Header Banner Advertisement

பிரணாப்பின் நெடிய அரசியல் பாதை.!


www.villangaseithi.com

print
இதுவரை காங்கிரஸ் தலைமையிலான அரசிலும், அக்கட்சியிலும் பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்த பிரணாப், இந்தியாவின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 76 வயதாகும் பிரணாப்பிற்கு  ஆட்சியிலும், அரசியலிலும் 45 ஆண்டுகள் அனுபவம் உள்ளவ ராவார்.
இந்திராவுக்குப் பிறகு ராஜீவ்காந்தி, அவருக்கு பிறகு நரசிம்மராவ், தொடர்ந்து மன்மோகன்சிங் என நான்கு தலைவர்களின் மந்திரிசபையிலும் பிரணாப் முகர்ஜி தனக்கென்று ஒரு நிரந்தர இடத்தைப் பெற்று அரசியலில் அசைக்க முடியாத தலைவராக உயர்ந்தார். எமர்ஜென்சி காலகட்டத்தில் அதிகாரமுள்ள வருவாய்த் துறை இணையமைச்சராகப் பணியாற்றினார்.

ஏற்ற இறக்கங்கள் நிறைந்த அரசியல் வாழ்க்கையை விட்டு விலகி, உயரிய அரசியல் சட்டபதவிக்கு செல்வதன் மூலம் புதிய பயணத்தை துவக்கியுள்ளார். எனவே குடியரசுத்தலைவராகவும் அவரது பணி சிறப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

குடும்பம் :

பிரணாப் முகர்ஜி, 1935 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் மிரதி என்ற கிராமத்தில் பிறந்தார். குலீன் பிராமண இன குடும்பத்தை சேர்ந்தவர். பிரணாப்பின் தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட்சுமி. பிரணாப்பின் தந்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்தவர்.

1952 – 64 வரை காங்கிரஸ் சார்பில் மேற்குவங்க சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். பிரணாப் முகர்ஜி 1957 ஜூலை 13 ஆம் தேதி சுவ்ரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், சர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர். அபிஜித் முகர்ஜி மேற்குவங்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

அரசியல் வாழ்க்கை :

பிரணாப் எம்.ஏ. அரசியல், அறிவியில், எம்.ஏ. வரலாறு ஆகிய பட்டங்களை பெற்றவர். கல்லூரி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அரசியலுக்கு வருவதற்கு முன்னர் வழக்குரைஞர், ஆசிரியர், பத்திரிகை யாளராக பணியாற்றிய அனுபவம் உண்டு. பிரணாப்பின் அரசியல் வாழ்க்கை 1960-ல் தொடங்கியது. மேற்குவங்காள மாநிலத்தின் மங்களா காங்கிரஸில் இணைந்த அவர், குறுகிய காலத்திலேயே அம்மாநிலத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.

1969 ஆம் ஆண்டு முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து பல ஆண்டுகளாக பிரணாப் மாநிலங்களவைக்கு உறுப்பினராகவே இருந்தார். 1969, 1975, 1981, 1993 மற்றும் 1999 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில்தான் முதல் முறையாக மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது மேற்குவங்கத்தின் ஜான்கிபூர் தொகுதியில் போட்டி யிட்டு வென்றார். 2009 ஆம் ஆண்டில் மீண்டும் அதேதொகுதியில் வெற்றி பெற்றாலும், தனக்கு வயதாகவிட்டதால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று பிரணாப் தெரிவித்திருந்தார்.

முக்கிய பொறுப்புகள் வகித்தவர் :

1973 ஆம் ஆண்டு அவரது 39 வயதிலேயே மத்திய தொழில் வளர்ச்சித்துறை இணையமைச்சராக்கி அழகுப் பார்த்தார் இந்திரா. அவரது அமைச்சரவையில் 1982 முதல் 1984 வரை நிதியமைச்சராக பணியாற்றினார். அப்போதுதான் தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கை பிரணாப் முகர்ஜி ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமித்தார்.

1984-ல் பிரிட்டனை சேர்ந்த ஈரோமனி நாளிதழ், பிரணாப்பை உலகின் சிறந்த நிதியமைச்சராக தேர்வு செய்து பாராட்டியது. 1980 முதல் 1985 வரை பிரதமருக்கு அடுத்தப்படியாக அவரது தலைமையில்தான் மத்திய அமைச்சரவை கூட்டங்கள் நடைபெற்றன.

1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி காலத்துக்குப் பின், பிரணாப் பிரதமராக விரும்பினார். ஆனால், அந்த எண்ணம் நிறைவேறவில்லை. இதனால் அதிருப்தி யடைந்து காங்கிரஸில் இருந்து வெளியேறி ராஷ்டிரிய சமாஜ்வாடி காங்கிரஸ் என்ற தனிக் கட்சி தொடங்கினார். பின்னர் ராஜீவ் காந்தியுடன் சமரசம் செய்து கொண்டு தனது கட்சியை மீண்டும் காங்கிரஸில் இணைத்தார்.

அதன் பின்னர் கட்சியிலும், ஆட்சியிலும் அவரது வளர்ச்சி எவராலும் தடுக்க முடியாததாக மாறி போனது. 1978-ல் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க காரியக்கமிட்டி உறுப்பினர் ஆனார். அதே ஆண்டு காங்கிரஸ் பொருளாளராகவும் உயர்ந்தார்.

நிதியமைச்சர் பிரணாப் :

1980-ல் மாநிலங்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் 1987 முதல் 1989 வரை கட்சியின் பொருளாதார ஆலோசனைப் பிரிவின் தலைவராகவும் பணி புரிந்தார். 1991 முதல் 1996 வரை பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது திட்டக்குழுத் துணைத் தலைவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் என இரு முக்கியப் பொறுப்புகளை பிரணாப் வகித்தார்.

பாதுகாப்பு, வர்த்தகத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2004 – 2006 ஆம் ஆண்டுகளில் ராணுவ அமைச்சராகவும், 1995 முதல் 1996 வரை, 2006 முதல் 2009 வரை வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

கடைசியாக 2008 ஆம் ஆண்டில் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து ப.சிதம்பரம் மாற்றப்பட்டபோது பிரணாப் மீண்டும் நிதியமைச்சரானார். அவர் 2012 ஜூன் 15 ஆம் தேதி ஐ.மு.கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் ஜூன் 26 ஆம் தேதி நிதியமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.

சமாதானத் தூதுவர் பிரணாப் :

கடந்த எட்டு ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பிரணாப் முக்கிய பங்காற்றி வந்தார். கூட்டணி கட்சிகளுடன் ஏற்படும் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பது, அரசில் முக்கிய முடிவுகளை எடுப்பது உள்ளிட்ட பணிகளில் அவரது பங்களிப்பு சிறப்பானது. அரசியல் சாசன சட்ட விசயங்களிலும், அரசு நிர்வாகத்திலும் தனித்திறமை உடையவாரக இருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராகவும் பதவி வகித்தார். இதுதவிர காங்கிரஸ் கட்சி அளவிலும் பல உயரிய பொறுப்புகளில் இருந்துள்ளார். மத்திய அரசில் 2 ஆவது இடத்தைப் பிடித்திருந்த அவர், இந்திரா காலத்தில் இருந்தே காங்கிரஸ் தலைமையிலான நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.

நடமாடும் பல்கலைக்கழகம் என்று கூறும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எப்போது கேட்டாலும் நினைவு கூர்ந்து சொல்லக்கூடியவர் பிரணாப் என்று அக்கட்சியினரே வியக்கும் அளவுக்கு ஞாபக சக்தி அதிகமுள்ளவர். வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகம், பிரணாப் முகர்ஜிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து இருக்கிறது.

அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக 5 நூல்களை வெளியிட்டுள்ளார். 1997 ஆம் ஆண்டு சிறந்த நாடாளுமன்றவாதி விருதையும், 2007 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் பிரணாப் முகர்ஜி பெற்றுள்ளார்.