Header Banner Advertisement

பழிச்சொல்லிருந்து பாண்டியனை காப்பாற்றிய சிவன்


IMG_20141230_080933-1

print

மதுரையைச் சுற்றிலும் கடம்பவனங்கள் சூழ்ந்திருந்த காலம் அது. பக்கத்து ஊர்களில் இருந்து மதுரைக்கு வருவதென்றால் கூட அடர்ந்த வனங்களை கடந்துதான் வரவேண்டும். அப்படித்தான் வனத்தைக் கடந்து கொண்டிருந்தான் ஒரு பிராமணன். அவன் தன்னுடன் மனைவியையும் கைக்குழந்தையையும் அழைத்துச் சென்றான்.

திருப்பத்தூரில் இருந்து புறப்பட்ட அவர்கள் மதுரையில் இருக்கும் அவனின் மாமா வீட்டிற்கு போய்க் கொண்டிருந்தார்கள். நினைத்தது போல் பயணம் சுலபமாக இல்லை. கடினமான அந்தப் பயணம் இளம் மனைவியை களைப்படைய வைத்தது. நா வறண்டு தண்ணீருக்காக ஏங்கியது.

நேரம் போகப் போக அந்தப் பிராமணப் பெண்ணால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாமல் ஒரு ஆல் மரத்தினடியில் அமர்ந்துவிட்டாள். மனைவியின் தாகத்தைப் போக்குவதற்காக நீரைத் தேடி அந்த பிராமணன் புறப்பட்டுப் போனான். கணவன் சென்ற சற்று நேரத்தில் களைப்பின் மிகுதியால் கண் அயர்ந்தாள் அந்தப் பெண் அருகே அவளின் குழந்தை தவழ்ந்து கொண்டிருந்தது.

தண்ணீரைத் தேடி வெகு தூரம் சென்றவன். ஒரு ஓடையில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு மனைவி இருக்கும் இடம் நோக்கி விரைந்தான்.

மனைவியைப் பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். அவளின் மார்பில் அம்பு தைத்திருந்தது. ரத்த வெள்ளத்தில் அவள் இறந்து போயிருந்தால். அருகே குழந்தை தவழ்ந்து கொண்டிருந்தது.

கண்கணில் கண்ணீர் பெருக்கெடுக்க… மனைவியின் உடலைக் கையில் ஏந்தி…

“என் காதல் மனைவியைக் கொன்றவன் எவன்?” காடே அதிரும் வண்ணம் கத்தினான். சுற்றும் முற்றும் பார்த்தான். மரத்திற்கு பின்னால் ஒரு வேடன் வில்லோடு நிற்பதைக் கண்டான். அந்த வேடன் தான் தன் மனைவியை கொலை செய்தவன் என்று முடிவு செய்து…

“வேடனே! ஏன் என் மனைவியைக் கொன்றாய்? அவள் உனக்கு செய்த தீங்கு தான் என்ன?” என்று கேட்டான்.

“அந்தணரே! இந்த பாதகத்தை செய்தவன் நானில்லை, என்னை நம்புங்கள்!” என்றான் வேடன்.

“பொய்யுரைக்காதே…! இங்கே உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. வா… என்னோடு…! மன்னனிடம் நியாயம் கேட்போம்..!” என்ற பிராமணன். இறந்த தன் மனைவியை நோளிலே தூக்கிக் கொண்டான். குழந்தையை இடுப்பிலே ஏந்திக் கொண்டான். வேடனை தன்னோடு இழுத்துக் கொண்டு, கண்ணீர் தாரை தாரையாக வழிய, துக்கத்தை சுமந்த நெஞ்சோடு வேகமாக மதுரையை நோக்கி நடந்தான்.

குலோத்துங்க பாண்டியன் திறம்பட மதுரையை ஆட்சி செய்து கொண்டிருந்தான். நாள் தவறாமல் சோமசுந்தரப் பெருமானை பக்தியுடன் வழிபடும் வழக்கத்தை கொண்டிருந்தான். குலோத்துங்கனின் அரண்மனையை அடைந்த பிராமணன் இறந்த மனைவியை தரையில் கிடத்தி அழுது நின்றான்.

“நான் என்ன செய்வேன்? திருமணம் முடிந்து இரண்டு வருடம் கூட ஆகாத எனது இளம் மனைவியை இந்த வேடன் கொலை செய்துவிட்டான்” என்று கதறினான்.

இதனைக் கேட்டுப் பதறிய வாயிற்காப்பாளர்கள் வேகமாக சென்று மன்னனிடம் நடந்ததை சொன்னார்கள். மன்னனும் நிலைகுலைந்து போனான். வாசல் வந்த வேந்தன், அந்தணனின் அவல நிலையைக் கண்டு மனம் வருந்தினான்.

“அரசே! என் நிலையைப் பாருங்கள்! மனைவிக்காக தண்ணீர் கொண்டு வர அவளைத் தனியாக விட்டுச் சென்றேன். அதற்குள் இந்த வேடன் என் மனைவியைக் கொன்றுவிட்டான். பால்குடி மறக்காத கைக்குழந்தையை வைத்துக்கொண்டு இனி நான் என்ன செய்வேன்?” என்று வேடன் மீது குற்றம் சாட்டினான்.

வேடன் வேந்தனையை பார்த்து நின்றான் “மன்னா! நான் இளைப்பாறுவதற்காகத்தான் மரத்தினடியில் நின்று கொண்டிருந்தேன். நான் கொலை செய்யவில்லை மன்னா! இறந்துகிடக்கும் இந்தப் பெண்ணையும் நான் கவனிக்கவில்லை. கொலை செய்தவனையும் பார்க்கவில்லை. நான் ஒரு பாவமும் அறியாதவன் மன்னவா! இது எனது குல தெய்வத்தின் மீது சத்தியம். எனக்கு தர்மம் நழுவாத நீதியை தாங்கள் தான் தர வேண்டும். அரச பெருமானே!” என்று மன்னனிடம் மண்டியிட்டு கெஞ்சினான் வேடன்.

“நீ சொல்வது உண்மையென்றே வைத்துக்கொள்வோம்! வேடன் என்று உன்னைத்தவிர யாரும் இல்லாத போது, அந்தப் பெண்ணின் உடலில் அம்பு பாய்ந்தது எப்படி? என்று கேட்டனர்.

“அதுதான் மன்னா! எனக்கும் தெரியவி;ல்லை. என்னை நம்புங்கள் மன்னா! நான் குற்றமற்றவன்” என்று மன்றாடினான்.

மன்னன் நம்பவில்லை.

“உண்மையை சொல்லும் வரை இந்த வேடனுக்கு தண்டனைக் கொடுத்துக் கொண்டே இருங்கள்.” என்று மன்னன் ஆணையிட… விதவிதமான தண்டனைகளை கொடுத்தும் வேடன் ஒரே பதிலையே திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். பாண்டிய மன்னனுக்கோ மேலும் குழப்பம் ஏற்பட்டது.

‘இது மனிதனால் தீர்க்கப்படும் பிரச்சனை அல்ல, தெய்வம்தான் இதற்கு தீர்ப்பு சொல்ல வேண்டும்”. என்று கருதிய மன்னன் அந்த அந்தணனிடன் அவனது மனைவிக்கு ஈமக்கடனை செய்யும்படி கூறினான். வேடனை சிறையிலிட்டான். மன்னனின் கட்டளை ஏற்று தனது மனைவிக்கு எல்லாவித ஈமக்காரியங்களையும் செய்துவிட்டு, மீண்டும் அரண்மனைக்கு வந்துவிட்டான்.

பிராமணனை அரண்மனையிலே இருக்க வைத்துவிட்டு சோமசுந்தரப்பெருமானை நாடி திருக்கோவிலுக்கு சென்றான் பாண்டிய மன்னன்.

“பெருமானே! என்னால் அந்தணனின் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை. அந்த பிராமணப் பெண்ணை கொன்றது வேடனா? அல்லது வேறு யாருமோ? தெரியவில்லை. இது விஷயத்தில் எனக்கு சாஸ்திரங்களும் துணை புரியவில்லை. இறைவா! இந்தப் பிரச்சனையைத் தீர்த்து எனக்கு அருள்புரிய வேண்டும்” என்று வணங்கி நின்றான் மன்னன்.

“குலோத்துங்க பாண்டியனே! கேள். இந்நகரின் வெளியில் உள்ள ஒரு வீட்டில் இன்று இரவு ஒரு திருமணம் நடைபெறும். அங்கு உனது குழப்பத்திற்கு விடை கிடைக்கும். மனம் தெளிவடையச் செய்வோம்” என்று அசரீரி குரல் கூறியது. மன்னனும் இறைவனின் விருப்பப்படி நடக்க முடிவெடுத்தான்.

மாலை நேரம் வந்தது.

மன்னன் மாறுவேடம் மேற்க்கொண்டான். தன்னோடு அந்த பிராமணனையும் அழைத்துக் கொண்டு திருமண வீட்டிற்கு சென்று ஒரு ஓரமாக இருவரும் அமர்ந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கு அருகே இருவர் பேசிக் கொண்டிருந்தனர். இருவருமே எமதூதர்கள். பொதுவாக அவர்கள் பேசிக்கொள்வது மனிதர்களுக்கு கேட்காது. கடவுளின் அருளால் அவர்கள் பேசுவது இவர்கள் இருவருக்கு மட்டும் கேட்டது.

“இங்கே மணக்கோலத்தில் அமர்ந்திருக்கும் மணமகன் உயிரை எடுத்துவரும்படி நமது எமதர்மராஜா ஆணையிட்டிருக்கிறார். ஆனால் மணமகனோ நல்ல திடகாத்திரமாக நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறார். நாம் என்ன செய்வது? அவனின் உயிரை எப்படி எடுப்பது?” என்று ஒருவன் கேட்க… மற்றொருவனோ…

இதில் நமக்கென்ன கஷ்டம் இருக்கிறது? ஆரோக்கியமானவர்கள் உயிரை எடுக்கக் கூடாது என்று நமக்கு எதுவும் விதி விதிக்கப்படவில்லையே..! இன்று காலை கூட ஆலமரத்தின் அடியில் படுத்துக்கிடந்த பிராமணப் பெண்ணை என்றோ, யாரே ஒரு வேடனால் எய்யப்பட்டு மரத்தின் கிளைகளில் சிக்கியிருந்த அம்பை கீழே விழ வைத்து, அந்த அம்பை அந்தப் பெண்ணின் மார்பில் பாயச் செய்து உயிரை வாங்கவில்லையா? அதே போல் இப்போதும் செய்துவிடுவோம். வீட்டிற்கு வெளியே ஒரு மாடு நிற்கிறது. தாலி கட்டும் வேளையில் கெட்டி மேளம் சத்தமாக ஒலிக்கும். அந்த சத்தத்தில் மாட்டினை மிரள வைப்போம். அந்த மாட்டின் மூலம் மணமகனின் உயிரை எடுப்போம்” என்று யோசனை சொன்னான்.

மன்னன் பிராமணனைப் பார்த்தான். தங்களின் குழப்பத்துக்கு விடை கிடைத்தது. இருந்தாலும் மேற்கொண்டு என்ன நடக்கிறது? என்று தெரிந்து கொள்வதற்காக அங்கேயே அமர்ந்திருந்தனர்.

திருமண வீடு ஏகப்பட்ட ஆரவாரத்தில் திளைத்துக் கொண்டிருந்தது. வேதியர்கள் மங்கலம் முழங்கினர். மணமகன் கையில் மாங்கல்யம் தரப்பட்டது. மணப்பெண்ணின் கழுத்தில் கட்ட தயாரான போது கெட்டு மேளம் சத்தமாக முழங்கியது. பேரொலி கேட்ட பசுமாடு மிரண்டது. கத்தியபடி திமிறியது. கட்டியிருந்த கயிற்றை அறுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தது. கூடியிருந்த கூட்டனத்தினர் பயந்துபோய் விலகினர்.

மாடு வேகமாக வருவதைப் பார்த்த மணமகன் அதை அடக்குவதற்காக மாடு மீது பாய்ந்தான். மாடு தனது கொம்புகளால் ஆவேசமாக மணமகனை குத்தி தூக்கியெறிந்தது. மணமகன் அந்த இடத்திலேயே பிணமானான். வாழ்த்து முழக்கம் மாறி அழுகை ஓலம் நிறைந்தது. என்ன செய்வது? விதி வென்றது.

தனது மனைவி மரணமடைய வேண்டும் என்பது விதி. அதனால் அவள் இறந்தாள். இதைத் தெரியாமல் குற்றமற்ற அந்த வேடனை பலவாறாக துன்பத்துக்கு உள்ளாக்கியதை நினைத்து பிராமணனும் மன்னனும் வருந்தினர்.

இருவரும் அரண்மனை திரும்பினர். நடந்த எல்லாவற்றையும் மன்னன் மற்றவர்களிடம் கூறினான். பின்னர் மன்னன் அந்த அந்தணரிடம் “நீ வேறொரு பெண்ணை மணந்து கொள்” என்று கூறி நிரம்ப பொருட்களைக் கொடுத்து அனுப்பிவைத்தான்.

சிறையில் இருந்த வேடனை விடுதலை செய்தான். நடந்த தவற்றுக்கு வேடனிடம் மன்னன் மன்னிப்பும் கேட்டான். வேண்டிய செல்வங்களை கொடுத்து வழி அனுப்பி வைத்தான்.

பாண்டிய மன்னன் அதன்பின்னர் திருக்கோவில் சென்று சோமசுந்தரப் பெருமானை வணங்கினான். “எம் பெருமானே! மிகப்பெரும் பழிச்சொல்லுக்கு ஆளாக இருந்தேன். தக்க வேளையில் என்னை வழிநடத்தி நீதி நிலைப்பெறச் செய்தாய்! உன் மகிமையே மகிமை!” என்று கூறி மனம் தொழுதான்.