Header Banner Advertisement

பாம்புக்கு பால் வார்ப்போம்..!


Untitled

print
பொதுவாக உறிஞ்சும் தன்மையுள்ள உயிரினங்களால்தான் நீர் போன்ற திரவ உணவுகளை உறிஞ்சி குடிக்க முடியும். பாம்புக்கு திரவத்தை உறிஞ்சும் அமைப்பு அதன் வாயில் இல்லை. அப்படியிருக்கும் போது நமது பெண்கள் தொடர்ந்து பாம்புக்கு பாலையும் முட்டையையும் படைக்கிறார்களே இது என்னவொரு மடத்தனம் என்று பகுத்தறிவாளர்கள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள்.
இந்த ஆன்மிக நடைமுறைக்குப் பின் ஒரு பாரம்பரிய தத்துவார்த்தம் ஒளிந்திருக்கிறது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி ஏற்படுவதற்கு முன், காடுகளை மனிதன் அழிக்காத அந்த காலத்தில் எங்கு பார்த்தாலும் மரங்களும் புதர்களும் மண்டிக்கிடந்தன. இயற்கை செழித்திருந்த காலம். இந்த இயற்கை சூழல் பாம்புகளுக்கு ஏற்றது. அதனால் பாம்புகளின் எண்ணிக்கை மளமளவென்று பெருகியது.
அன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள்தான். அந்த பாம்புகளை ஒழித்தால்தான் நிம்மதியாக இருக்கமுடியும். ஆனால், உயிரினங்களை கொல்வது அவர்கள் பின்பற்றிய இந்து மதத்தில் பாவமாக கருதப்பட்டது. பாம்புகளையும் கொல்லக்கூடாது. அதன் எண்ணிக்கையையும் குறைக்கவேண்டும். அது எப்படி முடியும்? அப்போதுதான் அவர்கள் எண்ணத்தில் உருவானது பாம்புகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது என்ற யுக்தி.
பாம்புகளின் இனப்பெருக்க காலத்தில் பெண் பாம்பு தன் உடலில் இருந்து ஒருவித வாசனை திரவத்தை வெளிப்படுத்தும். அந்த வாசனை தொலைவில் இருக்கும் ஆண் பாம்புகளுக்கு பாலியல் இச்சையை தோற்றுவிக்கும். உடனே பெண் பாம்பு இருக்கும் இடத்தை வாசனையை வைத்தே கண்டுபிடித்து வந்துவிடும். இப்படிதான் பாம்புகளின் இனப்பெருக்கம் நடக்கிறது.

பெண் பாம்பு வெளிப்படுத்தும் இந்த வாசனை ஆண் பாம்புகளை சென்று சேராமல் பார்த்துக் கொண்டால் பாம்புகளின் உறவு நிகழாது. இனப்பெருக்கமும் கட்டுப்படுத்தப்படும் என்று அன்றைய மக்கள் நினைத்தார்கள். அதற்காக அவர்கள் கடைபிடித்ததுதான் பாலும் முட்டையும். இந்த பாலையும் முட்டையையும் பாம்பு புற்றுகளின் அருகில் வைத்துவிட்டால் அவற்றில் இருந்து வெளிப்படும் வாசனை, பெண் பாம்பு வெளியிடும் வாசனையை விட கூடுதலாக இருந்ததால் பாம்புகளின் எண்ணிக்கை விரைவாக குறைந்தது.

இந்த உண்மையை சொன்னால் யாரும் புற்றுக்கு பாலையும் முட்டையையும் வைக்க மாட்டார்கள். அதனால் அதை ஆன்மிகத்தோடு கலந்து விட்டார்கள். பாம்பை நாகக்கன்னியாகவும், நாகதேவதையாகவும் மாற்றினார்கள். அவர்களுக்கு பாலும் முட்டையும் கொடுத்தால் வேண்டியது கிட்டும் என்றார்கள். நம் பெண்களும் பாம்புக்கு பால் வார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.