந்து, புளி பச்சை வாசனை போனதும், வேகவைத்த துவரம்பருப்பு, வெல்லம் சேர்த்து மேலும் ஒரு கொதிவிடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து பரிமாறலாம்.
இதில் எல்லாவிதமான காய்களும் சேர்த்துக் கொள்ளலாம். நான் முள்ளங்கி, வெங்காய்த்தாள், தக்காளி சேர்த்து செய்திருக்கிறேன்.
வேக அதிக நேரமெடுக்கும் காய்களை குக்கரிலேயே தண்ணீர் விடாமல் வேகவைத்து எடுத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
வறுத்து அரைக்காமல், நேரடியாக மிளகாய்த் தூள், கடுதுத் தூள், வெந்தயத் தூள் இருந்தாலும் உபயோகித்துக் கொள்ளலாம். வழமையாகச் செய்பவர்கள், பொதுவாக இந்தப் பொடியையும் நம் சாம்பார்ப் பொடி போல் முதலிலேயே மொத்தமாக தயாரித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கிறார்கள்.
துவரம் பருப்பிற்கு பதில் பயத்தம் பருப்பும் உபயோகிக்கலாம். பலர் அதுதான் உபயோகிக்கிறார்கள். பருப்பு சேர்ப்பதால் கடலைமாவு சேர்த்து கரைத்துவிடத் தேவை இல்லை.
முக்கல புலசு மாதிரி இல்லாமல் வெல்லம் சிறிதளவு சேர்த்தால் போதும். சேர்க்காமலும் செய்யலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய் கலந்த சாதத்துடன் பரிமாறலாம்.